தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது சரியானதா?
இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் – 05
மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெற முடியாமல் சாத்தியமற்று போனது ஏன் என்பது குறித்து கடந்த தொடரில் பார்த்தோம்.
மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறாவிட்டால் தனியாக அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் வேறு வழியின்றி “உதயசூரியன்” சின்னத்தில்தான் போட்டியிட முடியும். இதற்கு தனியாக எதற்கு கட்சி நடத்தி நமது உழைப்பு, பொருளாதாரம் அனைத்திற்கும் மேலாக “மனிதவளம் (HR Value)” பொன்றவற்றை காலத்திற்கும் செலவழிக்க வேண்டும்?
இப்படி இருக்கும் 7% ஓட்டிற்கு ஏழெட்டு கட்சிகள் எதற்கு? ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் எத்தனை சீட்டுகள் வாங்கலாம், எங்கெங்கு வாங்கலாம், செலவுக்கு என்ன செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து சாதாரண முஸ்லிம் மக்களை விட்டுவிட்டனர். அவர்களிடம் முஸ்லிம்களுக்கு தேவையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். இதன் விளைவு நமது இஸ்லாமியச் சமூக மக்கள் குறிப்பாக பெண்கள் எந்த அளவு கலாச்சார சீரழிவுக்கு ஆட்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மஸ்ஜிதுல் ஹரமைப் பார்த்து, மஸ்ஜிதுன் நபவியைப் பார்த்து, மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பார்த்து, நம்பெருமானார் ரசூஸ் (ஸல்.) அவர்கள் ரௌலாவைப் பார்த்து பூரிப்பும் புளகாங்கிதமும் அடையவேண்டிய பெண்கள் கேவலம் எந்த ஒரு சுய ஒழுக்கமும் இல்லாத கூத்தாடியைப் பார்க்க இஸ்லாம் கூறிய மஹர்ரத்தை விடுத்து, பெண்மையின் உயிரோட்டமான “ஹயா”வை (நாணம்) விடுத்து கும்பலுடன் கும்பலாக மொட்டை வெயிலில் காத்திருந்து கூத்தாடியைப் பார்த்து குதூகலித்து அதை சமூகவலைத்தளங்களில் பெருமையுடன் பகிரும் கேவலமான மனநிலைக்குச் சென்று விட்டார்கள். நவூதுபில்லாஹ்.

மது எவ்வகையிலும் ஹராம் என இஸ்லாம் தடுத்துள்ளது. இது தெரிந்தும் “கள்”ளுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டு அதை பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் இழிநிலைக்கு போய்விட்டனர் இஸ்லாமியப் பெண்கள். திருமணத்திற்கு என்று மஹர், வலிமா உட்பட சட்டங்களை வகுத்துள்ளது இஸ்லாம். இதைப்பற்றி எல்லாம் சிறிதும் சிந்தனையின்றி இணையேற்பு விழா என்று இஸ்லாத்தை விட்டு பலர் குறிப்பாக பெண்கள் வெளியேறிக்கொண்டு உள்ளனர். இது இஸ்லாத்தை பற்றி விளங்கிக்கொள்ள முயற்சிக்காத அவர்கள் தவறு மட்டுமல்ல, அவர்களிடம் எல்லாம் போய் முறையான இஸ்லாத்தையும் அதற்குத் தேவையான அரசியல் விழிப்புணர்வையும் கொண்டு சேர்க்காத நம்மீதும் குறிப்பாக இஸ்லாமிய அரசியல் கட்சித்தலைவர்கள் மீதான பொறுப்பாகும். இதுபற்றிய கேள்விகளுக்கு நிரந்தரமான மறுமையில் படைத்தவனின் கேள்விக்கு நம்மிடம் பதில் உண்டா?

அதேபோல், பழனிபாபாவை அமீராகக்கொண்டு பல தசாப்தங்கள் அரசியல் செய்த அனுபவசாலிக்கு தற்போதைய அரசியல் அமீர் ஒரு கூத்தாடி என்றாலே நெஞ்சடைக்கிறது. படைத்த எல்லாம் வல்ல இறைவன்தான் எல்லாவற்றிற்கும் விளக்கம் தர போதுமானவன்.
அதேபோல் நமது இஸ்லாமிய சமூகத்தை முன்னிலைப்படுத்தி மட்டும் அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. நவாஸ்கனியோ, புரபசர் ஜவாஹிருல்லாவோ, அப்துஸ் ஸமதோ வெறும் இஸ்லாமியர்கள் வாக்கை மட்டும் வாங்கி வெற்றிபெறவில்லை. அனைத்து சமூக மக்களின் வாக்கினையும் பெற்றுதான் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது என்பது இஸ்லாம் கூறிய சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது. இது மிகவும் ஆழமான உளவியல் விளக்கம் கொண்டது. இதைப்பற்றி விளக்கம் இப்பதிவுக்கு தேவையில்லை என நினைக்கிறேன். எனவே நாம் நமது சகோதர சமய அரசியலுடன் இணைந்து பயணிப்பதே இஸ்லாம் காட்டிய மற்றும் ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.
தொடரும் …
– H.உபைதுல்லாஹ்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.