விருதுகளின் இலட்சணம்
சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் இது.
“அவசரமாக என் நாவல் ஐந்து பிரதிகள் அச்சடித்து தர முடியுமா?”
என என் பத்திரிகை இளவல் ஒருவர் கேட்டார்.
அவருக்கு 35 வயது இருக்கும்.
“அட நீங்க நாவல் எல்லாம் எழுதுவீங்களா?” என்றேன்.
ஏற்கனவே ஒரு நாவல் எழுதி அச்சில் வந்து நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்ததாகச் சொன்னார்.
“சரி, இப்போது என்ன நாவல் எழுதி உள்ளீர்கள்?”எனக் கேட்டேன்.
அவர் என் கேள்வியைப் பொருட்படுத்தாமல், “இல்லை சார் உங்களுக்குத்தான் லே-அவுட் செய்யறவங்க, POD யில் அச்சடிக்கும் அச்சகத்தார் எல்லாம் தெரியுமே? அவர்களிடம் 200 பக்க நாவல் கொடுத்தால் எவ்வளவு சீக்கிரம் லே – அவுட் செய்து அச்சடித்தும் தருவார்கள் கேட்டு சொல்ல முடியுமா? 5-10 பிரதிகள் போதும். எவ்வளவு சார்ஜ் வரும் என்றும் கேட்டு விடுங்கள்” என்றார்.
நானே தோராயமாக கணக்குப் போட்டேன். “லே அவுட்டுக்கு 2 – 3 நாட்கள். அச்சுக்கு 2 நாள். ஏழு நாள் போதும். செலவு லே-அவுட் ரூ 5000/- wrapper ரூ 2000/- அச்சுக்கு எப்படியும் 10 பிரதிகள் ரூ 2000/- வரலாம். ஆக மொத்தம் ரூ.8000 – ரூ 9000 வரும் ” என்றேன்.
“கண்டிப்பா ஒரு வாரத்துல முடியுமா சார்?” என்று அழுத்தமாகக் கேட்டார்.
“நிச்சயமாக ” என்றேன்.
அவர் ஏதோ கணக்குப் போட்டார். நான் இடை மறித்து, “சரி நாவலை அச்சுக்கு எப்ப தருவீங்க”? என்றேன்.
“இல்லே சார் அரசாங்கம் இலக்கியத்தில் இளைஞர்களுக்கு தரும் உயரிய விருதுக்குழுவில் உள்ளவர், இந்த வருட விருது எனக்கே எனக்குன்னு உறுதி சொல்லி இருக்கார். பழைய நாவல் தர்றேன்னேன். அது ஆகாதாம். புதுசா போன வருஷம் வெளியான நாவலா இருக்கனுமாம். டைம் 15 நாள்தான் இருக்கு. அதுக்காக புதுசா ஒன்று இனிமேதான் எழுதனும். எனக்கு நாவல் எழுத 5-6 நாள் போதும். நீங்க சரியா சொன்ன டைமுக்கு அச்சடித்து தந்தா நிச்சயம் விருது வாங்கிடுவேன்” என்றார்.
அவரும் நாவல் எழுதினார். அச்சுக்கு அனுப்பினார். அச்சும் ஆகி விருதுக்கு பரிந்துரையுடன் போனதாகவும் சொன்னார்.
நல்லவேளை! இவருக்கே அல்வா கொடுக்கிற அண்ணன் இவர் ஊரிலேயே பிறந்திருப்பார் போல. அந்த ஆள் விருதைத் தட்டிக் கொண்டார்.
“எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்”
நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.
— கா.சு.வேலாயுதம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.