புலவர் விடுக்கும் திறந்த மடல்
(புலவர் க.முருகேசன் அவர்கள் பழுத்த திராவிட இயக்கச் சிந்தனையாளர். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக, உரிமை களுக்காக இளம்வயது முதல் இன்று வரை தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெருந்தகையாளர். தன் நண்பரின் மகன் ஒருவர் தாட்கோ கடன் பெறுவதற்கு 1990களில் 10 இலட்சத்திற்குப் பெறுமான தன் நிலத்தை ஈடாக வங்கிக்கு கொடுத்தவர்.
கடன் பெற்ற இளைஞர் தொழிலில் நட்டம் அடைந்துவிட, அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தாட்கோ கடனை இரத்து செய்ய வைத்தார். வங்கியில் இளைஞர் பெற்ற கடனையும் அடைத்து, அவரது வாழ்வில் ஒளியேற்றியவர் புலவர் முருகேசன் என்பது திருவெறும்பூர் வட்டார அண்மைக்கால வரலாறு.
மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி அவர்களுக்கு, வணக்கம்.
திருப்பூர் மாவட்டத் திமுக மகளிர் அணியில் திறம்படப் பணியாற்றி, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு, பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்களை வெற்றிகொண்ட பொழுதில் உங்களை நான் அறிந்துகொண்டேன். முதல்முறை சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் பொறுப்பேற்றமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரியாரிய, அம்பேத்காரியச் சிந்தனைகளை இருவிழிகளாகக் கொண்டு தாங்கள் வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டிருப்பதற்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தங்களின் இருமகன்களில் ஒருவருக்குத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நீர் அருந்தாது உண்ணாநிலை மேற்கொண்டு, தாயகத்தின் விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம் செய்த திலீபன் பெயரைச் சூட்டியுள்ளீர்கள். அடுத்த மகனுக்கு அண்ணா கண்ட சின்னம் என்று இன்றும் நாம் போற்றி கொண்டிருக்கின்ற உதயசூரியன் பெயரைச் சூட்டியுள்ளீர்கள். தங்களின் செம்மாந்த தமிழ்மொழி உணர்வுக்கும், தமிழின உணர்வுக்கும் என் வாழ்த்துகள் என்றும் உரியன.
திராவிடத்தின் அடிப்படை நோக்கம் அடித்தட்டு மக்களின் வளர்ச்சியைக் கொண்டது.
சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலின மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை உயர, அமைச்சர் பொறுப்பில் உள்ள தாங்கள் சட்டங்கள் மூலமும், அரசு ஆணைகள் மூலமும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் சில செய்திகளைத் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பதற்காகவே இந்தத் திறந்த மடலை ‘அங்குசம் செய்தி’ இதழ் வழியாக எழுதுகிறேன். எதிர்வரும் மே திங்களோடு திராவிடத்தின் இருப்பு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையப் போகின்றது. இந்த ஓராண்டில் தங்களின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பல்வேறு சாதனைகளைச் செய்து முடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
உயிர்பெறுமா திராவிட மாடல்?
தற்போது பேசப்படுகின்ற ‘திராவிட மாடல்’ என்பது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காத்து, அம்மக்களை உயர்வுக்கு அழைத்துச் செல்வதாகும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உண்டு, உறையுள் பள்ளிகளும் சீரும் சிறப்பாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழை மாணவர்கள் பலர் இதன் மூலம் கல்வி பெற்றுப் பயனடைந்து வருகின்றனர் என்றால் அது மிகையில்லா உண்மையாகும். இதன் அடிப்படையில் என் விழைவையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
கல்லூரிகளை ஏன் திறக்ககூடாது?
என்னவெனில், ஆதி திராவிடர் நலத்துறை யின் சார்பில் அரசு நிதியில் பள்ளிகள் நடத்தப்படு கின்றபோது, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை ஏன் நடத்தக்கூடாது? என்பதாகும்.
ஜெ. ஆட்சியில் நடந்தது என்ன…
2011ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட் டில், அரக்கோணத்திலும், கடலூரிலும் பல் தொழில்நுட்பக்கல்லூரி என்றழைக்கப்படுகின்ற ‘பாலிடெக்னிக்’ கல்லூரிகளைத் தொடங்கியுள்ளார் என்ற முன்னோடித் தகவலையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்கலைக்கழகங்களை தொடங்கலாமே?
மேலும், அரசு நிதியில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதுபோல், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பிலும் பல்கலைக்கழகங்களை அமைக்கத் தாங்கள் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1500 கோடி ஏன் செலவு செய்யல…
தமிழ்நாடு அரசிற்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசு ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி வழங்கப்படுவதாகவும், அதில் 500 கோடிகள் கூடச் செலவு செய்யப்படாமல், எஞ்சிய 1500 கோடி மீள ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற வழக்கம் கடந்த 10 ஆண்டு காலம் நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஒன்றிய அரசு ஆண்டுதோறும் வழங்கும் 2000 கோடியையும் முறையாகச் செலவு செய்திடத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது மகிழ்ச்சியான செய்தி தான்….
மிக அண்மையில், தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்களுக்குக் கல்வி உதவித்தொகை 50,000லிருந்து ஒரு இலட் சமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். மேலும், உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திலிருந்து 8.0 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்கும் செய்தியும் பாராட்டிற்குரியதாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 300 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்டாலின் செலவுக்கு ரூ.300 கோடி
ஆண்டுதோறும் ஒன்றிய அரசுக்குத் திருப்பியனுப்பும் 1500 கோடியில் 300 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செலவு காட்டியுள்ளமை என்பது சமூகநீதியின் பாற்பட்டது.
வருமான வரம்பை உயர்த்தணும்…
அதுபோலவே உயர்கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோர் வருமான வரம்பை 8.0 இலட்சமாக உயர்த்தி விரைவில் அரசாணை பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஒன்றிய அரசுக்குத் திருப்பி அனுப்பும் தொகையின் அளவு வெகுவாகக் குறையும் வாய்ப்பு ஏற்படுகின்றது அல்லவா?
இது கவலைக்குரிய விஷயம்…
அடுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒரு இலட்சமாக உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்னும் ஆதிதிராவிடர் நலத்துறையால் வெளியிடப்படாமல் உள்ளன என்ற செய்தி கவலை அளிப்பதாக உள்ளது. அந்த விண்ணப்பப் படிவங்களை வெளியிட்டு முனைவர் பட்ட ஆய்வா ளர்கள் உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகையைப் பெற்றிடத் தாங்கள் ஆவண செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
கடனுக்கு சொத்து பிணை ஏன்-?….
ஆதிதிராவிடர் நலத்துறையால் இயக்கப் படும் ‘தாட்கோ’ நிறுவனத்தின் வழியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்குக் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுகிறேன். தாட்கோ கடன் உதவி பெறவேண்டும் என்றால் ஒரு வங்கி கடன் தருவதற்கு ஒப்புதல் தந்தால் தான் தாட்கோ விளிம்புத் தொகையை வழங்குகின்றது. கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கும் வங்கிகள், கடன் கேட்டுச் செல்லும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடம் கடன் பெறும் அளவிற்குச் சொத்து பிணை கேட்கிறது. ஒருவர் 10 இலட்சம் கடன் கேட்கிறார்கள் என்றால் 10 இலட்சத்திற்குப் பெறுமானச் சொத்துகளை வங்கியில் ஒப்படைக்கவேண்டும் என்றால், அந்தச் சொத்து இருந்தால் அவர்கள் ஏன் வங்கியிடம் கடன் கேட்டு அலைய வேண்டும்? இந்நிலையை மாற்றித் தாட்கோ கடன் வழங்குவதில் எளிமையாக நடைமுறைகளைப் பின்பற்றிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசே கொள்முதல் செய்யலாமே…
அடுத்து, கடன் பெறுவர்கள் நடத்தும் நிறுவனங்கள் இலாபகரமாக நடைபெறாமல் நட்டத்தில் நடைபெறுகின்றன. காரணம் பரந்து விரிந்த சந்தை போட்டியில் தாழ்த்தப்பட்ட இளைஞர் பங்குகொண்டு வெற்றிபெறுவது என்பது முயற்கொம்பாகவே உள்ளது. இந்நிலை யில், தாட்கோ கடன் பெற்றவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை அரசு கொள்முதல் செய்துகொண்டால், கடன் வாங்கியவர்கள் தொழிலை ஓரளவுக்கு இலாபகரமாக நடத்த வாய்ப்பாக அமையும். குறிப்பாக ஓட்டுநர் சான்றிதழை வாங்கித் தாட்கோ மூலம் கார் வாங்கியிருக்கிறார்கள் என்றால், அரசு துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர் கார் ஓட்டப் பணியமர்த்தப்பட வேண்டும். இதன் மூலம், கடன் வாங்கியவர்கள் கடனை அடைக்கவும், தாங்கள் வாழ்வுக்கான ஊதியமும் கிடைக்கும் அல்லவா?
தாட்கோ தலைவருக்கு வாழ்த்துக்கள்…
தாட்கோவின் தலைவராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். பொறுப்பேற்ற சில மாதங்களில் ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்குத் தாட்கோ கடன் வழங்குவது தொடர்பாக மாவட்டம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றார் என்ற செய்தி காதில் விழுந்து இனித்துக் கொண்டிக்கிறது. தாட்கோ தலைவர் உ.மதிவாணன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரலாற்றை பதியணும்…
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் பிறந்தநாள் விழாக்கள் மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டாரத் தலைநகரங்களில் நடத்தவேண்டும். ஆதி திராவிடர் மாணவர்களை இவ்விழாக்களில் கலந்துகொள்ளச் செய்து, அவர்களுக்குப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் அடித்தட்டு மக்களின் வாழ்வுக்கு உழைத்த வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆதி திராவிடர் பள்ளிகளில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்த சிறுநூல்களை இலவசமாக வழங்கவேண்டும். காரணம், அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்த அந்தத் தலைவர்களின் வரலாற்றை அறிவதன் வழியாகவே இளைய சமுதாயம் புதிய சிந்தனையைப் பெறமுடியும் என்பதால் இதுபோன்ற அறிவார்ந்த செயல்பாடுகளையும் ஆதிதிராவிடர் நலத்துறை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள மக்கள் உயர்ந்து மேல்நிலைக்கு வரவேண்டும். எல்லாரும் எல்லா வாய்ப்புகளையும் அதிகாரங்களையும் பெற்றிட, ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பில் உள்ள தாங்கள் அயராது உழைக்கவேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உள்ளவுறுதியோடு தாங்கள் இயங்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்.
(அடுத்த மடலில் சந்திப்போம்)