இந்தியாவில் போலியோவை முற்றிலுமாக ஒழித்ததில், ரோட்டரி இன்டர்நேஷனலின் பங்களிப்பு மகத்தானது. எப்போதுமே, ஆளும் அரசுடன் கை கோர்த்து சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது, ரோட்டரி. இச்சேவையின் தொடர்ச்சியாக, தற்போது தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
இச்சேவையின் தொடக்கமாக, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜயின் ஆலோசனையின்படி, கடந்த ஆகஸ்டு-14 அன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் ஐ நேரில் சந்தித்து, இத்திட்டம் தொடர்பாக நேரில் கலந்துரையாடியிருக்கிறார், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.
அரசு மேற்கொண்டு வரும் நீர்நிலை பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உறுதுணையாக, ரோட்டரி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைத்து, அவர்களின் உதவியுடன் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும்; குறிப்பாக, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றப் பாதைகள், தூர்வாரும் பணிகள் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிடுகிறார், எம்.எம்.எம். முருகானந்தம்.
இத்தகைய சீரிய முன்னெடுப்பின் மூலம், தமிழக நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறனை அதிகரித்து; அடுத்த தலைமுறைகள் பயன்பெறும் வகையில் மேம்படுத்துவது என்ற உயரிய இலக்கை நோக்கிய பயணத்தில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறது, ரோட்டரி இன்டர்நேஷனல்.
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.