விஜயகுமாரி IPS ! போலீசிலிருந்து பிரியா விடை !
விஜயகுமாரி IPS !
குரூப் 1 மூலம் தேர்வாகி பெண் ஐபிஎஸ் அதிகாரிகளாக அவதாரம் எடுத்தவர்களில் சிலரது பெயர்களும் அவர்களது பெர்பார்மன்சும் காவல்துறையின் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருக்கிறது ! அந்த தரவரிசையில் தனித்து நிற்பவர் விஜயகுமாரி ! இவரது நிறம் மட்டுமல்ல மனதும் வெள்ளை, வெளேர் என்று இருக்கும் !
உயர்ந்த சிந்தனைகள் , ஓயாத உழைப்பு , ஆற்றல் , அர்ப்பணிப்பு , நேர்மை , நன்னெறி போன்ற உயரிய குணங்களின் உன்னத கலவை விஜயகுமாரி ! வழக்கறிஞர் என்ற கூடுதல் சிறப்பை கொண்டவர் என்பதால் வேகமும் விவேகமும் இவரோடு ஒட்டிப் பிறந்தவை ”
விஜயகுமார் சிட்டி போலீஸ் கமிஷனராக அடி எடுத்து வைத்த போது , விபச்சார பிரிவில் (AVS ) லஞ்சம் தலை விரித்து ஆடியது ! சதை வியாபாரம் சக்கை போடு போட்டது ! இதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இப்பரிவில் கருப்பாடுகள் கனிசமாக ஊடுருவி இப்பிரிவை கேலிக்கூத்தாக்கியது !
சபல குணம் கொண்ட சில சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சப்ளை செய்வதே இவர்களது சர்வீசின் குறிக்கோளாக இருந்தது ! இவர்களின் ஆசி இருந்ததால் கீழே உள்ளவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது !
விஜயகுமார் சென்னை கமிஷனராய் கால் பதித்ததும் ரௌடிகள் , தாதாக்கள் போன்ற சட்ட ஒழுங்கு பிரிவுக்கு சவாலாக இருப்பவர்கள் இளைப்பாறும் இடமாக இருந்த இந்த விபச்சார விடுதிகளை ( Brothel Den ) களை எடுக்க கை சுத்தம் உள்ள ஒரு பெண் அதிகாரியை தேடி கொண்டிருந்தார் !
வீரியமும் விவேகமும் ஒன்று சேர்ந்த விஜயகுமாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய சிங்கப்பெண் விஜயகுமாரி ! பதவி ஏற்ற ஒரே மாதத்தில் விபச்சார ஒழிப்பு பிரிவில் தன் வேட்டையை ஆரம்பித்தார் ! கன்னட பிரசாத் , பூங்கா வெங்கடேசன் , விக்கி போன்ற விபச்சாரத்தை வணிகமாக்கிய வியாபார சங்கத் தலைவர்களை வளைத்துப் பிடித்தார் !
நிறைய நெருக்கடிகள் நாற்புறமும் இருந்து இவரை விரட்டி கொண்டே இருந்தது , ஆனால் வீழ்ந்து விடவில்லை இந்த வேலு நாச்சியார் ! விஜயகுமாரை வியக்க வைத்தது வழக்கறிஞரான இந்த பெண் உதவி கமிஷனரின் பெர்பார்மன்ஸ் !
அன்று பிடித்த வேகம் தான் , அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே நேரமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் SP யாகவும் DIG யாகவும் இருந்து கலக்கியவர் ! சிட்டி போலீசிலும் மிகப் பிரபலமானது விஜயகுமாரியின் பெயர் !
கோபப்பட மாட்டார் ! மிகவும் பொறுமைசாலி , ஆனால் பொறுமை இழந்தால் பூகம்பம் தான்! வேட்டைக்கு கிளம்பி விட்டால் வெறும் கையோடு வீடு திரும்ப மாட்டார் இந்த விஜயசாந்தி ! தன் 30 வருட காவல்துறை பயணத்தில் பல சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு , சோர்ந்து விடாமல் சாம்பலில் இருந்து சிலிர்த்து எழும் பீனிக்ஸ் பறவைக்கு நிகரானவர் இந்த பெண்ணரசி !
நேற்று நடைபெற்ற முதல்வரின் மெடல் பரேட் இவரது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகிப் போனது ! காரணம் அவர் போலீசிலிருந்து பிரியாவிடை பெறும் ஓய்வு நாளாகவே அது அமைந்தது தான் ! பொதுவாக யாருக்குமே கிடைக்காத சிறப்பான நிகழ்வு இது !
பொதுவாக IPS அதிகாரிகள் ஓய்வு பெறும் போது, சிட்டி போலீஸ் உள்ள Officer Mess சில் தான் பிரிவு உபசார விருந்து கொடுத்து வழி அனுப்பி வைப்பார்கள் ! ஆனால் விஜயகுமாரிக்கு ஆவடி பட்டாலியனில் சுமார் 1000 பேர் புடை சூழ அட்டகாசமான விருந்து உபசாரம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார் !
ஓய்வு பெறும் ஒவ்வொரு IPS அதிகாரிகளும் விடைபெறும் தருவாயில் , காவல்துறையில் தாங்கள் கடந்து வந்த கரடு முரடான பாதையை திரும்பிப் பார்த்து அசைபோடுவார்கள் ! அப்படி விஜயகுமாரி தன் பணி காலத்தை பின்னோக்கி அசை போட்டால் அதில் அவரிடம் குற்ற உணர்ச்சியை தலை எடுக்காது !
மாறாக பெருமைகளும் , மன நிறைவுகளும் மட்டுமே மகிழ்ச்சியில் சிறகடிக்கும் ! கலவரம் , கண்ணீர் புகை , தடியடி , ரத்தம் , பிணம் இவைகளுடனே 20 வருட நீண்ட நெடிய போராட்டம் ! இவை அனைத்திற்கும் நேற்றோடு முடிவு கிடைத்து விட்டது !
ஒரு சராசரி பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வும் நிம்மதியும் இன்று முதல் இனி நிரந்தரமாக உங்களுக்கு கிடைக்கட்டும் ! வாழ்த்துக்கள் விஜயகுமாரி மேடம் !
– இந்திரஜித் – பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.