மொத்தமா கஞ்சா வேணுமா…. ராம்ஜிநகர் வாங்க…
மொத்தமா கஞ்சா வேணுமா…. ராம்ஜிநகர் வாங்க…
கடந்த பிப்ரவரி மாதம் ராம்ஜிநகர் பகுதியில் சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ராம்ஜிநகரைச் சேர்ந்த சுசீலா என்ற இருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி ராம்ஜிநகரில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் ராம்ஜிநகர் கடைவீதியில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருப்பத்தூர், பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மாது (வயது 67), அவருடைய மகன் முருகன் (43) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராம்ஜிநகர் பகுதி முழுவதும் தொடர்ச்சியாக நாள் முழுவதும் கஞ்சா கனஜோராக விற்பனை ஆகிறது. இங்கிருந்து தான் திருச்சி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கஞ்சா வாங்குவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் தினமும் வரத் துவங்கி உள்ளது பொதுமக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி திருச்சி பா.ஜ.க. சார்பில் ராம்ஜிநகர் மில்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் குறித்து மணிகண்டம் மண்டல தலைவர் சிவமூர்த்தி கூறுகையில்,
“ராம்ஜிநகர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம். அதற்குள்ளாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழித்து, விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கூறி இருக்கிறோம். இல்லை என்றால் திருச்சி மாநகரில் மிகப்பெரிய அளவில் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும்” என்றார். கஞ்சா விற்பனையாளர்கள் யார்யார் என்பது போலீசுக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் கணக்கு காட்டுவதற்காக யாரோ ஒருவரை கைது செய்து தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் இந்த வியாபாரத்தில் ஈடுபடும் முக்கிய புள்ளிகள் மிகவும் தைரியமாக விற்பனை செய்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. அரசு தான் கஞ்சாவை ஒழிக்க அதீத கவனம் கொள்ள வேண்டும். செய்வார்களா..? எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலீசார் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தி பிஜேபி முக்கிய பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
-நமது நிருபர்