குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, சிறார் எழுத்தாளர் என்ற தனித்துவமான அடையாளத்தோடு சிறார் உலகில் வலம் வரும் எழுத்தாளர் முனைவர் தேவி நாச்சியப்பனிடம் உரையாடினோம்.
1. சிறார் இலக்கியத்தைத் தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?
எங்கள் அன்புத் தந்தையார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாடல்கள், கதைகள் கேட்டு வளர்ந்தேன். குழந்தை எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைக் கேட்டும் படிக்கத் தெரிந்த பின் படித்தும் வளர்ந்ததால் குழந்தை இலக்கியச் சூழல், என்னைக் குழந்தை எழுத்தாளராக்கியது.
2.தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?
நான் தமிழில் இளங்கலை, முதுகலை (B.A.,M.A.), கல்வியியலில் இளங்கலை, முதுகலை ( B.Ed.,M.Ed.) , குழந்தை இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பின்னர் முதுகலைத் தமிழாசிரியராகவும் மொத்தம் இருபத்து ஒன்பதரை ஆண்டுகள் பணியாற்றினேன். 2019 ல் பணிநிறைவு செய்தேன். என் கணவர் நாச்சியப்பனுக்கும் இலக்கிய ஈடுபாடு அதிகம்; என் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமானவர்.
3.தங்களின் சிறார் இலக்கியப் படைப்புகள் குறித்து …
நான் எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த காலத்தில் எங்கள் தந்தையார், எங்கள் வீட்டில் கவிமணி குழந்தைகள் சங்கத்தைத் தொடங்கினார்கள். என்னை அமைப்பாளராக இருந்து நடத்தச் சொன்னார்கள். அந்தச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்கும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் கவிதை எழுதினேன்; பட்டிமன்றத்தில் பேசுவதற்கு எழுதினேன். அப்பா திருத்தம் செய்து கொடுத்தார்கள். இதுதான் குழந்தை இலக்கியத்தில் நான் எடுத்து வைத்த முதல் அடி.
பிறகு தொடர்ந்து கோகுலத்தில் வெளிநாட்டுக் குட்டிக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதினேன். தொடர்ந்து நிறையக் கதைகள் எழுதினேன். பட்டிமன்றம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, சிறுவர் இலக்கியக் கட்டுரைகள் எனப் பல படைப்புகள் நூலாக வெளி வந்துள்ளன. மழலையருக்காக வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்துகளில் சிறிய கதை நூல்களும் எழுதியுள்ளேன்.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு “குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்” என்பதும் நூல் வடிவம் பெற்றது. இதுவரை மொத்தம் 33 நூல்கள் வெளிவந்துள்ளன.

4.கடந்த காலச் சிறார் இலக்கியத்திற்கும் தற்காலச் சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாகத் தாங்கள் கருதுவது?
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை. இன்றும் அப்படி எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். தற்காலச் சிறார் இலக்கியம், பல புதுமையாகவும் மாற்றி யோசிக்கும் வகையிலும் அமைந்திருப்பது சிறப்பு. குழந்தைகள் உலகமே தனி என்பதால், குழந்தை மனநிலையில் இருந்து எழுதுவதே சிறப்பு. அறிவியல் சிறுகதைகளை இன்று சிலர் சிறப்பாக எழுதுவது பாராட்டுக்குரியது.
ஆனால், அதே சமயம் சிறுவர்களைக் குழப்பும் விதமாகத் தெளிவில்லாத சில படைப்புகள் வேதனை தருகின்றன. சிலர் வன்முறை, தேவையற்ற தகவல்களைச் சிறுவர்களிடம் திணிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும், மனிதர்கள் செய்வதையெல்லாம் விலங்குகளின் மேல் ஏற்றிக் கூறுவதும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பழங்கதைகள், புராணங்களை மாற்றி எழுதி அதையே வரலாற்றுச் சாதனையாக நினைப்பதும் வருத்தமளிக்கிறது.தற்காலச் சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு பெற்றோர்களும், கல்விக் கூடங்களும் செய்ய வேண்டியவை?
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்பதுடன் பண்பும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி!” என்பதைச் சிறுவர்கள் உணரும் வகையில் பெற்றோர்களின் செயல் அமைய வேண்டும்.
பெற்றோர்கள் ‘வாசிக்க வேண்டும்’ என்று சொன்னால், குழந்தைகள் வாசிக்கத் தொடங்கமாட்டார்கள். ‘போலச்செய்தல்’ பழக்கமுள்ளவர்கள் குழந்தைகள். பெற்றோர் படித்தால் அவர்களும் படிப்பர். நல்ல நல்ல நூல்களை வாங்கித் தாம் படித்தபின் சிறுவர்கள் வாசிக்கக் கொடுக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கோவில் திருவிழா போல புத்தகத் திருவிழா, நூலகங்களுக்குக் குழந்தைகளைக் கூட்டிச் சென்று ஆர்வமூட்ட வேண்டும்.
பள்ளியில் நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசளிக்க வேண்டும். அந்த மாணவர்களைக் கொண்டு நூல் விமர்சனம், வாசிப்பு தரும் மகிழ்ச்சி பற்றிப் பகிர்ந்து கொள்ளச் செய்யலாம். மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.
ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் இயந்திரங்களாக இல்லாமல், தம் வாசித்த நூல்களைப் பற்றி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். வாரம் ஒரு முறையாவது சிறந்த நூல்களை வகுப்பறையில் காண்பித்து அது பற்றிக் கூறி அறிமுகப்படுத்த வேண்டும். 40 மாணவர்களில் 10 பேரை வாசிக்க வைத்தாலும் அது பெரும் வெற்றியே. ஆங்காங்கே சிறுவர் மன்றங்கள் அமைத்துக் குழந்தைகள் பல நற்செயல்களை மேற்கொள்ள வழி காட்ட வேண்டும்.
நேர்காணல் : கார்த்திகா கவின்குமார்







Comments are closed, but trackbacks and pingbacks are open.