வலைப்பேச்சு குழுவினர் தெரிந்தே பொய் சொல்ல இது தான் காரணமா ?
அஜித் – யோகி பாபு – வலைப்பேச்சு விவகாரம் வைரலாகி வருகிறது. வலைப்பேச்சு யு டியுப் சேனலை – அதன் மூவர் குழுவினரை – சமூகவலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பிரபல யூ டியுப் சேனல்கள் பலவற்றிலும்கூட, “வலைப்பேச்சினர் செய்வது ஊடக் அதர்மம்; அவர்கள் திரைத்துறையினரை மிரட்டுகிறார்கள்” என்று பலர் பேசுகிறார்கள்.
நான் பார்த்தவரையில், இவர்கள் தவறவிட்ட அல்லது கடந்து போன சில விசயங்கள் உள்ளன. அந்த முக்கிய விசயங்களை சொல்வதே இந்த எனது பதிவு.
நடிகர் யோகிபாபு ஒரு பேட்டியில், “என்னைப் பத்தி தப்பு தப்பா பேசுறானுங்க.. போன் பண்ணி கேட்டப்ப, ‘கவனிக்க வேண்டியதை கவனிங்க..’னு சொல்றானுங்க..! நான் சிரமப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்… எதுக்காக அவனுங்களுக்கு பணம் கொடுக்கணும்” என்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது வலைப்பேச்சு மூவரணி. அவர்களில், (எழுத்து ரீதியாக நான் மதிப்பதால்) ‘அண்ணன்’ அந்தணன் அவர்களே இரு விசயங்களைச் சொல்கிறார்.
“அவரு (யோகிபாபு) நம்மள சொல்றதாத்தான் இருக்கு” என்று ஒப்புக்கொள்கிறார். அதோடு, “பல வாரங்களுக்கு முன்னால அப்படி பேசியிருக்காரு” என்கிறார். இது குறித்துத்தான் நமது முதல் கேள்வி.
யோகி பாபு பேசிய வீடியோ வெளியான போதே பதில் சொல்லாதது ஏன்..
திருடன்களுக்கு தேள் கொட்டி விட்டது என்பதாகத்தானே எடுத்துக்கொள்ள முடிகிரது..
இத்தனைக்கும், செய்திகளை ( அது, உண்மையோ இல்லையோ) ‘முந்தித் தருகிறோம்’ என்பவர்கள்தானே வலைப்பேச்சுக் குழுவினர்,
அடுத்து..
யோகிபாவுக்கான விளக்கத்தில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள், “ஒரு முறை நாம, ‘படப்பிடிப்பு ஒன்றில் நாயகனின் கையை யோகிபாபு பிடிக்க வேண்டிய சீன். அந்த ஹீரோவோ ‘டோன்ட் டச்’னு சொல்லி அவமானப்படுத்திட்டாரு. அதை நாம சொன்னோம். ஆனா பத்திரிகை (ஊடக) தர்மம் கருதி, சொன்னவர் யாருன்னு நாம பேசலை. அதை நமக்கு சொன்னவரு யோகி பாபுதான்” என்கிறார்.
இதுதான் பத்திரிகை தர்மமா?
என்னை தொடதே என்பது (உண்மையானால்) வன்கொடுமை. இதில் வன்கொடுமை புரிந்தவரின் பெயரைத்தான் சொல்ல வேண்டும்.. பாதிக்கப்பட்டவரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வலைப்பேச்சு குழு அப்போது, “அந்த மாதிரி செஞ்சது ரஜினியா… இல்லே இல்லே.. இவரா.. அட… அவருமில்லே..” என நழுவிப்போனது. (அந்த வீடியோவை இப்போதுதான் பார்த்தேன்.)
அஜித் அப்படி நடந்துகொண்டு இருந்தால் – அதை உண்மை என நம்பிய வலைப்பேச்சுக் குழு – அஜித் பெயரைச் சொல்லி கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம். அதை அவர்கள் ஏன் செய்யவில்லை.
தவிர, அஜீத் அப்படிப்பட்டவர் அல்ல என்பது ஊடகத்துறையினர் அனைவருக்கும் தெரியும்.
இதற்கு நான் நேரடியாக பார்த்த இரு சம்பவங்களைச் சொல்லலாம்.
என் மூத்த சகோதரன் போன்றவர் ( மறைந்த) பத்திரிகையாளர் சந்துரு. பிரபல இதழ்களில் திரைப்பட செய்தியாளராக பணியாற்றியவர்.
அவர், நோயுற்று மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார். உடல் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. மாடியில் வீடு. அவரது உடலை தூக்கிச் செல்லவேண்டும். முதலில் தோள் கொடுத்தவர் – செய்தி அறிந்து பதறி அடித்து அங்கு ஓடிவந்த – அஜித்.
இன்னொரு சம்பவம்…
அஜித் – ஷாலினி திருமணம் நடந்த சில பல நாட்களில், நட்சத்திர ஓட்டலில் சினிமா செய்தியாளர்களுக்கு விருந்து வைத்தார்.
அஜித் – ஷாலினி புதுமணத் தம்பதியினர் அனைவரையும் உபசரித்தனர். அப்போது சர்வர் ஒருவர், தயங்கித் தயங்கி அஜித்திடம் நின்றார். அஜித் என்னவென்று விசாரிக்க… உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார்.
உடனே அங்கு (சாப்பிடாமல் பேசிக்கொண்டு இருந்த) புகைப்படக் கலைஞர் ஒருவரை அழைத்து படம் எடுக்கச் சொன்னார். அதோடு, சர்வரின் முகவரியை புகைப்படக் கலைஞரிடம் கொடுக்கச் சொன்னார். புகைப்படக் கலைஞரிடம் (அவர் மறுத்தும்) பணம் கொடுத்து, “படத்தை அவருக்கு மறக்காம அனுப்புங்க” என்றார்.
இதைவிட முக்கியமான விசயம்.. தன் தோள் மீது அஜித கை போட்டு எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் அந்த பேரர் வீட்டில் இருக்கும்.
இவை இரண்டும் நான் நேரில் பார்த்தவை.
இப்படி சிறந்த மனிதாபிமானியாக இருக்கும் நடிகர் அஜித், “டோன்ட் டச்” என யோகிபாபுவை சொல்லி இருக்கவே மாட்டார். சினிமாவின் அத்தனை உள்ளும் – புறமும் தெரிந்த வலைப்பேச்சுக்குழு… குறிப்பாக அண்ணன் அந்தணன் மற்றும் பிஸ்மிக்கு இது தெரியாதா…
தெரிந்தே ஏன் பொய் சொன்னார்கள்?
தங்களை, யோகிபாபு அம்பலப்படுத்திவிட்டார் என்றவுடன் இப்போது, யோகிபாபுதான் சொன்னார் என்பது உண்மையாக இருக்குமா பிஸ்மி அவர்களே!
தவிர இப்போது, “படப்பிடிப்புக்கு யோகிபாபு சரியா போறதில்ல… அதனால அஜித்தோட அடுத்த படத்துல யோகி பாபு இல்லே… அதனால யோகிபாபு நம்மகிட்ட பொய் சொல்லிட்டாரு” என்கிறது வலைப்பேச்சுக்குழு.
இதெல்லாம்தான் ஊடக தர்மமா வலைப்பேச்சு குழுவினரே..!
யோகிபாபுவுக்கான விளக்க வீடியோவில், “அவருக்கு நடிக்கவே வராது” என்கிறார் வலைப்பேச்சுக் குழுவில் பிஸ்மி. அதே குழுவில், தம்பி சக்திவேல், “மண்டேலா படத்தில் அவரு சிறப்பா நடிச்சதை புகழ்ந்தோமே” என்கிறார்.
ஏன் இந்த முரண்….?
தவிர, “யோகிபாபு ஒரு நாளைக்கு நடிக்க 25 லட்ச ரூபாய் வாங்குறாரு. அதில ஐந்து லட்சம்தான் கணக்குல காட்டுறாரு. மத்ததெல்லாம் பிளாக் மணிதான்” என்று தேசப்பற்றோடு சொல்கிறது வலைப்பேச்சு குழு.
அடடா.. என்ன ஒரு தேசப்பற்று…! ஆமாம்.. சரியாக வருமானவரி செலுத்துவதும்… செலுத்தாதவர்களை அம்பலப்படுத்துவம் தேசப்பற்றுதானே! வருமானவரி பணத்தில்தானே, அரசின் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!
ஆனால் வலைப்பேச்சு குழுவின் நோக்கம் இதுதானா என்கிற கேள்வி எழுகிறதே.
“எங்களை அம்பலப்படுத்தினால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம்.. சிக்கல் கொடுப்போம்” என்று பிற நட்சத்திரங்களுக்கு மிரட்டல் விடுப்பது போலத்தானே இருக்கிறது!
கடைசியில் தரை லோக்கலுக்கு இறங்கி, “சத்தியம் பண்ணு வா” என்பதெல்லாம் என்னதான் ஊடக தர்மமோ…
தவிர, “யோகிபாபுவை வச்சு படம் எடுத்த நிறைய டைரக்டருங்க அவரைப்பத்தி புகார் சொல்லி இருக்காங்க. ஆனா, ‘இப்ப என் பெயரை சொல்லிடாதீங்க.. டப்பிங் முடிஞ்சோன சொல்லுங்க..’ என்று கூறியதாக வலைப்பேச்சினர் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள் பல, டப்பிங் முடிந்து வெளியாகி இருக்குமே.. இப்போது சொல்லலாமே!
இதைவிட கொடுமை, யோகிபாபுவை, “ஈத்தரை, குப்பை…” என்றெல்லாம் ஏதுவது!
காமெடியனான அறிகமுகமான யோகிபாபு எப்போதே ஹீரோ ஆகிட்டார். பத்திரிகையாளர் போர்வையில் செய்லாபடும் வலம் வரும் வலைப்பேச்சினர், காமெடி வில்லன்களாக அம்பலப்பட்டு விட்டனர்.
அற்புத எழுத்துக்குச் சொந்தக்காரர், சுவையாக பேசுபவர் (எழுத்து ரீதியாக என்) அண்ணன் அந்தணன் உள்ளிட்டோரை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது.
யோகி பாபு பிரபல நடிகர் என்பது இருக்கட்டும்.. எவரையும் பொதுவில், ஈத்தரை, குப்பை என பேசுவது என்ன நாகரீகம்?
“இவர்களுக்கு எல்லாம் ஏன் பதில் அளிக்க வேண்டும்” என யோகிபாபு, நாகரீகமாக பதிவிட்ட ட்விட்கள் மதிக்கத்தக்கவை. உழைப்பால் உயர்ந்தவரின் பதில் – பதிலடி – இப்படி நாகரீகமாகத்தான் இருக்கும்.
ஆனால் ஒரு நடிகரா இழிவாக பேசிய வலைப்பேச்சினருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
நடிகையரை இழிவாகப் பேசிய நடிகர்களுக்கே கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், இந்த விசயத்திலும் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
வலைப்பேச்சினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்தக் கோணத்தில் எவரும் பேசவில்லை என்பதால், எனது இந்த பதிவு.
– டி.வி.சோமு ( திரைத்துறை பற்றியும் நாகரீகமாக எழுதும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தும் செய்தியாளன்)