மலை ரயிலில் ஒலித்த குயில் பாட்டு
மலை ரயிலில் ஒலித்த குயில் பாட்டு
ஊட்டி மலை ரயில் என்பது நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையத்தில் கிளம்பி மலைப் பாதைகள் வழியாக உதகமண்டலம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ஊட்டி மலை ரயிலில் பயணிகள் டிக்கெட் பரிசோதக ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் வள்ளி. பணி ஓய்வு பெற்றவர்.
வள்ளி எனப்படும் அந்த ரயில்வே டிடிஐ பணியில் இருந்த போது தனது வேலை நேரத்தில்… மலைப் பாதையில் ஊர்ந்து செல்லும் மலை ரயிலில் பாடல்கள் பல பாடி பயணிகளை மகிழ்ச்சியாக உணர வைத்து மலை உச்சியில் இறக்கியும், கீழே இறங்கி வருகையிலும் பாடல்கள் பல பாடி பயணிகளை மலையடிவார சமவெளி நிலத்தில் இறக்கிவிடுவதுமாக அவரது பணிக்காலம் பாடிப் பறந்தது. அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
“நான் பிறந்தது கேரளா, பாலக்காடு மாவட்டம், சொரனூர் கிராமம். ரயில்வேயில் வேலை பார்த்து வந்த என் தந்தை நான் ஒன்பதாம் வகுப்பு படித்த போது இறந்து போகிறார். பின்னர் கருணை அடிப்படையில் ரயில்வேயில் எனக்கு வேலை கிடைத்தது.
ரயில்வேயில் டிடியாகப் பணிபுரிய 2011ல் தேர்வு எழுதினேன். அதில் தோல்வி அடைந்தேன். மனம் தளரவில்லை. பின்னர் 2012ல் தேர்வெழுதி டிடிஐ ஆக தேர்ச்சி பெற்றேன். அப்போது கோவை ஜங்சனில் தகவல் மையத்தில் பணி அமர்த்தப்பட்டேன். பின்னர் 2016ல் டிடிஐ ஆக ஊட்டி மலை ரயிலில் பணி வாய்க்கப்பெற்றேன். சமீபத்தில் 2022 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றேன். அந்த ஆறு ஆண்டு கால ரயில்வே பணி வாழ்க்கையினை என்னால் எப்போதும் மறக்க இயலாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார், எடர்லி, ஹில்குரோ, ரன்னிமேடு, குன்னூர், வெலிங்டன், அரவன்காடு, கேத்தி, லவ்டே, உதகமண்டலம் தான் கடைசி ரயில் நிலையம். மேட்டுப்பாளையத்தில் காலை ஏழு மணிக்கு ரயில் கிளம்பும். காலை பனிரெண்டு மணிக்கு உதகமண்டலம் சென்றடையும். அதுபோல அங்கிருந்து மதியம் இரண்டு மணிக்கு ரயில் கிளம்பும். மாலை ஐந்தரை மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும். ஆக ஊட்டி மலை ரயிலில் ஐந்து மணி நேரப் பயணம். இதனைப் பயணிகளுக்கு எவ்விதமாக ஜனரஞ்சகப் படுத்துவது, பயணிகளை எவ்வாறு சந்தோசப்படுத்துவது என்று யோசித்தேன்.
எனக்கு தான் பாடத் தெரியுமே. பள்ளி நாட்களில் இருந்தே சினிமா பாட்டு, ஆன்மிகப் பாடல்கள் பாடுவதில் தீராத ஆர்வம். எப்போது பார்த்தாலும் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பேன். அதனால் பயணிகளின் பயண நேரத்தில் பாட்டுப் பாடினால் என்னவென்று தோன்றியது.
ஊட்டி மலை ரயில் நான்கு கோச்சுகள் மட்டுமே கொண்டதாகும். இடையில் ஒன்பது ஸ்டேசன்கள். ஐந்து மணி நேரப் பயணம். ரயில் கோச்சுகளில் பயணிகள் மத்தியில் பாடத் தொடங்கினேன்.
எனக்கு மலையாளம் தாய்மொழி. என்றாலும் மலையாளத்துடன், தமிழ், இந்தி, தெலுங்கு, படுகர் மொழிப் பாடல்களும் எனக்கு தெரியும் என்பதால் அனைத்து மொழி பாடல்களையும் நான் ரயிலில் பாடுவேன். பயணிகளுக்கு மகிழ்ச்சியாக அந்தப் பயணம் மாறி விடும். நான் பாடிக் கொண்டிருப்பேன்.
இடையில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் “என்னம்மா அதுக்குள்ளார நாங்க எறங்க வேண்டிய ஸ்டேசன் வந்துடுச்சேம்மா” என்று சொல்லிக் கொண்டே இறங்கிப் போவார்கள். அவர்களது அந்த ஆத்ம திருப்தியை விட எனக்குப் பெரியது ஏதுமில்லை” என்றார். ஆறு ஆண்டுகளாக ஊட்டி மலை ரயிலில் வள்ளி எனப்படும் பாடிப் பயணித்த குயில் ஒன்று இப்போது பணி ஓய்வு பெற்று விட்டது.