ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..?

0

ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..?

ஆன்மீக மடங்கள் என்றால், அவற்றுக்கு ஏன் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்? நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்! கணக்கில்லா சொத்துக்கள்? இவர்கள் ஒழுக்க சீலர்களா?  எத்தனையெத்தனை சிவில் மற்றும் கிரிமினல் புகார்கள் இந்த ஆதீனங்கள் மீது உள்ளன? இந்த மடங்களுக்கு நிலஉச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தினால் என்ன?

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்த சமூகம் சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவோ மாற்றங்கள் கண்டன. மன்னராட்சி முடிவுக்கு வந்தது. ஜமீன்தாரி முறைகள் முடிவுக்கு வந்தன. நில உச்சவரம்பு கொண்டு வரப்பட்டன. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஆன்மீக மடங்களுக்கும், கோவில்களுக்கும் நிலஉச்சவரம்பை அமல்படுத்தின.

தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யாத காரணத் தால் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் மடங்களிடம் குத்தகை விவசாயி களாக – சரியாக சொல்வதென்றால் – கொத்தடி மைகளாக உள்ளனர். இந்த மடாதிபதிகள் சொத்துக்களை சேர்ப்பதிலும், சுகபோக வாழ்க்கையிலும் திளைக்கிறார்கள். அதாவது கேள்விக்கு அப்பாற்ப்பட்ட ஆன்மீக அரசர்களாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் சைவ, வைணவ மடங்கள் மட்டும் 56 உள்ளன. இவற்றின் கீழ் 57 கோயில்கள் உள்ளன. மடங்களுக்கும், மடங்கள் சார்ந்த கோயிலுக்குமாக மொத்தம் 4,78,755 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன என்பது அரசே தரும் தகவல்களாகும். உண்மையில் இதற்கும் அதிகமாகக் கூட இருக்கலாம்.  இது தவிர கட்டிடங்கள், காலி இடங்கள், வீட்டுமனைகள் ஏராளமாக உள்ளன.  இப்படி அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவியும் இடங்களில் என்னென்ன அத்துமீறல்கள் நடக்குமோ, அவை அனைத்தும் இங்கேயும் நடக்கின்றன. ஒரு வகையில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை இன்னும் இவர்கள் காப்பாற்றி வருகின் றனர் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நல்லதும் செய்தன ஆதீனங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் சைவ, வைணவ மடங்கள் தமிழை வளர்த்தன. ஓலைச் சுவடிகளை காப்பாற்றி வைத் தன. தமிழ் வித்வான்களை போஷித்தன. தேவாரம், திருவாசகத்தை பதிப்பித்தன. தமிழ் ஆராய்ச்சிக்கு துணை நின்றன. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உ.வே.சாமி நாதய்யர் போன்றவர்களை உருவாக்கியுள்ளன. அன்றைய காலத்தின் தேவையை அவை நிறைவேற்றி உள்ளன.

இன்றைய நிலையில் ஆதீனங்கள்..

ஆனால், இன்றைய சமுதாயத்திற்கு இந்த மடங்களின் தேவை என்ன? இன்றைக்கு அது போல தமிழ் தொண்டு செய்கிறார்களா? பழமையை போற்றி பாதுகாக்கிறார்களா? நம் மரபு சார்ந்த குருகுலக் கல்வி முறையை பேணி பாதுகாக்கிறார்களா? இல்லையே. பணம் கொழிக்கும் கல்வி வியாபாரம் செய்கிறார்கள். சி.பி.எஸ்.சி, மெட்ரிக் கல்வி முறையைத் தான் கற்பிக்கிறார்கள்.  இவர்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கிறவர்களிடம் எட்டு லட்சம், பத்து லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திலாவது இவர்கள் சமூகத்திற்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்களா? ஒரு சாதாரண மனிதனாக நம்முடன் வாழ்ந்து கொண்டே சிறப்பான முறையில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும் சுகிசிவம் அளவுக்காவது இவர்கள் இந்த ஆன்மீகத்திற்கு பயன்படுகிறார்களா? இந்த மடங்களின் மீதுள்ள புகார்களை பட்டியலிட்டால், இவர்களின் யோக்கியதை என்னவென்று நாம் விளங்கி கொள்ள முடியும்.

பழைய பிற்போக்கு தூண்டுதலுக்கு காரணம்…

தருமபுர ஆதினத்தை பொறுத்த அளவில் ஏற்கனவே இருந்த ஆதினம் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பல்லக்கில் பவனி வருவதை முற்றாக தவிர்த்து இருந்தார். தற்போது இங்குள்ள பாஜக பிரமுகர்கள் தூண்டுதலாலும், மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவாலும் திட்டமிட்டு மீண்டும் பழைய பிற்போக்குத் தனங்களுக்கு புத்துயிர் தருகின்றனர். இது ஏதோ தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்துவதாகவே தெரிகிறது! மதுரை ஆதினத்தின் பேச்சுக்களே இதை உறுதிபடுத்துகின்றன.

”மன்னார்குடி ஜீயர், “இதை எதிர்ப்பவர்கள் ரோட்டில் நடமாட முடியாது” என ஆவேசமாகப் பேசுகிறார். மதுரை ஆதீனமோ, ”உயிரே போனாலும் பல்லக்கை தூக்குவேன்” என்கிறார். இது தான் இவர்கள் லட்சணம். ”இவர்கள் ஆன்மீகவாதிகளா, ஆன்மீக தாதாக்களா?” என்பதே மக்களின் கேள்வியாகும்.

கொல்றாங்க… கொல்றாங்க… மறைக்கப்பட்ட பழைய கேஸ்கள்…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதுவதால் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாக பரவலான புகார்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதினம் மீது அந்தப் புகார்கள் நிறையவே உண்டு. இந்த ஆதீனம் மணல் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த குற்றச்சாட்டை வைத்தவரே பாஜக அரசியல் பிரமுகர் தான். திருவாவடுதுறையில் பெரிய ஆதினத்தை இளைய ஆதினம் கொலை செய்ய முயன்றதாக பத்தாண்டுகளுக்கு முன்பு கோர்ட், கேஸ், கைது எல்லாம் நடந்தது. சங்கரமடத்தில் ஜெயேந் திரர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிறைப் பட்டது அனைவருக்கும் தெரியும். தாம்பரம் அகோபில மடத்தின் மீதும் கொலைக் குற்றத்தை அப்படியே அமுக்கி மறைத்து விட்டார்கள்.

14000 கிரவுண்ட் நிலஆக்கிரமிப்பு

இவ்வளவு ஏன்? ‘தன்னை பல்லக்கில் சுமக்க வேண்டும்’ என ஆசைப்படும் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மீது ‘அரசு புறம்போக்கு நிலம் 14,000 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டும் புகார்’  நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஆன்மீகத்தை வளர்க்கிறார்கள் என்றால், இவர்களுக்கு தங்க சிம்மாசனம் எதற்கு? வைரம் பதித்த கிரீடங்கள் எதற்கு? வெள்ளிச் செங்கோல் எதற்கு? சுகபோக வாழ்க்கை எதற்கு? பற்றைத் துறந்தவர்கள் தான் போற்றப்பட வேண்டியவர்களே அன்றி, மனமெங்கும் ஆதிக்கம் குடி கொண்டிருக்கும் இவர்கள் மதிக்கதக்கவர்களாக இருக்க முடியாது. சக மனிதர்களிடம் இருந்து அன்னியப்பட்டு பீடத்தில் அமர்ந்து யாரையும் தொடுவதே தீட்டு என்று சர்வ ஜாக்கிரதையாக வாழும் இவர்கள் எப்படி ஆன்மீகத்தில் தொடர்பு  உள்ளவர்களாக இருக்க முடியும்? அதே சமயம் ஆதீனங்களில் ஞானியாரடிகள், குன்றக்குடி அடிகளார், சகஜானந்தர் போன்ற உன்னதமானவர்களும் இருந்துள்ளனர்.

நாயக்கமன்னர் காலத்தில் இந்த மடங்கள் உருவானதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விவசாயிகளை பிழிந்தெடுக்கும் வகையில் வரிவசூலித்து மன்னர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் கொடுத்து ஆட்சியாளர்களின் ஆதரவை பெற்று, தங்கள் எல்லைக்குள் ராஜபரிபாலனம் செய்தவர்கள் என்பது தான் முக்கியமானது.  வரி கொடுக்க முடியாத விவசாயிகளை தண்டனை மரத்தில் கட்டி வைத்து சவுக்கடி தந்த மடங்களை பற்றி இன்றும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களிடையே பேச்சு நிலவுகிறது.  “என் சிறு பிராயத்தில் இந்த பிரபல மடங்களின் தென்னைமரத் தோட்டங்களில் இருக்கும் தண்டனை மரங்களை நாங்கள் அச்சத்துடன் பார்த்துள்ளோம். இங்கே தோண்டினால் எண்ணற்ற மனித எலும்புக் கூடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது..”  என தஞ்சையை சேர்ந்த ஒரு முதியவர் சொன்னார்.

தருமபுர ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், குன்றக்குடி ஆதினம், திருவையாறு ஆதினம், துழாவூர் ஆதினம், காஞ்சி தொண்டை மண்டல ஞானப்பிரகாசர் ஆதினம், திருவண்ணாமலை ஆதினம்.. இப்படியான சைவ மடங்களில் அந்தந்த மடத்தின் சாதிக்கு உரியவர்கள் மட்டுமே ஆதீனமாக முடியும்.

அதாவது, பெரும்பாலும் சைவ வேளாளர்கள் மற்றும் முதலியார்களே இதில் அதிகம். சங்கர மடத்தில் பார்ப்பனர் மட்டுமே வர முடியும். அதே போல வைணவ மடங்களில் பெரும்பாலும் அந்தந்த பிரிவு பார்ப்பனர்களே வரமுடியும். வேறு பிரிவை சார்ந்த பிராமணர் கூட வர இயலாது. ஒரு வகையில் சாதியக் கட்டுமானத்தையும், ஆதிக்கத்தையும் தாங்கி பிடிக்கும் அமைப்புகளே இவை.  ஆகவே, “ஆதினங்களுக்கு 15 ஏக்கர் நிலஉச்சவரம்பையும், அதிகபட்சம் ரூபாய் 50 கோடி மட்டுமே வைத்துக் கொள்ளலாம்’’ என சட்டம் கொண்டு வர வேண்டும். இவர்களை ஜனநாயகத் தன்மையில் இயங்க வைக்க வேண்டும்.

உடன்கட்டை ஏறுதல், தேவதாசி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை ஆட்சி அதிகார பலத்தில் கையாளப்பட்டு முடிவுகட்டப்பட்டதோ, அவ்வாறே மடாதிபதிகளின் அகந்தைக்கு சான்று பகரும் பல்லக்கு சுமக்கும் பட்டினப் பிரவேச யாத்திரைக்கும் முடிவு கட்ட வேண்டும். 98% சதவிகித மக்களின் விருப்பமும் இதுவே! ‘இதை செய்யும் மனத்திட்பம் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டா?’ என பார்க்க வேண்டும்.

நன்றி –

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.