ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸ் தரைத்தளத்திலுள்ள கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கவிஞர் வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கவிஞர் புதுகை ஆதீரா தலைமையேற்றார். கவிஞர் சஞ்சீவி மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்’ எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.
நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் என்.குமார் பேசும்போது, “வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் கவிதையிருக்கிறது. அவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கே அது வசப்படும். அதிலும் ஹைக்கூ என்பது மிகவும் நுட்பமான பார்வையை உடையது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட ஹைக்கூ இருக்கும். அதை ரசித்து எழுதும்போது, அது வாசகர் மனதில் தாக்கத்தை உருவாக்கும்.
கவிஞர் ரகுநாத் மிகவும் செறிவாகவும் அழகாகவும் ஹைக்கூ கவிதைகளைஎழுதியிருக்கிறார். நிச்சயம் இந்த நூலிலுள்ள கவிதைகள் வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். கவிஞர் எழுதியிருக்கும் பல கவிதைகளை வாசிக்கையில் நமக்கு வேறொரு புதிய கோணம் கிடைக்கிறது. உரையும் நடையுமாக இருக்கும் வாழ்க்கையைக் கவிதையாக்குகிறது ஹைக்கூ. அந்த ஹைக்கூவை எழுதும் ஆற்றல் சிலருக்கே வாய்க்கிறது” என்றார்.
நிகழ்வில், ’ஹைக்கூ முற்றம்’ மின்னிதழைக் காவல்துறை அதிகாரி மணி சண்முகம் ஐபிஎஸ்., வெளியிட, முனைவர் ஆதிரா முல்லை பெற்றுக்கொண்டார். படக்கவிதைப் போட்டிக்கான படங்களைக் கவிஞர் நிமோஷினி வெளியிட்டார். பின்னர் நடைபெற்ற ஹைக்கூ வாசிப்பரங்கில் கவிஞர்கள் பலரும் ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர்.
விழாவில், கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், இயக்குநர் ஆர்.சுப்ரமணிய பாரதி, ந.வேலாயுதம், தெ.சு.கவுதமன், ஞால.ரவிச்சந்திரன், மு.மலையமான் திருமுடிக்காரி, ப்ரியா வெங்கடேசன், முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, கவிஞர் மு.முருகேஷ் நன்றி கூறினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.