அமோகமாய் அரங்கேறுகிறது, இடைத்தேர்தலுக்கான கபட நாடகம்!
ஆரவாரக் கடலின் அலைகளின் நடுவே பலரின் மூச்சு அடங்கி போனது
யாரும் பொறுப்பேற்காத அந்தச் சம்பவம்,
அன்று வெறும் செய்தியாகிப் போனது!
காத்திருக்க வைத்து காலம் கடத்திவிட்டு,
காணொளியில் கண்ணீர் துடைக்கும் புதிய விந்தை!
இறந்தவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்வதைத் தானே
இத்தனை காலமாய் நாமும் கண்டோம்?
இங்கு இறந்தவர் குடும்பமே தேடி வந்து
ஆறுதல் வாங்கிச் செல்லும் ஏகாதிபத்தியம்!
சினிமா மோகத்தினால் உயிரை விட்டவர்களுக்கு,
அரசு வேலை எனும் அரசியல் தூண்டில்!
சொந்தமாய் நிறுவனங்கள் சிறப்பாய் இயங்கையில்,
அரசுப் பணியை அள்ளித் தருகிறது கொடைக்குணம்
படித்து முடித்து பல்லாயிரம் இளைஞர்கள்
தெருவில் காத்து நிற்கையில்,
சுயநலப் பலிக்கு அரசுப் பணி நியமனம்!
அமோகமாய் அரங்கேறுகிறது,
இடைத்தேர்தலுக்கான கபட நாடகம்!
— சுடர்மதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.