தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ள தடை நீடித்த நிலையில், மாற்று ஏற்பாடாக எம்.சாண்ட் மணல் உற்பத்தியை அரசு ஊக்குவித்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பழமையான மலைகளை கரைத்து விட்டார்கள் என்பதாக சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியிருந்தார், கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு.

குறிப்பாக, 1998 இல் திமுக ஆட்சி காலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அந்தலைமலை; 2004 இல் அதிமுக ஆட்சிகாலத்தில் பெரம்பலூர் கோனேரிப்பாளையம் மலை; 2006 திமுக ஆட்சியில் பெரம்பலூர் பிரம்மரிஷிமலை மற்றும் செங்குணம் மலை; 2021 திமுக ஆட்சியில் மதுரை கொண்டையம்பட்டி குன்று; 2022 இல் திமுக ஆட்சியில் தென்காசியில் கோணமலை மற்றும் கோவை முத்தார் குன்று; 2023 திமுக ஆட்சியில் மதுரை சர்க்கரை பீர் மலை மற்றும் 2024 இல் திமுக ஆட்சியில் திருப்பத்தூர் ஆயர்பேட்டை குன்று ஆகிய மலைகள் அடுத்தடுத்து கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னதாக, மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்திய பி.ஆர்.பழனிச்சாமி சுமார் ரூ1,06,145 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக, பல்வேறு விதமான நெருக்கடிகள் அச்சுறுத்தல்களை மீறி சுமார் 600 பக்கங்களுக்கும் மேலான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.
2001-2006 அதிமுக காலகட்டத்தில் கிரானைட் குவாரிகள் தொடர்பாக 77 குத்தகைகளும்; 2006-2011 திமுக ஆட்சியில் 68 குத்தகைகளும் விடப்பட்டிருக்கும் விவகாரம், உயர்நிலை முதல் கீழ்நிலை வரையில் அரசின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி ஒரு மோசடி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, மதுரை சர்க்கரை பீர் மலைக்கு நேர்ந்த அவலம் கனிமவளக் கொள்ளையின் உச்சம். வரலாற்று ரீதியில் பழமைவாய்ந்த அந்த மலையை கேக் வெட்டுவது போல சரிபாதியாக கூறுபோட்டிருந்தார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே த.வெ.க. அரசியல் கட்சியாக உருவெடுத்திருந்த போதிலும், இதுபோல இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராக எந்த ஒரு கண்டனத்தையும் இதுவரையும் தெரிவித்ததில்லை. அதற்காக எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தியதில்லை. ஆனாலும், இப்போது சட்டசபையில் பேசுகிறார்கள். போகட்டும்.
இதுவரை நடைபெற்ற கனிமவளக்கொள்ளை குறித்து விரிவான விசாரணையும்; இனி இதுபோன்றதொரு கொள்ளை நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் த.வெ.க. அரசின் முன் சவாலாக எழுந்திருக்கிறது. சட்டசபை பேச்சு செயல் வடிவமாக மாற வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. பார்ப்போம், இனி என்ன நடக்கிறதென்று?
தமிழகத்தில் காணாமல் போன மலைகள்! கனிமவள கொள்ளையின் பின்னணி என்ன?
சட்டசபையில் வெளியான அதிர்ச்சி தகவல்
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.