பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் ! மலேசியாவிலிருந்து வந்திறங்கிய வாலிபரை தட்டித்தூக்கிய திருச்சி போலீசார் !
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலர்களாக பழகி வந்த நிலையில், ஆண் நண்பரின் நடத்தை பிடிக்காததால் விலகிச் சென்ற பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவரை, மலேசியாவிலிருந்து கொச்சிக்கு வந்திறங்கிய தருணத்தில் தட்டித்தூக்கியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார்.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட பெண் வயது 23 என்பவர் வேலூர் மாவட்டம், முன்னதாக ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த போது, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் தினேஷ் வயது 31/24, த.பெ. முருகன், காந்தி தெரு, கோட்டு முல்லை, கடலூர் மாவட்டம் என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
பின்னர் மேற்படி தினேஷ் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடந்த 19.02.2024-ம் தேதியன்று அவரது TN 91 AW 4234 என்ற பதிவெண் கொண்ட காரில் வேலூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு குளிர்பானத்தில் ஏதோ மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமுற செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக பல்வேறு கோணங்களில் புகைப்படம் பிடித்து வைத்துக்கொண்டதாக தெரியவருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனையறிந்த பாதிக்கப்பட்ட பெண் மேற்படி தினேஷிடம் அச்செயலை கண்டித்து அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், மேற்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன்னிடம் பேச வற்புறுத்தியும், பேசவில்லையென்றால் தன்னிடம் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாகவும், ஆபாசமாக திட்டியும் கொலை மிரட்டல் விடுததுள்ளார், மேலும் மேற்படி தினேஷ் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு,
உனது மகளை என்னிடம் அனுப்பி வை, நான் உல்லாசமாக இருந்துவிட்டு திருப்பி அனுப்பி வைக்கிறேன் என்றும், இல்லாவிட்டால் உனது மகளை கொலை செய்து விடுவேன் என்றும், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்தையும் நிறுத்திவிடுவேன் என்றும், மிரட்டல் விடுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 05.11.2024-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண். 32/24 U/s 294 (b), 354 (A), 354(C), 354(D), 506(i) IPC r/w 67 IT Act 2006 r/w 4 of TNPHW Act 2002-இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேற்படி எதிரியான தினேஷ் மலேசியா சென்றிருந்தது தெரியவரவே, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார், இ.கா.ப., உத்தரவின் பேரில், மேற்படி எதிரி தினேஷிற்கு லுக்அவுட் (LOC) நோட்டிஸ் கொடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும்,
இந்நிலையில் கடந்த 28.11.2024-ஆம் தேதி அதிகாலை 00.30 மணியளவில் மேற்படி எதிரியான தினேஷ் என்பவர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கியபோது, கொச்சின் விமான நிலைய Immigration- அதிகாரிகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், தனிப்படையினர் மூலம் கைது செய்து, எதிரி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு, விசாரணை மேற்கொண்டு பின்னர், எதிரியானவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.” என்பதாக போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.