‘கட்டா குஸ்தி 2’ 50-ஆவது நாள் விழா! ஐசரி கணேஷ் அமர்க்களம்
வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் & விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்த ‘கட்டாகுஸ்தி-2’ தியேட்டர்களில் 50- ஆவது நாளைக் கடந்து ஓடுகிறது. இதனால் வெரி ஹேப்பியான ஐசரி கணேஷ், வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னை அடையாறில் உள்ள ஜானகி – எம்ஜிஆர் கல்லூரியில் செப்டம்பர் 03- ஆம் தேதி மாலை நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் பிரபு தேவா ஆகியோர் கலந்து கொண்டு நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…..
இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு
“கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்
“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஆறு படங்கள் தயாரிப்பில் உள்ளன”.
விஷ்ணு விஷால் ‘என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்கம் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”
அமைச்சர் ராஜ்மோகன்
“50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலானது”. நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஸா, பேபி ஷாரா, நடிகர் யோகி பாபு ஆகியோரும் பேசினர்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.