பயணத்துறையில் வேலைவாய்ப்பு… உணவக மேலாண்மைத் தொடர் – 5

0

பயணத்துறையில் வேலைவாய்ப்பு…

நாங்கள் மூன்று வருடம் படித்த படிப்பில் ஆறுமாதம், அதாவது ஒரு செமஸ்டர் முழுவதும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவும் ஹோட்டல் துறை சார்ந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்பொழுது பயிற்சிக்கு செல்வதற்காக ரயிலில் டிக்கெட் எடுக்கச் சென்றேன். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதற்கான கட்டண குறைப்பு படிவம் கல்லூரியில் தந்தார்கள் என்றாலும் பலமுறை சென்று போராட்டம் நடத்திதான் கட்டணத்திற்கான சலுகை பெற்றேன். ஆனால் படித்து முடித்தபின் இன்றைய காலகட்டத்தில் ரயில்வே துறையிலேயே வேலை செய்யும் என் நண்பர்களும் உண்டு. என்னுடன் படித்த மங்களேஸ்வரன் ரயில்வே கேண்டின் மேனஜராக திருச்சியில் பணிபுரிகிறார். அவருக்கு இந்தியா முழுவதும் ரயிலில் செல்ல கட்டணமே கிடையாது. இப்படி ஒரு வாய்ப்பு சிலருக்கு எங்கள் படிப்பால் அமைந்திருக்கிறது.

கப்பலுக்கு சென்று செட்டில் ஆனவர்களை பற்றி கடந்த இதழில் பார்த்தோம். எனது நண்பர்களில் ஜான்ஆரோக்கியராஜ் கப்பலில் சென்று வேலை பார்த்தார், பின்பு பல இடங்களில் வேலை பார்த்தார். இப்பொழுது கனடாவில் மாதாரோட்டி என்ற பெயரில் ஒரு சொந்த உணவகத்தை வைத்துள்ளார். அதுபோல் கப்பலில் பணிபுரிந்த மணப்பாறையை சேர்ந்த கார்த்திகேயன் ஆஸ்திரேலியாவில் இந்தியா கார்டன் என்ற பெயரில் சொந்த உணவகம் வைத்துள்ளார்.  விமானத்துறையிலும் பல வேலை வாய்ப்புகள் காத்திருக் கிறது. காசிராமன் என்பவர் விமானத்துறையில் ஒரு நல்ல வேலையில் பணிபுரிந்து பிறகு மீண்டும் நட்சத்திர விடுதிகளில் பணிபுரிந்து, இப்பொழுது ‘ஆரஞ்சு டைகர்’  என்ற ஹோட்டல் நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை நிர்வகித்து வருகிறார். கப்பலில் வேலை செய்த அண்ணாமலை பிறகு ஆசிரியராகவும் அதன்பின் நட்சத்திர விடுதியில் பணிபுரிந்தும் தற்போது நாகர்கோவிலில் ஒரு நட்சத்திர விடுதியில் பொது மேலாளராவும் உள்ளார். இப்படி உலகம் முழுவதும் பல துறையிலும் வேலை கிடைக்கும் படிப்பாக இது இருக்கிறது.

பயணங்கள் செய்யும் அனைத்து இடங்களிலும் சமையல், பரிமாறுதல், ஹவுஸ்கீப்பிங் போன்ற அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கிறது. விமானத் திற்குள் மட்டுமல்லாது விமான நிலையங்களிலும் Ground staff எனப்படும் துறையிலும் வேலை கிடைக்கிறது. விமான நிலையத்தில் இருக்கும் உணவகங்களிலும் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமானால் கப்பலிலும் விமானத்துறை உணவு தயாரிக்கும் இடத்திலும் பணிபுரிந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படி உலகெங்கும் அனைவருக்கும் சேவை புரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்ப படிப்பின் மூலம் கப்பல், விமானம், ரயில் போன்றவற்றில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிப் பார்த்தோம். இதோடு மட்டுமல்லாமல் இன்னும் எங்கெல்லாம் வேலைகள் இருக்கின்றன என்பதையும் வரும் இதழ்களில் பார்ப்போம்.

-தமிழூர் இரா.கபிலன்

முந்தைய தொடரை வாசிக்க….

உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு  தொடர்- 4

உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.