மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !
திருச்சிராப்பள்ளி மாநகரத்தை கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுடன் இணைக்கும் உயிர்நாடியாகத் திகழ்கிறது தேசிய நெடுஞ்சாலை 81. இந்த நெடுஞ்சாலை வரலாற்றுச் சிறப்புமிக்க பல நூற்றாண்டுகள் பழமையான பல கோயில்களை இணைக்கும் முக்கிய பாதையாகவும் விளங்குகிறது.
ஆனால், தற்போதைய நிலையில் இந்தச் சாலை அந்த மாவட்டங்களை இணைக்கிறதோ இல்லையோ, மனித உயிர்களை எமலோகத்துடன் மிக வேகமாக இணைத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 65 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் மட்டும் மாதத்திற்குச் சுமார் 6 கோடி ரூபாய் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலைகளைப் பராமரிக்காமலும், விரிவாக்கம் செய்யாமலும், மக்களின் உயிரைப் பறிக்கும் இந்த நெடுஞ்சாலைத் துறைக்கு எதற்கு இந்தப் பணம் என்ற சரமாரி கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
நெடுஞ்சாலையா? மரணச்சாலையா?
குறிப்பாக, பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரையிலான முதல் 12 கிலோமீட்டர் சாலைப் பகுதி, வெறும் தார்ச்சாலை அல்ல; அது ரத்த வெறி பிடித்த ஒரு மரணப் பொறி என்று சொன்னால் அது மிகையாகாது. தினமும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் இச்சாலையில், உள்கட்டமைப்பு என்ற ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.
அசுர வேகத்தில் வரும் இரு பெரும் வாகனங்கள் எதிரெதிரே முட்டிக்கொள்ள வரும்போது, பாவம் அந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையோரப் பள்ளங்களில் பாய்ந்து தஞ்சம் அடைய வேண்டிய கொடூர நிலை அன்றாடம் நீடிக்கிறது. சராசரியாக, இந்தச் சாலையில் வருடத்திற்கு சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் ஆவர்.
விபத்துகளா? அதிகாரிகளின் படுகொலைகளா?
இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் ‘விபத்து’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் ‘அதிகாரப்பூர்வ கொலைகள்’ என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதற்குச் சான்றாகப் பல சம்பவங்கள் நெஞ்சை உலுக்குகின்றன.
பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கே இல்லை: பெட்டவாய்த்தலையில் காவல் துறை ஆய்வாளர் ஒருவரே இச்சாலையின் கோர முகத்திற்குப் பலியானார். அதேபோல் கடியா குறிச்சியில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் (RDO) ஒருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
திருப்பராய்த்துறையின் ரத்த சரித்திரம்: திருப்பராய்த்துறை பகுதியில் மட்டும் இதுவரை சாலை விபத்துகளால் பலியானவர்கள் மற்றும் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஐக் கடந்துவிட்டது. கடந்த 1990 ஆம் ஆண்டு அங்கு நடந்த பயங்கர விபத்தின் வடுக்கள் இன்றும் அப்பகுதி மக்களின் மனதை உலுக்கிக் கொண்டிருக்க, திருப்பராய்த்துறை பேருந்து நிலையம் இன்று மீண்டும் ஒரு பெரும் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது.
இந்த ஒட்டுமொத்த மரணப் பகுதிக்கும் நடுவே, விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களைத் தங்களின் சுறுசுறுப்பான பணியால் ஓரளவாவது காப்பாற்றி வருவது ஜீயபுரம் காவல் துறை மட்டுமே என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.
11 ஆண்டுகால அரசு அலட்சியம்
இந்த விவகாரத்தின் உச்சக்கட்ட கொடுமையே அரசு காட்டும் அலட்சியம் தான். இந்தச் சாலைப் பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டிலேயே திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி மற்றும் பெட்டவாய்த்தலை இடையே சுமார் 12 கி.மீ தொலைவிற்கு அனைத்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணத்திலிருந்து இழப்பீடாகவும் வழங்கப்பட்டுவிட்டது. பல கோடி ரூபாய் கொடுத்து அரசு வாங்கிய நிலங்கள் அனைத்தும் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரமாக மாறியுள்ளன.
எம்பியின் அதிரடி தலையீடு
தற்போது இச்சாலையின் அவலநிலை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
திருச்சி மற்றும் கரூர் இடையே ஆறு வழி பசுமைச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது. இருப்பினும், இப்பகுதியில் ஏராளமான வாய்க்கால்கள் மற்றும் ஆறுகள் பாய்வதோடு, பரந்த அளவில் விவசாயம் செய்யப்படுவதால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக இத்திட்டம் நடைமுறைச் சிரமங்களையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும் என எம்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பசுமைச் சாலைத் திட்டத்திற்கு முன்பாக, உயிரிழப்பு விபத்துக்களைக் குறைப்பதற்காக, 2015ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாகப் பயன்படுத்தி, விபத்துப் பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் குறைந்தபட்சம் நான்கு வழிகளாகவாவது அகலப்படுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் தற்போதைய ஒப்பந்த நிறுவனம், சாலை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கான சலுகைக் காலத்தை ஜனவரி 2038 வரை கொண்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள எம்பி துரை வைகோ, இந்த நெடுஞ்சாலையின் பொது முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு , பாதசாரிகள் கடக்கும் பாதைகள், வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் கூடுதல் விளக்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை விரைந்து அமைக்க மத்திய அரசின் மேலான தலையீட்டைக் கோரியுள்ளார்.
எம்பி அவர்களின் தலையிட்டுக்குப் பிறகு தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை தனது சிறப்பு நில அளவையர்களை வைத்து பெருகமணி, சிறுகமணி, காவல்காரபாளையம், பெட்டவாய்த்தலை போன்ற பகுதிகளில் தனது இடங்களை அளந்து அத்துணிக்கும் பணிகளை துவங்கியுள்ளார்கள். நெடுஞ்சாலைத்துறை எப்பொழுதும் போலே இந்த பணியை அங்கணமே விட்டுவிடாமல் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
— தங்கராஜ், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.