5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!

தமிழகத்தில், வழக்கமாக ஐ.டி. ரெய்டு பற்றி கேள்விபட்டிருக்கிறோம். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் ரெய்டையும் பார்த்துவிட்டோம். அமலாக்கத்துறை, ஆளுநரின் அரசியல் அக்கப்போர்களுக்கு மத்தியில், சத்தமே இல்லாமல் ”தனிவகை” ரெய்டை நடத்தி முடித்திருக்கிறார்கள், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.

அங்குசம் இதழ்..

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் (Neomax properties pvt ltd)  என்ற நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள அதன் கிளை நிறுவனங்களான, Garlando properties pvt ltd, Transco properties pvt ltd, Tridas properties pvt ltd, Glowmax properties pvt ltd மற்றும் இதுபோன்ற நியோமேக்ஸ் நிறுவனத்தை சார்ந்த பல்வேறு பெயர்களைக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் புகார்களின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண்: 3/2023 U/s. 406, 420, r/w 34 IPC & 5 Of TNPID Act படி வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக்குறிப்பு.

நியோமேக்ஸ் துணை நிறுவனங்கள்
நியோமேக்ஸ் துணை நிறுவனங்கள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலுள்ள நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனத்தின் அலுவலகங்கள், முகவர்கள், இயக்குநர்களின் வீடுகள், அவர்களது அலுவலகங்களில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் ஆய்வாளர்கள் இளவேணி, மலர்விழி, ராஜா நளாயினி, கமர் நிஷா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் இந்த ரெய்டை நடத்தியிருக்கின்றனர். இந்த ரெய்டு நடவடிக்கையில், 1000 கிராம் தங்கமும்; 13 கிலோ வெள்ளியும்; 9 லட்சம் ரூபாய் ரொக்கமும்; 62 அசல் பத்திரங்களும்; பல லட்சம் மதிப்புள்ள கார்களும், இரு சக்கர வாகனங்களும் பிடிபட்டுள்ளதாக, பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார், பொருளாதாரக் குற்றப் பிரிவின் ஐ.ஜி-யான ஆசியம்மாள்.

ஐ.ஜி ஆசியம்மாள்
ஐ.ஜி ஆசியம்மாள்

இதனைத்தொடர்ந்து, ‘நியோ மேக்ஸ்’ உட்பட அதன் 5-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் ரெய்டு” மட்டுமல்ல, ”நியோமேக்ஸ்” என்ற வார்த்தையும் தமிழகத்தில் பரவலாக புழங்கப்படாத வார்த்தைகளில் ஒன்றுதான். சுருக்கமாக சொல்வதென்றால், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கட்டி ஏமாந்து, போட்ட பணத்தைத் திரும்பப்பெற நாயலைச்சல் அலைந்து கொண்டிருக்கும் ஆருத்ரா, பி.ஏ.சி.எல்., வேலூர் ஐ.எஃப்.எஸ்., போன்ற மோசடி நிதி நிறுவனங்களின் வரிசையில் புதுவரவு, நியோமேக்ஸ்.

”நியோமேக்ஸ்” பற்றி புரிந்துகொள்ள நிறைய மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. எதற்கும், ”சதுரங்க வேட்டை” திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். அது போதுமானது. அரசுக்கு சொந்தமான இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் கிளை மேலாளராக பணியாற்றிவந்த பத்மநாபன் என்பவர், விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு, தன்னுடன் நண்பர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் நியோமேக்ஸ். அவர் கம்பெனி ஆரம்பித்த சமயத்தில், திருச்சி ஏர்போர்ட் அருகே “மொராய் சிட்டி” என்ற குடியிருப்புத்திட்டம் அப்பகுதியில் போதுமான நிலத்தடி நீர் இல்லை என்ற காரணத்தால் போனியாகாமல் கிடக்க, பத்மநாதன் வகையறா “மொராய் சிட்டி” குடியிருப்பு திட்டத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதன்பின்னர், அந்த பகுதியில் பள்ளி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக, விற்காமல் கிடந்த வீட்டுமனைகள் விற்றுத்தீர்ந்தன.

இதையும் படிங்க: 

* விஸ்வரூபம் எடுக்கும்  நியோமேக்ஸ் நிதிநிறுவன மீதான புகார் !    ஆப்பிள் மில்லட் வீரசக்தி  அலுவலகங்களில் சோதனை ! 

* ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

 

”பாயிண்ட்”-ஐ பிடித்த பத்மநாபன், இதேபாணியில் தனது கூட்டாளிகளையும் தாண்டி, பொதுமக்களையும் பங்குதாரர்களாக்கி தனது வியாபாரத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி யுள்ளார். நியோமேக்ஸ் என்ற ஒற்றை நிறுவனமாக அல்லாமல், அதன் கீழ் குடைபோல் அறுபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் துணைநிறுவனங்களுள் முக்கியமானது, 2019 இல் பதிவு செய்யப்பட்ட சென்ட்ரியோ. தற்போது, இந்த சென்ட்ரியோ நிறுவனத்தை முன்னிறுத்திதான் முதலீட்டை ஈர்த்து வருகிறது, நியோமேக்ஸ். ஒவ்வொரு மாவட்டத்திலும், நகர்ப்பகுதி யிலிருந்து அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தூரத்தில் ஏக்கர் கணக்கில் மொத்தமாக விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவார்களாம். பின்னர், அதனை வீட்டு மனையாக மாற்றி அதிக விலைக்கு விற்பார்களாம். அதோடு மட்டுமின்றி, அந்த இடத்தைச் சுற்றி, பள்ளி, சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை, ஹோட்டல் என ஒரு குட்டி நகரத்தையே கட்டியமைப்பார்களாம்.

வாடிக்கையாளர்களுக்கு, முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, மூன்று முதல் நான்காண்டு முடிவில், பணமாகவோ வீட்டுமனையாகவோ திருப்பிக் கொடுப்பார்களாம் நிலையற்ற பங்குச் சந்தையில் பணத்தை போட வில்லை. நிலத்தில்தானே முதலீடு செய்கிறோம். இன்றைக்கு இல்லையென்றாலும், என்றைக்கும் அது நிலைக்கும்” என்ற கருத்தை முதலில் விதைத்து விடுகிறார்கள். அடுத்து, ”ஹோட்டல், ரிசார்ட்ஸ், கார்மெண்ட்ஸ், லாஜிஸ்டிக்ஸ், பெட்ரோல் பங்க், தீம்பார்க், பர்னிச்சர், சூப்பர் மார்க்கெட், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருந்துக் கம்பெனி, சாப்ட்வேர் கம்பெனி, சோலார் சிஸ்டம், ஹெலிகாப்டர் சர்வீஸ் என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் முதலீடு செய்கிறோம் என்கிறார்கள். மிக முக்கியமாக அந்தக் கம்பெனிகளையே நாம்தான் நடத்தப்போகிறோம். என்ன ஒன்னு, சொல்றதவிட, ஒரு வருசம் முன்னபின்ன ஆகலாம். மத்தபடி, நட்டத்திற்கு வாய்ப்பே இல்லை” யென்று அடித்துவிடுகிறார்கள்.

அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார்.. இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் மருமகனே நம்ம நியோமேக்ஸ்ல இருக்கிறாரு..னு நம்பிக்கை விதைப்பதில் இருந்து, நட்சத்திர ஹோட்டல்களில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு, நிறுவனத்தின் இயக்குநர்கள் விதம் விதமான கார்களில் வந்திறங்குவது வரையில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். ”ரெண்டு நாளைக்கு பிக்னிக் மாதிரி ஏ.சி. வண்டியில கூட்டிட்டு போனாங்க. குற்றாலத்துல அவங்க கட்டிட்டு இருக்கிறதா சொல்லி ஒரு ரிசார்ட்ஸ்ல தங்க வச்சாங்க. அப்புறம் ஒரு ஓய்ஞ்சிபோன காலேஜிக்கு கூட்டிட்டு போயிட்டு இதை இப்ப நாம வாங்கிட்டோம்னாங்க. அப்படியே, மொட்ட மாடிக்கு கூட்டிட்டு போயிட்டு சுத்தி இருக்க அம்புட்டு இடமும் நம்மோடது தான்னாங்கஞ் போற வழியில அங்கங்க கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நடக்கிற இடத்த காட்டி, இது நம்ம பிராஜெக்ட்தான். இங்க அது வருது, அது வருதுனு சொன்னாங்க. அவங்க காட்டுற பிரமிப்பிலேயே சொக்கிபோற அளவுக்கு செஞ்சிடறாங்க..” என்கிறார், ’பிக்னிக்’ சென்று வந்தவர்களுள் ஒருவர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அன்று ஜாலியாக, பிக்னிக் சென்றுவந்தவர்கள் எல்லாம், இன்று வயிற்றில் புளி கறைய கலங்கி நிற்கிறார்கள். அப்போதும் அசராத நியோமேக்ஸ், வாடிக்கை யாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீசு ஒன்றை இணையத்தில் உலவவிட்டிருக்கிறது. அதில், ”உலகையே புரட்டிப்போட்ட கோவிட் காலத்தில் ஏற்பட்ட வணிக சுணக்கம், கடந்த 14 வருடங்களில் ரியல் எஸ்டேட், வணிக நிறுவனங்கள் சந்தித்த எண்ணற்ற பலமுனைத் தாக்குதல்களையும் கடந்து ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட முடியுமா?” என கேள்வியெழுப்பும் நியோமேக்ஸ் நிறுவனம், “1500-க்கும் அதிகமான பிளாட்கள் கொண்ட கேடட் கம்யூனிட்டி பிராஜெக்ட்டுகள் முறையான அனுமதி பெறும் தருவாயில் இருக்கிறது. 15,000 -க்கும் மேற்பட்ட அப்ரூவ்டு பிளாட்டுகள் விற்பணைக்காக தயார் நிலையில் இருக்கிறது.” ஆகவே, ”பணம் போச்சேனு கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் சொல்கிறது.
அதில், 5 தொலைபேசி எண்களை பதிவிட்டிருந்தார்கள். அனைவரும் சொல்லி வைத்தாற்போல, ”நான் புதுசு. பத்துநாள்தான் ஆகுது. அந்த நம்பருக்கு பண்ணுங்கனு” ஒருவர் மாற்றி ஒருவர் கைகாட்டினார்கள். கடைசியாக பேசிய, மதுரை ராமகிருஷ்ணனும், “நீங்க கேட்க வேண்டியத கேளுங்க. நான் ஆபீசில் கேட்டு சொல்கிறேன்.” என்றே, நழுவினார்.

”14 ஆண்டுகளாக, சக்சஸ்புல்லா போயிட்டு இருக்கிற ஒரு நேர்மையான நிறுவனம்தான் நியோமேக்ஸ். நீங்கள்தான் (ஊடகங்கள்) மோசடி நிறுவனம் அப்படி இப்படினு செய்தி போட்டு பெரிசு பன்றீங்க..”னு தன்னோட வருத்தத்தை வேறு பதிவு செய்தார், அவர். நியோமேக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனமா? இல்லை மோசடி நிறுவனமா? என்பதை ”ஆராய்ச்சி” செய்வதற்கு அவசியமே இல்லாத அளவிற்கு, வெளிப்படையான அவர்களது நடவடிக்கைகளே போதுமான ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன. முதலீட்டு தொகையைப் பெறுவதிலேயே, இவர்களது சட்டவிரோதம் தொடங்கிவிடுகிறது. ”அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை கொடுக் காமல் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை கொடுத்து அதற்கு பணத்தைப் பிரித்து அனுப்புமாறு தெரிவித்தனர். அதன்படி ரூபாய் 15 லட்சத்தை 20 நபர்களுக்கு அனுப்பினேன்.” என்கிறார், இராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்.

ஆப்பிள் மில்லட் வீரசக்தி
ஆப்பிள் மில்லட் வீரசக்தி

இந்த தொகைக்கும்கூட, நியோமேக்ஸ் பெயரிலோ, சென்ட்ரியோ பெயரிலோ ரசீது கொடுக்காமல், SANSPOLO PROPERTY PVT LTD, SAFRO REALTY PVT LTD என்ற பெயரில் ரசீது கொடுத்திருக்கிறார்கள். “நியோமேக்ஸ் உள்ளிட்ட 68 போலி நிறுவனங்களை தொடங்கி, ஏராளமான பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றுள்ளனர். இதன்மூலம் மொத்தம் ரூ 5000 கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இந்த நிதி நிறுவனங்களுக்கு முறையாக செபியிடம் அனுமதி பெறவில்லை. மனுதாரர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பெயரிலும், 10 நிறுவனங்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று, நியோமேக்ஸ் இயக்குநர்கள் முன்ஜாமின் கேட்டு மதுரை நீதிமன்றக்கிளையில் தொடுத்த வழக்கின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார், அரசு வழக்கறிஞர் அன்புநிதி.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

நியோமேக்ஸ் என்பது நிதிநிறுவனம் அல்ல. அது ஒரு ”ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட்” என புது விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்காக CEBI யிடம் அனுமதியெல்லாம் பெற வேண்டிய அவசியம் இல்லையாம். DTCP (Directorate of Town City Planning), RERA (Real Estate Regulatory Authority)  அங்கீகாரம் இருந்தால் மட்டும் போதுமாம். அடுத்து, காலேஜ் நடத்துகிறோம், ஹாஸ்பிடல் நடத்துகிறோம், ஹோட்டல் நடத்துறோம், ஏரோபிளேன் ஓட்டுறோம்னு சொல்றதோட சரி. அதுக்கு ஆதாரங்களோ, வரவு – செலவு கணக்குகளோ வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படுவதுமில்லை. வாடிக்கை யாளர்கள் அதைக் கேட்டதாகவும் தெரியவில்லை. அடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் சார்பாக செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும், பொதுவில் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்படுவதில்லை. மாறாக, அந்தந்த மாவட்டத்தின் இயக்குநர்களின் பெயர்களில், அவர்களது மனைவி உள்ளிட்ட பினாமிகளின் பெயர்களில் அதுவும் அவர்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டதைப் போலத் தான் காட்டியிருக்கிறார்கள்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

மீடியா கிளப்பும் பீதி என்கிறார், நியோமேக்ஸ் ராமகிருஷ்ணன். தஞ்சாவூர் அருளானந்தா நகரைச் சேர்ந்த அமீர் சையது, பரமக்குடியைச் சேர்ந்த கிளமென்சியா, டோனி, இராமநாதபுரத்தை சேர்ந்த வினோத்குமார், ராஜ்குமார், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கீஸ்வரன் என நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பலரும் போலீசில் நேரடியாக ஆதாரங்களோடு புகார் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டியிருக்கிறார்கள். “நியோமேக்ஸ் மோசடி நிறுவனம் அல்ல. அதன் வளர்ச்சியை பொறுக்க மாட்டாமல் செய்யும் சதி வேலை. நான் பத்து வருஷமா இருக்கேன். பதினஞ்சி வருஷமா இருக்கேன். எனக்கெல்லாம் பிரச்சினை இல்லை.” என்று மெயில் ஐ.டி.க்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கருத்துச்சொல்லும் நியோமேக்ஸ் ஆசாமிகள் எவரும் வெளியில் வருவதுமில்லை. இதோ ஆதாரங்கள் என்று இதுவரை ஒரு துரும்பைக்கூட நம் கண்ணில் காட்டியதுமில்லை. “என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 31 நபர்களை ரூ.50,000 முதல் ரூ.30 லட்சம் வரை மொத்தம் 4 கோடி ரூபாயை நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தேன். பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு என் வீட்டை முற்றுகையிடுகின்றனர். நானும், என்னுடைய கணவரும், எங்களுடைய மாதச் சம்பளத்தைப் பணம் கட்டியவர்களுக்குக் கொடுத்துச் சமாளித்துவருகிறோம்.” என கண்ணீர் வடிக்கிறார் இராமநாதபுரத்தைச் சேர்ந்த டோனி.

விருதுநகரைச் சேர்ந்த தியாகராஜன், மணிவண்ணன், நெல்லையைச் சேர்ந்த பழனிசாமி, தூத்துக்குடி நாராயணசாமி, செல்லம்மாள், சிவகங்கையைச் சேர்ந்த அசோக் மேத்தா பஞ்சாய், சார்லஸ், மதுரையைச் சேர்ந்த கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியம், திருச்சியைச் சேர்ந்த வீரசக்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, மதுரை உயர்நீதிமன்றக் கிளை.

நியோமேக்ஸ் மட்டுமல்ல, தமிழகத்தில் 21 வகையான மோசடி நிதி நிறுவனங்களில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் முதலீடு செய்து, ஸ்வாகா ஆன தொகை மட்டும் ரூ.14,168 கோடி. 68-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைத் தொடங்கி நியோமேக்ஸ் மோசடி செய்திருக்கும் தொகை 5000 கோடி. மிகப்பெரிய மோசடி நிறுவனமாக சொல்லப்பட்ட ஆருத்ராவையும் அலேக்காக தூக்கி சாப்பிட்டிருக்கிறது, நியோமேக்ஸ்.

”இந்த நிறுவனம் குறித்த தனிப்பட்ட நபர்கள் புகார் சொன்னால், உடனே அவர் களுக்கு பணம் தந்து வாயை மூடும் வேலையை இந்த நிறுவனம் செய்துவந்தது. இனி அப்படி செய்யாமல், மக்கள் தைரியமாக முன்வந்து நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கலாம்.” என்கிறார், ஐ.ஜி.ஆசியம்மாள்.

புகாருக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, 0452-&2642161 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

– வே.தினகரன், ஷாகுல்.

 

தொடர்புடைய வீடியோ பதிவுகள் :

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.