அங்குசம் பார்வையில் ‘வாரண்ட்’ [வெப் சீரிஸ்]
ஜி-5 ஒரிஜினல் ஓடிடியில் மே.22-ஆம் தேதி முதல்ஸ்ட்ரீமிங் ஆகியுள்ள எட்டு எபிசோடுகள் கொண்ட [ மொத்தம் மூணே முக்கால் மணி நேரம்] இந்த ‘வாரண்ட்’-ஐ சிவன் பிக்சர்ஸ் & எஸ்.ஸ்டுடியோஸ் பேனர்களில் பி.விஷால், பி.எம்.ஆதீஸ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விக்னேஷ் நடராஜன் டைரக்ட் பண்ணியுள்ளார். செம சூப்பர்ஹிட்டான ‘விலங்கு’ வெப் சீரிஸ், சூரியின் ‘மாமன்’ படங்களை டைரக்ட் பண்ணிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த ‘வாரண்ட்’-ல் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். பாலாஜி சக்திவேல், நம்ரிதா, அருள்ஜோதி, சாயாதேவி, பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், காளிவெங்கட், வையாபுரி, ஹலோ கந்தசாமி, மீனா, கெளசல்யா, ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ஏ.ஆர்.அசோக்குமார், இசை : சாம் சி.எஸ், எடிட்டிங்: ஆர்.ராமர், ஆர்ட் டைரக்டர் : அசோக் பிரகதீஸ்வரன், கதை-திரைக்கதை : பிரசாந்த் பாண்டியராஜ், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்]
அரசாங்க வேலைக்காக தனது மகன் கோட்டை கருப்புவை[ பிரசாந்த் பாண்டியராஜ்] போட்டித் தேர்வு எழுத வைக்கிறார் பாலாஜி சக்திவேல். எல்லாத் தேர்வுகளிலும் ஃபெயிலானதால் எஸ்.பி.ஆபீசில் டிரைவராக இருக்கும் தனது மாமா காளிவெங்கட் மூலம் போலீஸ் கான்ஸ்டபிளாகிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே விசாரணைக் கைதி ஒருவன் லாக்கப்பில் மரணமடைகிறான். அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வீரமணி [ அருள்தாஸ்] உட்பட எல்லா போலீஸ்காரர்களும் மேலதிகாரி ஜெயப்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்கள். வழக்கு கோர்ட்டிலும் நடக்கிறது. இந்த குற்ற வழக்கிலிருந்து பிரசாந்த் பாண்டியராஜ் உட்பட அனைவரும் தப்பித்தார்களா? என்பது தான் இந்த ‘வாரண்ட்’.
சாதரண கான்ஸ்டபிள் கோட்டை கருப்புவாக பிரசாந்த் பாண்டியராஜ் கதையின் நாயகனாக வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லமால். போலீஸ் வேலை எப்படி கிடைத்தது என்பதை சக போலீஸ்காரரிடம் சொல்லும் ஃப்ளாஷ்பேக், போலீஸ் வேலையில் உள்ள சிரமங்கள், ரெக்கமெட்ண்டேஷனில் வந்ததால் ஆரம்பத்தில் ஏற்படும் தடுமாற்றம், கைதி ஒருவனை மற்ற போலீஸ்காரர்கள் லாக்கப்பில் மிருகத்தனமாக அடிப்பதைப் பார்த்து பயந்து நடுங்குவது இதையெல்லாம் தனது பருமனான உடல் அமைப்பு, அதற்கேற்ற உடல்மொழி, வெள்ளந்தியான முகம், அப்பாவித்தனமான வசன உச்சரிப்பு இவற்றின் மூலம் கான்ஸ்டபிள் கேரக்டரை கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ்.
நம்ரிதாவுடன் நிச்சயமாகி திருமணம் நின்று போன சோகம், இவற்றுடன் சக போலீஸ்காரர்களின் வெறுப்புப் பேச்சு இவற்றால் வேலையை ராஜினாமா பண்ண நினைக்கும் போது, பக்கத்துவீட்டு வையாபுரியின் மகள் புருஷன் அவளை காட்டுத்தனமாக அடிக்கும் போது அவனை போலீஸ் கெத்துடன் வெளுத்துக்கட்டியதும் ஏற்படும் மனமாற்றம், அவரது அப்பா பாலாஜி சக்திவேல் சொல்லும் குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் கதையைக் கேட்டதும் முகத்தில் மலர்ச்சி, “நமக்கான அடையாளம்கிறது நாமே ஏற்படுத்திக்கிறது தாண்டா கருப்பு. இனிமே கருப்புன்னா ஸ்டேஷனே பயப்படணும்டா” என்ற அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டதும் வரும் தன்னம்பிக்கை முகம் இது எல்லாமே கோட்டை கருப்பு என்ற கான்ஸ்டபிளைக் கம்பீரமாக காட்ட உதவுகின்றன. பாலாஜி சக்திவேல் ரிடையர்டு ஹெட்மாஸ்டர் என்பதால் முகமது அலி கதையைச் சொல்ல வைத்து சபாஷ் பெறுகிறார் விக்னேஷ் நடராஜன். பிரசாந்த் பாண்டியராஜுக்கு இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ‘வாரண்ட்’ டூட்டி போட்ட பிறகு தான் க்ரைம் ஆட்டம் சூடு பிடிக்கிறது.
நர்ஸாக வரும் அருள் ஜோதியுடனான பிரசாந்த் பாண்டியராஜ் காதல், கல்யாணம், பாலாஜி சக்திவேல், அவரது மனைவி ஆகியோரிடம் மீண்டும் துளிர்க்கும் மனமகிழ்ச்சி இதெல்லாம் இந்த க்ரைம் த்ரில்லரில் லைட்டான ஜில்னெஸ்.
இன்ஸ்பெக்டர் வீரமணியாக நம்ம அருள்தாஸ் எப்பவுமே செம கெத்தான பெர்ஃபார்மெர்தான் என்பதை இதிலும் புரூஃப் பண்ணியிருக்கார். எப்பப் பார்த்தாலும் பிரசாந்த் பாண்டியராஜ் மீது எரிந்து விழுவதும், பிரசாந்தின் அம்மாவின் இதய ஆபரேஷனுக்கு உதவி செய்து “அம்மாவைப் பார்த்துக்கடா” என ஆறுதல் சொல்லும் கருண உள்ளமும் சபாஷ் அருள்தாஸ் சகோதரா. லாக்கப் டெத் பழியை பிரசாந்த் பாண்டியராஜ் மீது போட்டுட்டு நாம தப்பிச்சுரலாம் என ஹலோ கந்தசாமி ஐடியா கொடுத்ததும், தான் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு அக்யூஸ்டை அடிச்சு அவனை ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப தனது சக நண்பனான போலீஸ்காரனே தனக்கு உதவாமல் போனதையும் உயிர் பிழைத்த அந்த அக்யூஸ்ட், “ஏன் சார் எல்லா போலீசும் கேவலமா இருக்கீங்க என செருப்பால் அடிச்சமாதிரி கேட்டான்” என்பதை கண்கலங்கியபடி சொல்லிவிட்டு ”என்ன ஆனாலும் சரி கருப்புவைக் காப்பாத்தியே ஆகணும்” என்ற உறுதியை வெளிப்படுத்தும் சீனிலும் அபாரம் அருள்தாஸ்.
40 கி.மீ. ஸ்பீடில் ஆரம்பித்த முதல் எபிசோட், இரண்டாவது எபிசோடில் 60 கி.மீ., மூன்றாவது எபிசோடில் 80 கி.மீ.க்கு வரும் போது நான்காவது எபிசோடில் விபச்சாரி லதா கேரக்டர் [ சாயா தேவி] எண்ட்ரியான பிறகு சடக்குன்னு 35 கி.மீ.ஸ்பீடுக்கு இறங்கிவிடுகிறது. அக்யூஸ்டைப் பிடிக்க என்னதான் பிராஸ்டிடியூட் உதவியை நாடினாலும் ராத்திரியில் போய் பிரசாந்த் பாண்டியராஜ், சாயாதேவியின் வீட்டுக் கதவைத் தட்டுவதெல்லாம் ரொம்பவே ஓவருங்க. அதே சமயம் விபச்சாரிக்கும் போலீசுக்குமிடையே அக்கா-தம்பி உறவை டைரக்டர் விக்னேஷ் நடராஜன் வைத்திருப்பது கவிதை. இது ஒரு ‘மாதிரி’யான கேரக்டர் என்றாலும் நல்ல மாதிரி உணர்வை வெளிப்படுத்தி அசத்திவிட்டார் சாயாதேவி.
உக்கிரமான கோட்டை கருப்பு டைட்டிட்ல் பாடல், இரண்டு லவ் மெலோடி, பேக்ரவுண்ட் ஸ்கோர் இவற்றால் வாரண்டுக்கு க்யாரண்டி தருகிறார் சாம்.சி.எஸ். ஆர்ட் டைரக்டர் பிரகதீஸ்வரனின் போலீஸ் ஸ்டேஷன் செட் அருமை. இரண்டு எபிசோடுகளைத் தவிர, மற்ற ஆறு எபிசோடுகளில் ஷார்ப்பாக சிஸர் போட்டு டெம்போ குறையாமல் பார்த்துக் கொண்ட எடிட்டர் ஆர்.ராமருக்கு சபாஷ் போடலாம்.
க்ளைமாக்ஸில் காக்கி மிருகங்களை சட்டப்படி காப்பாற்றினாலும் சாதாரண மனிதன் ஒருவன் மூலம் “கேவலமான போலீஸ்” என்ற வசன சவுக்கடியால் காக்கிகளைக் கதறவிட்ட டைரக்டர் விக்னேஷ் நடராஜன் பாராட்டுகுரியவர்.
அங்குசம் பார்வையில் ‘வாரண்ட்’ [வெப் சீரிஸ்] 60/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.