கற்கால மனிதனின் போராட்டங்கள் தான் தற்போதைய நவீன காலத்தின் சாயல்கள். புவியியல் நிலைப்பாடு காலம் காலமாய் கண்டுள்ள மாற்றங்களை உணராமலேயே நான், எனது என்பதில் உறைந்து போகும் மனித மனங்களாலும், நிலையானது எதுவும் இல்லை; சக உயிரை நேசிக்கும் செயல் மறந்து தன்னலம் எண்ணம் தோன்றும் போதும், தன் மீதான அடக்குமுறைக்கு வழி தேடும் விஷயங்களாலும் பழங்களை நோக்கி எழுந்து வரும் வேராக தோன்றுவதே போராட்டம். அத்தகைய போராட்டங்களால் தற்போது தமிழகம் கொதித்துக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றங்களையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி நம்பி ஏமாந்து போன சாமானியர்களில் ஒருவனாக என் பகுதியில் ஓடும் வாய்க்காலை உற்று பார்த்து அமர்ந்திருக்கும் என்னிடம் அந்த வாய்க்கால் பேசிய வார்த்தைகள் இவை… இவற்றை அச்சில் பார்க்கவும் அலசிப் பார்க்கவும் துடித்ததால் உங்களுக்காக இங்கே…என் பெயர் தமிழகத்தில் எங்கோ கேட்ட பெயர் போல தோன்றும், ஆனால் எனது ஊர் எனது பெயரை மக்களோ அடிக்கடி உச்சரிப்பார்கள்…
மாற்றானையும் வாழ்வாங்கு வாழ வைத்தே பழக்கப்பட்ட நானும் இத்தமிழ்நாட்டில் ஒரு சிறு வாய்க்காலாக பயணம் செய்கிறேன். எனது பயணத்தில் அவலமும் மகிழ்ச்சியையும் மாறி மாறி சந்திக்கிறேன். ஏனோ என்னை உற்றுப் பார்த்த உன்னிடம் என் கதை சொல்ல வேண்டும்… ஓ ஓ ஓ அரற்றி அழ வேண்டும் போல் உள்ளது. முதலில் என் தாயிடம் இருந்து தொடங்குகிறேன். சொல்கிறேன் கேள்.
என் தாயின் பெயர் காவிரி.
உலகம் அழியும் காலம் வந்தாலும், சோழ வளநாட்டைத் தன் குழந்தையாய் கருதி வளர்க்கும் அரும் பணியைக் காவிரித் தாய் நிறுத்திக் கொள்ள மாட்டாள் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும்…
வடக்கே உதிக்கும் மாசற்ற வெள்ளி திசை மாறி தெற்கே உதித்தாலும் மலையில் பிறந்து, பரந்து விரிந்து ஓடும் காவிரி பொய்ப்பதில்லை. வளம் சேர்க்கத் தவறுவதில்லை என்று சங்க கால கவிஞர் கடியலூர் உருத்திரகண்ணனாராலும், பல சங்க கால புலவர்கள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் பலராலும் புகழப்பட்டவள்.
வருண பகவானின் பெரும் கொடையாய் அழகிய குடகு மலையில் தலைக்காவேரியாய் பிறந்து எனது சிற்றன்னைகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகியோருடன் மகிழ்வாய் வாழ்ந்து, புகுந்த வீடாம் தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் எனும் தோழிகளை சேர்த்துக் கொண்டு புரண்டு ஓடி தமிழக வயல்களை நெற்களஞ்சியமாக மாற்றிய என் அன்னை காவேரியின் மடியில் தவழ்ந்து வளரும் மகன்களில் ஒருவன் நான்.
சோழ மண்டலத்தில் எத்தனையோ நன்செய், புன்செய் நிலங்களை கடக்கும் என்னை கி.பி.985 லிருந்து கி.பி.1014 வரை கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் மாயனூர் பகுதியிலிருந்து மாமன்ன இராஜராஜ சோழன் அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் துணையுடன் என் தாயிடமிருந்து பிரித்து தன் ஆட்சியில் கீழ் உள்ள மக்கள் பயன் பெற உருவாக்கினான்.
அத்தகைய சிறப்பு பெற்ற என்னை பல பகுதிகளில் அரசனே உடனிருந்து தங்கி, அந்தந்த பகுதி மக்களை உற்சாகப்படுத்தி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் திருமலையிலும், திருஎறும்பூரிலும் உணவு தயாரித்து வேலை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டான்.
என்னை முழுவதும் கட்டமைத்தது இல்லாமல் தன் மனைவியரில் ஒருவரான சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு ஊரை உருவாக்கி மேற்கொண்டு என்னை பராமரிக்கவும் கட்டளையை உருவாக்கினான்.
குளித்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, அணலை, கொடியாலம், குழுமணி, கருப்பூர், முள்ளிக் கருப்பூர், சோமரசம் பேட்டை, நாச்சிக்குறிச்சி, உய்யகொண்டான் பூமாலை, புத்தூர், தென்னூர், பீமநகர், வரகனேரி அரியமங்கலம், பாப்பாகுறிச்சி, காட்டூர், சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்ப்பட்டி, வேலிப்பட்டி, வழியே வந்து ராயமுண்டான்பட்டி ஏரியை முதலில் நிரப்புகிறேன். பிறகு வெண்டையம்பட்டி பேரேரியை நிரப்புகிறேன்.
உலகின் தொன்மையான மக்கள் வசிக்கும் சோழமண்டத்தில், இமயம் வென்ற சோழ அரசனின் பரம்பரையில் வந்த இளவரசனால் இத்தனை ஊர்களுக்கு பயன்படக்கூடிய கால்வாயாக உருமாற்றப்பட்டேன். ஆட்சித் திறத்தாலும் பெற்ற போர் வெற்றிகளாலும் அவனுக்கு கிடைத்த பல பட்டப்பெயர்களில் ஒன்றான உய்யகொண்டான் என்பதனையே எனக்கும் மக்கள் சூட்டினர்.
ஆம்… நான் தான் உய்யக்கொண்டான்…
எனக்கும் மீண்டும் வலி உயிர்போகிறது… உனக்கு நேரமிருந்தால் என்னை பார்க்க அடுத்த வாரம் வா… இந்த திருச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்கிறேன்…
மீண்டும் சந்திப்போம்…