யார் இந்த அருண் ஐபிஎஸ்…
அருண் IPS — 1000-க்கும் மேற்பட்ட பொய்யான குண்டாஸ் வழக்குகளைப் போட்டிருக்கிறார்!!!
அருண் IPS — 500 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.
அருண் IPS — திமுக ஆதரவாளர்.
அருண் IPS — அராஜகமான ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமித்திருக்கிறார்கள்.
அருண் IPS — அசாமுக்கு மாற்றப்பட வேண்டியவரை யாரோ நிர்பந்தித்து இப்படி செய்துவிட்டார்கள்.
இதையெல்லாம் யார் சொல்கிறார்கள் என்றால்,
பல யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அருண் IPS-ஐப் பொறுத்தவரை, எனது மனதில் பட்டவரை அவர் கொஞ்சம் நேர்மையான, வெளிப்படையாகச் செயல்படும் அதிகாரியாகவே தெரிகிறார்….
நீதிமன்றம் குறை கூறும் அந்த ரியல் எஸ்டேட் குண்டாஸ் விவகாரத்தில், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படும் சுதீஷின் சொத்தையே பெயர் மாற்றி மோசடி செய்து விற்க முயல்கிறார்கள் என்றால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டியது தவறல்ல.
குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால், அவர்கள் எளிதாக ஜாமினில் வெளியே வந்துவிடுவார்கள். அதிலும், சந்தோஷ் சர்மா போன்ற பணபலமுள்ளவர்கள் வலுவான வழக்கறிஞர்களை வைத்து எளிதாக வெளியே வந்து மீண்டும் மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
சவுக்கு சங்கர் கூறியது போல, “இரண்டு அபார்ட்மெண்ட்கள் கேட்டதால் குண்டாஸ் போட்டார்கள்” என்பதில் உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அடுத்து, 500 கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சொல்கிறீர்கள். அந்த 500 கோடி எங்கே இருக்கிறது என்று தெரியாதா?
அதற்கான தகவலை அமலாக்கத் துறைக்கு கொடுக்கலாம். இப்போதும் கொடுக்கலாம். அமலாக்கத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது? ஆதாரமின்றி பெரிய குற்றச்சாட்டுகளை அள்ளி வீசக் கூடாது.
அடுத்து, திமுக ஆதரவு ஆள் என்று சொல்கிறீர்கள். பெரும்பாலான IAS, IPS அதிகாரிகள் எந்த ஆட்சி வந்தாலும் அதற்கேற்ப பணியாற்றுவார்கள். அரசியல்வாதிகள் அவர்களை இடமாற்றம் செய்வதும், பதவி வழங்குவதும் அவர்களது கையில்தான் இருப்பதால், ஒரு அளவுக்கு அவர்கள் தாக்கம் செலுத்துவது இயல்புதான்.
அருண் அவர்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு ஆட்சிக் காலங்களிலும் ரவுடிகளை கடுமையாக கையாளும் அணுகுமுறையில்தான் செயல்பட்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த பல துறை சார்ந்தவர்கள் கூறுவதும் இதுதான் — “அருண் சார் மிகவும் நேர்மையானவர்; வேகமாக செயல்படுவார்.”
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி; காவல் துறை நிர்வாகம் தொடர்பான கல்வியும் பெற்றவர். ஆட்சி மாறினாலும், அருண் சார் போன்ற அதிகாரிகள் மக்களுக்கு தேவை. இப்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை பதவி சிலர் கூறுவது போல “டம்மி போஸ்ட்” என்றாலும், அந்தப் பொறுப்பிலும் அவரால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்பட முடியும்.
அதிகாரிகள், ஆட்சி மாறும்போது அந்தக் கட்சிக்கும் இந்தக் கட்சிக்கும் சம்பந்தமில்லாதவர்கள் போலவே தங்களது பணியைத் தொடர்வார்கள். ஒரு கரைவேட்டியை கழற்றி மற்றொரு கரைவேட்டியை அணிவது போல அரசியல் மாறலாம்; ஆனால் அதிகாரிகளின் நிர்வாகப் பொறுப்பு தொடர்கிறது.
நாளையே திமுகவைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய சூழல் வந்தால், அருண் சார் தயக்கமின்றி செயல்படக்கூடிய தைரியமான அதிகாரி என்று நான் நம்புகிறேன். ஆகவே, “அராஜகமான ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிவிட்டார்கள்” என்று ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நேரத்தில் அவருக்கு இத்தகைய பொறுப்பை வழங்கிய முடிவு மிகவும் புத்திசாலித்தனமானதும், சமயோசிதமானதுமாகத் தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால், தமிழ்நாட்டில் ஊழலைக் குறைத்து, நல்ல நிர்வாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அருண் சார் போன்ற அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
சவுக்கு சங்கர் சொல்வதையெல்லாம் முழுமையாக நம்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு காலத்தில் அண்ணாமலை பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டார் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். “ஆதாரத்தோடு பேசுகிறேன்” என்று கூறினாலும், சில நேரங்களில் ஒரு பகுதி தகவலை வைத்துக்கொண்டு மிகைப்படுத்தப்பட்ட முடிவுகள் கூறப்படுகின்றன.
உதாரணமாக, 500 கோடி ரூபாய் திருட்டு நடந்தது என்று சொன்னால், அந்தப் பணம் எங்கே உள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும் அல்லவா? சவுக்கு மட்டும் அல்ல; புகழ் பெற வேண்டும் என்பதற்காக பல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களும் இதேபோன்ற அணுகுமுறையில்தான் பேசுகிறார்கள். இதனால், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்களின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது.
**அருண் சார், வாழ்த்துக்கள்!**
பேசுவோர் பேசட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் உங்கள் பணி சிறக்கட்டும்! வாழ்த்துகள்…
*- செந்தில் சின்னசாமி*.







Comments are closed, but trackbacks and pingbacks are open.