அடுத்து தர்மபுரி மா.செ. யார்..?
அடுத்து தர்மபுரி மா.செ. யார்..?
நடந்த முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது. தற்போது திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய மாவட்டச் செயலாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தர்மபுரி மாவட்ட திமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டமானது திமுக கட்சி நிர்வாகத்தால் இரண்டாக பிரிக்கப்பட்டு தடங்கம் சுப்ரமணி, கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் (தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது) இன்ப சேகரன் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் (பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது) செயலாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதி களிலும் திமுக தோல்வியை தழுவி கட்சி பலவீனமாக இருக்கிறது. அத்துடன் முல்லைவேந்தனை கொண்டு திமுகவை ஒழிக்க அதிமுக பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதனால் தர்மபுரியில் திமுகவை பலப்படுத்த யாரை மா.செ.வாக நியமிப்பது என்பதில் தீவிர சிந்தனையில் இருந்து வருகிறது தலைமை. தர்மபுரியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மா.செ.வாக வர வேண்டும் என அங்குள்ள வன்னிய சமூகத்தினர் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கியதும் அதிமுகவிலிருந்து வெளியேறி அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வந்த பழனியப்பன், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு அமமுகவிலிருந்து வெளியேறி சென்னையில், ஸ்டாலின் தலைமையில் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.
அமமுகவிலிருந்து வந்த பழனியப்பனையே மாவட்டச் செயலாளராக நியமிப்பது என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பழனியப்பன் வெள்ளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரான வன்னியர்கள் ஒன்று சேர்ந்து பழனியப்பனை வரவிடாமல் வன்னியர்களுக்கு வாய்ப்பு பெற தேவையான உள்ளடி வேலைகளை செய்து வருகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், பழனியப்பனுக்கு வாய்ப்பளித்தால் அவருக்கு எதிராக அரசியல் செய்வது கடினம் என்பதால் வன்னிய சமூகத்தினரிடம், வன்னியரான இன்பசேகரனுக்கு ஆதரவாக மறைமுகமாக ‘வன்னிய லாபி’ செய்து வருகிறார். இதற்கான பொருளாதார உதவியும் செய்யத் தயார் எனவும் பச்சை கொடிகாட்டியுள்ளார் அன்பழகன். திமுகவைச் சேர்ந்த மாவட்ட முன்னாள் பொருளாளர் தர்மசெல்வன் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர் அ.மணி உள்ளிட்ட வன்னிய ஆதரவு தலைகள் ஒன்றிணைந்து தர்மபுரி மாவட்ட மா.செ. பதவி வன்னியர்கே வழங்க வேண்டும் என தலைமைக்கு பரிந்துரைத்து பெரும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் அ.மணி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காமல் பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தர்மபுரி மாவட்ட திமுகவினரிடம் மிகவும் பரிச்சயமான தனக்கு மா.செ. வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்பசேகரன், தடங்கம் சுப்ரமணி என இருவருமே கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் பழனியப்பன் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் செலவு செய்துள்ளார் என்றும் தர்மபுரி மாவட்ட உ.பி.க்கள் கூறுகின்றனர்.
திமுக தலைமை தற்போது தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகத்தை ஒன்றாக இணைத்து ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை வழிநடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதைத் தான் தர்மபுரி மாவட்ட திமுக உ.பி.களும் விரும்புகின்றனர்.
மீண்டும் இருவர் தலைமையின் கீழ் கட்சி இயங்கினால் வௌங்காது என்பதால் ஒற்றைத் தலைமையில் கட்சியை வழிநடத்துவதற்குரிய சரியான ஆளை நியமிக்க வேண்டும் என்றும் மாவட்ட உ.பி.க்கள் விரும்புகின்றனர்.
‘நேற்று கட்சிக்குள் நுழைந்தவர்களுக்கு மா.செ. பதவி கொடுப்பதா..’ என ஒருபுறம் விமர்சனம். மற்றொருபுறம், அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கு தலைமை முக்கியத்துவம் கொடுத்ததால் தான் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. அது போல் காலத்திற்கேற்ப, கட்சி வளர்வதற்கு சரியான ஆள் பழனியப்பன் என்றால் அவரை நியமிப்பதில் கட்சித் தலைமை யோசிக்கக் கூடாது என்கிறது உ.பிக்கள் வட்டாரம்.
லீடர்ஷிப் தகுதி கொண்ட பழனியப்பனையே மா.செ.வாக நியமிப்பது என தலைமை முடிவெடுத்துள்ள நிலையில் தர்மபுரியில் நடக்கும் வன்னிய பாலிடிக்ஸ் திமுக தலைமையை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது.