‘லெனின் பாண்டியன்’ விழா! ஜாலி மூடில் இசைஞானி!
தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனமான ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ -ஐ 1977-ஆல் ஆரம்பித்தார் டி.ஜி.தியாகராஜன். ரஜினி, கமல், என முன்னணி ஹீரோக்களையும் பாலுமகேந்திரா போன்ற பெரிய டைரக்டர்களையும் வைத்து பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’-ன் தயாரிப்பு நிர்வாகத்தில் இப்போது டி.ஜி.தியாகராஜனின் மகன்களான செந்தில் தியாகராஜனும் அர்ஜுன் தியாகராஜனும் களத்தில் குதித்துள்ளனர். பொன் விழா ஆண்டை நெருங்குவதையொட்டி, இப்போது ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தைத் தயாரித்து, வரும் 25ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிறது ‘சத்யஜோதி பிலிம்ஸ்’.
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், தர்ஷன் கணேசன் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டி.டி.பாலச்சந்திரன் என்ற இளைஞர் டைரக்ட் பண்ணுகிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் தம்பி கங்கை அமரன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சீனியர் நடிகை ரோஜா இவருக்கு இணையாக நடிக்கிறார்..
இப்படி பல சிறப்புகளுக்குரிய ‘லெனின் பாண்டியன்’ படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழாவை, சென்னை எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியின் அரங்கத்தில், கடந்த 12-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடத்தினார் டி.ஜி.தியாகராஜன்.
படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் லலித்குமார், தனஞ்செயன், டி.சிவா, சுஜாதா விஜயகுமார், டைரக்டர்கள் பி.வாசு, வெங்கட் பிரபு, பத்ரி, ஆர்.கண்ணன் என ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சத்யஜோதி பிலிம்ஸின் சினிமாப் பயணம் குறித்த இரண்டு நிமிட விஷுவல் ஒளிபரப்பப்பட்டது. இரவு 7.50-க்கு அரங்கிற்குள் எண்ட்ரியானார் இசைஞானி. அவர் வந்ததும் சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்புகளில் இசைஞானி இசையமைத்த படங்களின் தொகுப்பு விஷுவல் ஒளிபரப்பப்பட்டது.
அதன் பின் மேடையேறினார் இசைஞானி. அவருடன் தியாகராஜன், கங்கை அமரன், ஹீரோ தர்ஷன் ஆகியோரும் மேடையேறினர். அப்போது “டைரக்டரைக் கூப்பிடுங்க” என இசைஞானி சொன்னதும் மேடைக்கு போன டி.டி.பாலச்சந்திரன், இசைஞானியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அதன் பின் நடிகை ரோஜாவும் மேடையேறி இசைஞானியின் காலில் விழுந்து ஆசிவாங்கினார்.

ஹீரோ தர்ஷனும் இசைஞானியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய பிறகு, “இந்திய சினிமாவில் மாபெரும் நடிகர் அண்ணன் சிவாஜியின் பேரனை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னை எப்போது பார்த்தாலும் ‘ராசா…எப்படிடா இருக்க?’ என அன்புகாட்டுவார். அந்த மாபெரும் அண்ணனின் பேரனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு” என வாழ்த்திப் பேசியவரிடம், “உங்க தம்பி இதுல நடிச்சிருக்காரு. அதைப் பத்தி…” என நிகழ்ச்சித் தொகுப்பாளினி கேட்டதும், “நல்லாத்தான் நடிச்சிருக்கான். என்கிட்டேயே நடிப்பான்” எனச் சொல்லி அரங்கையே கலகலக்க வைத்தார்.
அப்போது டைரக்டர் பாலச்சந்திரன், “நான் பேசலமா சார்?” எனக் கேட்டதும், “படத்தோட டைரக்டர் நீ பேசலைன்னா எப்படிப்பா…? பேசுப்பா” என டைரக்டரை உற்சாகமூட்டினார். விழாவில் இருந்த அரை மணி நேரமும் செம ஜாலி மூடில் இருந்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் இசைஞானி இளையராஜா.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.