விஜய் ஆட்சி நல்லா இருக்கும் … நல்லாவே இருக்கும் … நம்புங்க!
தமிழக வரலாற்றில் இதுவரை நாம் காணாத புதிய அரசை காண போகிறோம்.
விஜய் தலைமையில் அமையும் இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவே இது ஒரு கூட்டணி அரசு.
எப்போது வேண்டுமானாலும் ஆதரவு வாபஸ் வாங்கப்படும் இன்னும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கூட நீடிப்பது சாத்தியமில்லை அடுத்த தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
என்றெல்லாம் கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யாகவே வாய்ப்பு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சட்டசபைக்கு வராமல் தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் அந்தக் கட்சி எந்த ஒரு குறுக்கு வழியையும் கடைப்பிடிக்க முன் வராது.
அதுபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது.
எனவே அவர்களது சிந்தனையும் இந்த ஆட்சியை கலைப்பதை நோக்கி நகராது.
ஒரு வகையில் விஜய் அவர்களுக்கு இந்த அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பது கூட கவனமாக ஆட்சியை நடத்துவதற்கான வாய்ப்பாகத்தான் அமையும்.
அனுபவமே இல்லாமல் எப்படி சிறப்பாக ஆட்சியை நடத்துவார்கள் திணறி தான் போவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
அதற்காக அமெரிக்காவில் அரசியல் செய்து ஆட்சி அமைத்து அனுபவங்களை பெற்ற பிறகா இங்கு வந்து ஆட்சி அமைக்க முடியும்.
அரசியலையும் அடுத்த கட்ட செயல்பாடுகள் அனைத்தையும் அவர்கள் இங்கே தான் கற்றுக் கொண்டாக வேண்டும்.
இது அவர்களுக்கு பலவீனம் என்று நாம் நினைக்கும் அதே நேரத்தில் இதுதான் அவர்களது ஆகச் சிறந்த பலமாகவும் அமையும்.
ஏனென்றால் பழைய அரசுகளின் அமைச்சரவை செயல்பாடுகளை அப்படியே காப்பி அடிக்காமல் புதிய சிந்தனைகளுடன் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும்போது பல துறைகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.
சினிமாவில் கையை காலை ஆட்டி படம் காண்பித்தவர் அரசியலையும் அமைச்சரவையையும் எப்படி கட்டுப்படுத்துவார் என்றெல்லாம் கேள்விகளும் நிச்சயமாக எழும். திருச்செங்கோடு அருண் ராஜ், காரைக்குடி பிரபு
உள்ளிட்ட திறமையானவர்கள் அமைச்சர்களாக மாறும் போது தங்கள் துறைகளை மேம்படுத்தும் திறனை பெறுவார்கள்.
ஆனால் இதிலும் சில அமைச்சர்களின் திறமை கேள்விக்குறியாகும். அவர்களது செயல்பாடுகள் திருப்தி அளிக்காமல் இருக்கும்போது அமைச்சரவை நிச்சயம் மாற்றியமைக்கப்படும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பழைய அரசாங்கத்தின் தலைமையிடம் இருக்கும் அழுத்தங்கள் புதிய அரசில் இருக்காது.
இது அவர்களை சுதந்திரமாகவும் இன்னும் சிறப்பாகவும் செயல்பபட்டு விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்.
மேலும் தமிழக அரசின் உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்டுகள் அனைத்தையும் முதல்வர் முழுமையாக பரிசீலனை செய்து அதன்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே சமயத்தில் அந்த ரிப்போர்ட்டுகளின் உண்மை தன்மை குறித்து . திறமையான அமைச்சரவை சகாக்களை கொண்டு சுய பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.
ஏனென்றால் கடந்த ஆட்சி காலங்களில் உளவுத்துறை கொடுத்த தவறான ரிப்போர்ட்டுகள் அல்லது தவறாக கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டுகளை நம்பி சில பல செயல்களில் நன்றாகவே கோட்டை விட்டது அரசு.
மிக முக்கியமாக மாநில சுயாட்சியை காப்பதே எங்களது கடமை என்று பழைய அரசுகளின் பல்லவியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வீம்பு காட்டி கொண்டிருக்காமல் தமிழக அரசின் நலனுக்காக இந்த அரசு மத்திய அரசுடன் இணக்கமாகவே செயல்படும் என்று நம்பலாம்.
அதே நேரத்தில் மாநில அரசுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் மத்திய அரசு செய்வதற்கு நிச்சயமாக தயங்கும் ஏனென்றால் விஜய் தலைமையிலான புதிய அரசின் பலம் அவர்கள் நிச்சயமாக உணர்த்திருப்பார்கள்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து பார்க்கும் போது ஆட்சி செயல்பாடுகளில் அண்ணாமலை அவர்களின் ஆலோசனையை நிச்சயமாக விஜய் பெறுவர்.
கொள்கை எதிரி என்று கூறிக்கொண்டு அவர்களுடன் கூடிக் குலாவுவது ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்றெல்லாம் எதிர்தரப்பில் இருந்து ஏக போக வசனங்களும் கூக் குரல்களும் வரும்.
அதற்கெல்லாம் தமிழக அரசுக்கான நிதியை பெறுவதிலும் அரசியல் திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டுவதுமே தக்க பதிலாக அமையும்.
மேலும் தமிழக முதல்வர் விஜயை பொருத்தவரை அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பது பேட்டி கொடுப்பது போன்ற சம்பிரதாயங்கள் இனி இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்லும் திராணி இருக்காது. என்றெல்லாம் எதிர் தரப்பில் வசைபாட வாய்ப்பு உண்டு.
ஆனால்….. பத்திரிகையாளர்களின் லட்சணம் என்ன என்பது பொது மக்களுக்கும் தெரியும். புதிய அரசுக்கும் தெரியும்.
மேலும் மிக முக்கியமாக தேர்தல் அறிக்கைகளில் அவர் அறிவித்த திட்டங்களை எப்படி செயல்படுத்துவார் அதற்கு எவ்வளவு நிதி செலவாகும் தெரியுமா ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பொய்யான தேர்தல் அறிக்கையை கொடுத்து இளைய தலைமுறை மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்து விட்டார் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
நிச்சயமாக 100% உண்மைதான்.
ஆனால் புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதன் பலன்களை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதாக இல்லை.

புதிய அரசுக்கு இருக்கும் சிக்கல் நிச்சயமாக மக்களுக்கு தெரியும். மேலும் இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களையும் அறிவிப்புகளையும் வாரி வழங்குகி இருந்தன.
ஆனால் மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்ததற்கு மிக முக்கிய காரணம். புதிய அரசு அமைந்தவுடன் முதலில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் போதை பழக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டதுதான்.
எனவே தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்துவதற்கு புதிய அமைச்சரவை திட்டங்களை வகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த கால ஆட்சியில் மிக மிக தாமதமாகவே மாதம் ஆயிரம் என்ற திட்டத்தை அமல்படுத்த முன் வந்தார்கள் அதுபோல் இந்த அரசும் ஒவ்வொரு திட்டங்களையும் தாமதமாக சாத்தியக்கூறுகளை எல்லாம் ஆராய்ந்து செயல்படுத்தும்.
ஆனால் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இதை ஒவ்வொன்றாக ஒவ்வொரு சூழ்நிலையிலும் வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதனை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி இப்போதைய அரசுக்கு ஏற்படும்.
மேலும் சட்டசபை நடவடிக்கைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அடிக்கடி வெளி நடப்புகள் செய்யப்படும்.
அதுதான் எதிர்க்கட்சிகளுக்கும் நல்லது.
ஏனென்றால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தரவுகளோடு பதில் அளிக்க இளம் தலைமுறை எம்எல்ஏக்கள்/ அமைச்சர்கள் தயாராகவே இருப்பார்கள்.
மேலும் விஜய் தலைமையில் அமையும் அரசு இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பாக புதிய உள்ளாட்சி தேர்தல் அமையும்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போது ஆளும் கட்சியின் சார்பாக நிற்கும் வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருப்பது அரசுக்கு பலமாகவே அமையும்.
ஆனாலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் பலர் மாற்றுக் கட்சியில் இருந்து வந்து மீண்டும் சம்பாதிக்கும் நோக்கத்தில் கரன்சியைக் காட்டி கட்சியில் சேர்ந்து வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது அவர்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் புதிய அரசுக்கு இருக்கும்.
புதிய ஜனநாயகத்தை அமைத்த விஜய்க்கு ஜனநாயகன் படமே கடைசி படமாக இருக்கும்.
இனிமேல் முதல்வராக ‘நடிக்க முடியாது’ என்பதை அவர் நன்றாகவே உணர்ந்து இருப்பார்.
மொத்தத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு நல்லா இருக்கும், நல்லா இருக்கும், நல்லாவே இருக்கும் என்று நம்புவோம்.
— ராஜ சுரேஷ், திருநெல்வேலி








Comments are closed, but trackbacks and pingbacks are open.