காரசாரமான விவாதங்கள் மட்டுமின்றி, கலகலப்புக்கும் குறைவில்லாமல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் களைகட்டி வருகிறது. பிரபல பட்டிமன்ற பேச்சாளர் – நடுவர் திண்டுக்கல் லியோனியை நினைவு படுத்துவது போலவே, ராகம் மாறாமல் பழைய பாடல்களை பாடியபடி சபையை நடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனின் பெர்ஃபாமென்ஸ் படு சுவாரஸ்யம்.
அதேசமயம், சபையில் பாவப்பட்ட மனிதரும் சபாநாயகர்தான். சொந்தக் கட்சி எம்.எல்.ஏ. என்றும் பாராமல், ”சுருக்கமா பேசுங்க”, “உட்காருங்க”, “என்னை பார்த்து பேசுங்க”, “சண்டை போடுறதுதான் நோக்கமா”னு பல நேரங்களில் கடிந்து கொண்டும் சில நேரங்களில் சேம்சைடு கோல் போடவும் அவர் தவறுவதில்லை. வேளாண்துறை பட்ஜெட் என்று வாசிக்கத் தொடங்கி, அரை மணி நேரத்துக்கும் மேலாக கட்சிக்கும் கட்சித்தலைவனுக்கும் புகழ்மாலை பேசிக்கொண்டிருந்த அமைச்சரை, முடியலடா சாமி-ன்னு வெறுத்து, “மேட்டருக்கு வாப்பா”னு இழுத்துவரவே பெரும்பாடுபட்டார் சபாநாயகர்.

ஆனால், என்ன?. எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் உரிய நபர்களிடமிருந்து விடை வந்து சேர்வதில்லை என்பதுதான் சபையின் பெருங்குறையாக நீடிக்கிறது. சட்டசபை கூடுறதே, இதுக்குத்தானேனு நீங்க கேட்கிறது புரிகிறது. சபையில் இருக்கிறவங்களுக்கு புரியனுமே?
கல்லூரி விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த மாணவன் அமுதன் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிகிறார். இதுபோல நான்கு சம்பவங்களை பட்டியலிடமுடியும் என்று பேசத்தொடங்கியவரை அந்த நாலுவரியை மட்டும் வாசியுங்கள் என்று கடிவாளம் போடுகிறார் சபாநாயகர். ஒரு கட்டத்தில், கவன ஈர்ப்பு கோரிக்கைகளை அவரே வாசிக்கவும் செய்கிறார். இதற்கு பதில் அளிக்கும்விதமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து “போதைப்பொருள் காரணமல்ல; சக மாணவர்களுக்கிடையிலான மோதலில்தான் இறந்துபோனார்” என விளக்கமளிக்கிறார். சபாநாயகர் அமைதி காக்கிறார். அமைச்சரின் பதிலை கேட்டு ஆத்திரமுற்ற உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவிக்க வேறு வழியின்றி பேச்சை நிறுத்துகிறார் அமைச்சர் ராஜ்மோகன்.

இங்கே, விவகாரம் போதைப்பொருள் புழக்கம் குறித்து. அதன் காரணமாக போதை கும்பலின் வெறிச்செயலால் ஒரு கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து. போலீசு துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எழுந்து பதிலளிக்கவில்லை. கல்லூரி தொடர்புடைய சம்பவம் என்பதால், உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளிக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுந்து பதிலளிக்கிறார். இதை சபாநாயகர் அனுமதிக்கவும் செய்கிறார்.
இந்த ஒரு விவகாரத்தில் என்றில்லை. ”மாப்பிள்ளை இவருதான். ஆனால், இவரு போட்டிருக்க சட்டை என்னோடது” என்ற கதையாக, சபையில் எந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினாலும் முதல்வரைத் தவிர மற்றவர்கள்தான் முந்திக் கொண்டு பதிலளிக்கிறார்கள். நெல் சேமிப்பு கிடங்கு பிரச்சினை பற்றி அறநிலையத்துறை அமைச்சர் பேசுகிறார். கரும்பு சாகுபடி பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் பேசுகிறார். காவிரி வடிகால் பிரச்சினை குறித்து தொழில்துறை அமைச்சர் பேசுகிறார். நெல் மானியம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் பேசுகிறார். கடன்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எந்த சைடிலிருந்து கேள்விக்கணைகள் வந்தாலும், எல்லா சப்ஜெக்டுக்கும் எழுந்து எழுந்து பேசுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அவ்வளவு ஏன், அவ்வப்போது முதல்வரின் சார்பில் பதிலளிக்கும் பொறுப்பை சபாநாயகரும் எடுத்துக் கொள்கிறார்.
எல்லாவற்றுக்கும் முதலாக முந்திக்கொண்டு பதிலளிக்க வேண்டிய முதல்வர், சபையில் கேட்ட கேள்விக்கு சாவகாசமாக டிவிட்டரில் பதிலளிக்கிறார். அல்லது, சினிமா பஞ்ச் டயலாக் பாணியில் ஏற்ற இறக்கத்துடன் எழுதிக்கொண்டு வந்ததை சைகை உடல் மொழியோடு பேசி ஸ்டேஜ் பெர்ஃபாமென்ஸில் அப்ளாஸ் செய்கிறார். மற்ற நேரங்களில், மௌன சாமியாராகவே மாறிவிடுகிறார். இதெல்லாம் தமிழக சட்டசபை வரலாறு காணாத ஒன்று.
ஒருவேளை, “உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

அதிலும், ஆதவ் அர்ஜூனாவின் உடல்மொழியும், அவர் பேசும் தோரணையும் அகங்காரத்தின் உச்சம் என்றே சொல்லலாம். சம்பந்தமே இல்லாமல், ”லாட்டரி மார்ட்டினிடம் 900 கோடி திமுக ஏன் வாங்கியது?” என வீராப்பாக கேள்வி எழுப்புகிறார். ”உங்கள் அப்பாவிடம் கேட்டு சொல்லுங்கள்” என்று எகத்தாளம் வேறு. “அதை உங்கள் மாமனாரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவுண்டர் கொடுக்க, வாயடைத்து அமர வேண்டியதாயிற்று. இதனை தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்., ”தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து எடுத்து சொல்லி, இவை சட்டப்பூர்வமான நடைமுறை; இதை ஏதோ இலஞ்சம் வாங்கியதை போல பேசியிருப்பது உண்மைக்கு மாறான தகவல்” என்று ஆட்சேபிக்க, ஆதவ் பேசிய அத்தனையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
விவசாயிகள் மானியம் தொடர்பான கேள்வியின்போது, “பேப்பர் படிச்சாதானே விவரம் தெரியும்” என்று நக்கலடித்த, முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரிய விளக்கத்தோடு ”பேப்பர் படிச்சா மட்டும் போதாது” என்று பதிலடி கொடுத்த விவகாரம் வரையில் தொடர்ந்து சபையில் மூக்குடைபடுவதெல்லாம், அவர்களுக்கு பொருட்டே இல்லை போல.
இந்த பேச்சுகளெல்லாம், இன்ஸ்டாவில் ரீல்ஸ்களாக வலம் வரவும் பார்ப்போர் ஃபயர் விடுவதற்கும் பயன்படட்டும் என்பதற்காகவே பேசுவது போல, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினமும் தீனி போடும் கண்டென்ட் கிடங்காகிப்போனது சட்டசபை நிகழ்வுகள்.
– மாஸ்டர் ஆதவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.