கவிஞர் தமிழ் ஒளியின் போராட்டமும் புரட்சியும் – முனைவர் சீமான் இளையராஜா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கவிஞர் தமிழ்ஒளி மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற இரு ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப்பட்டவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தமிழ்ஒளிக்கு உற்றத் தோழனாக இருந்தவர். இருவரும் திராவிடர் கழகத் தோழர்களாக புதுவையைச் சுற்றியவர்கள். முரசு ஏட்டில் கவிஞர் தமிழ்ஒளி தனது கைவண்ணத்தில் கவிதைகள் எழுதினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முரசு ஏட்டில் கவிஞர் தமிழ் ஒளி கவிதைகளைப் படித்துப் பாராட்டினர். குறிப்பாகத் தமிழ்ஒளியை நேரில் அழைத்துப் பாராட்டினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தான்  எழுதிவந்த ‘பாண்டியன் பரிசு’ காவியத்தின் கையெழுத்துப் படியினை நகலெடுக்கும் பொறுப்பினை கவிஞர் தமிழ்ஒளி அவர்களிடம் கொடுத்தார். அதனை செம்மையாகச் செய்தும் கொடுத்தார். அப்போழுதே கவிதைகள் மீது ஆர்வம் கொண்டு தானும் கவிதைகள் எழுதப் பழகிக் கொண்டார்.

கவிஞர் தமிழ்ஒளியின் அறிவையும், ஆற்றலையும், திறமையையும், உழைப்பையும் பார்த்து  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் ஒளியை தமிழ்ப் புலவர் படிக்கதஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள புலவர் கல்லூரிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன்’ என்று தாளாளருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.அக்கடிதத்தைக்கொண்டு கல்லூரியில் கொடுத்து அங்கேதமிழ்ப் புலவர் வகுப்பில் தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார் தமிழ்ஒளி. கரந்தைக் கல்லூரியில் கால் வைத்ததும் கவிதைகள் எழுதி வாசித்தார். கல்லூரி மாணவர்களிடையே சிறந்தக் கவிஞராகப் போற்றப்பட்டார். கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை அங்கு இருக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் படித்துப் பாராட்டினர். கவிஞர் தமிழ்ஒளியின் சிந்தனையும், செயல்பாடும் கல்லூரியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கவிஞர் தமிழ்ஒளி
கவிஞர் தமிழ்ஒளி

கவிஞர் தமிழ்ஒளியைப் பற்றி அங்கே இருப்பவர்கள் ஆராயத்தொடங்கினர். இவர் எங்கே இருந்து வருகின்றார்? இவர் என்ன சாதி? இவர் பின்னணி என்ன? என்பதையெல்லாம்ஆராய்ந்து அறிந்துகொண்டனர். இவர் சுயமரியாதைக்காரர்; பாரதிதாசன் மாணவர்; தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பதற்கும் மேலாக எதுவும் அவர்களால்அறியமுடியவில்லை. அந்த அடையாளங்களில் ‘சாதி’ ஒன்றே உயர்சாதி மாணவர்களுக்குப் போதுமானதாகத் தெரிந்தது. ஒருநாள் இரவு உணவு விடுதியில் ‘சாதி’ குறித்து இழிவாகப்பேசியுள்ளனர். தமிழ்ஒளி இதைக்கேட்டு மனம் கலங்கி  அதிர்ந்துபோனார். இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் புதுவை சென்று கவிஞர் பாரதிதாசனிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.பாரதிதாசன் இதைக்கேட்டதும் உடனே கரந்தைக்குச் செல்ல, சேலம் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தார் காரில் தமிழ் ஒளியை அழைத்துச் சென்றுள்ளார். காரில் வந்திருப்பவர் பாவேந்தர் பாரதிதாசன் என அறிந்ததும் கல்லூரி முதல்வர் புலவர் பொன். மீனாட்சிசுந்தரனார் வெளியே வந்து பாவேந்தர் பாரதிதாசனை அழைத்துச் சென்று நடந்ததைக் கேட்டதும் அதிர்ந்து போனார்.  பாவேந்தரை சமாதானப்படுத்தி இனி எந்தவொரு பிரச்சனையும் நடக்காது. தமிழ்ஒளியை நான் கவனித்துக் கொள்கிறேன் என உறுதி கொடுத்து, வழியனுப்பி வைத்துள்ளார். தமிழ்ஒளி மீண்டும் படிப்பைத் தொடர்ந்துள்ளார். முதலாமாண்டு மாணவராய் இருந்தபோதே ‘சிற்பியின் கனவு நாடகம் எழுதினார். சக்தி நாடக சபா அதிபர் சக்தி கிருஷ்ணசாமியை நண்பர் மூலம் சந்தித்து 1945இல் நாடகத்தை அரங்கேற்றக் கேட்டுக் கொண்டார். 1946 இல் பெங்களூரில் நாடகம் அரங்கேறியது. உரிமைத் தொகை ரூபாய் தொள்ளாயிரம் கொடுத்தனர். அதனைப் புதுவைக்கு வந்து பெற்றோரிடம் கொடுத்துள்ளார். முதலாமாண்டுத் தேர்வு எழுதியவர், மீண்டும் கரந்தைக்குச் செல்லவில்லை.

கவிஞர் தமிழ்ஒளி நண்பர் பாலுக்கு எழுதிய கடிதம் (12.12.1947)

நண்பர் பாலுவுக்கு, உங்கள் கடிதமும் நண்பர் அரங்கராசன் கடிதமும் கிடைத்தன. மகிழ்வுற்றேன். நீவீர் மேற்கொண்ட வேலை, இனிது நிறைவேற வேண்டும் என்பதே என் ஆவல். அந்நாள் வரையில் அவ்வேலையிலேயே கருத்தூன்றி நிற்க.

தேர்வு முடிந்தவுடன் அவசியம் சென்று வாருங்கள்; அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கை அனைத்தையும் உங்கட்குத் தெரிவிக்கிறேன். புத்தகங்கள் அறிக்கைகள் அனைத்தும் அனுப்புகிறேன்.

நண்பர் அரங்கராசனுக்கு இத்துடன் ஒரு கடிதம். அதை அவரிடம் சேர்க்கவும். தேர்வெல்லாம் முடிந்தபிறகு நீங்கள் உண்மையிலேயே நாட்டின் பணியில் நேரடியாக ஈடுபட வேண்டும், கலைத்துறையில் பிறவிப் பயனே சேவை பணி செய்வதுதான். ஆனால், அது உருவான முறையில் ஞானஒளி பெற்றதாயிருக்க வேண்டும்.

உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இளைஞர்களாகிய நாம்தான், நாட்டின் இன்றைய எதிர்கால வீரர்கள் என்பதைநீவீர் அறிவீர். நமது தொண்டு, நாட்டிற்கு மிகமிகத் தேவை.

புதுமை இலக்கியம் உங்கட்கு அனுப்புகிறேன். இத்துடன் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க அறிக்கை அனுப்பியுள்ளேன். நீவிரும் நண்பர் அரங்கராசனும் படியுங்கள். தேர்வுக்குப் பின் நீங்கள் தஞ்சையில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கக் கிளையை வளர்க்க வேண்டும்; இன்றிலிருந்து முற்போக்கு இலக்கியத் தத்துவத்தில் நீங்கள் தேர்ச்சியுற வேண்டும் அதற்கு உங்கட்குப் புதுமை இலக்கியம் உதவி புரியும். நண்பர் அரங்கராசனும் இதற்கு இசைவார் என்பதில் ஐயமில்லை. அவர் ஊரில், இவ்வேலையை அவர் மேற்கொள்ளட்டும்.

“தேடிச் சோறுநிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்றுநினைத் தாயோ?

என்று பாரதி மார்தட்டுகிறான். இதுதான் ஒவ்வொரு மனிதனுடைய கேள்வியாகவும் இருக்க வேண்டும்!

நான் ரொம்பத் தெரிந்தவன் போல் ‘போதனை’ செய்வதாக நினைக்காதீர்கள். இவை உங்கட்கும் தெரிந்தவைதான். என்னுடைய வாழ்நாளில் குறிப்பிடத்தகுந்த இரண்டு சம்பவங்களில், ஒன்று கரந்தையில் படித்தது, (இரண்டாவது) அதற்குப்பின் என் கருத்துத் துறையில் ஏற்பட்ட மாறுதல்.

இந்த மாறுதலை நீர் உணர்ந்து கொண்டிருப்பீர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதன், முக்கியத்துவத்தையும் நண்பராகிய உங்களிடம் தெரிவிக்கவே நான் இதை விளக்க முற்பட்டேன். என்று பல்வேறு கருத்துகளையும் குறிப்பிடுகின்றார்.

 நண்பர்களே,

இன்னும் உங்களுக்குப் பல விஷயங்களை விளக்கக் கடமை பட்டிருக்கிறேன். நீங்கள் இவற்றை ஊன்றிப் படித்து மேலும் மேலும் இத்தகைய ஞானத்தை வளர்க்க முயலுங்கள்.

இந்தத் தத்துவம், உலகில் எவராலும் வெல்ல முடியாத தத்துவமும், உண்மை என்று நிரூபிக்கப்பட்ட தத்துவமும் ஆகும். பழைய வேதாந்தங்கள் எல்லாம் இதன் முன்னே தலைகுப்புற விழுந்து தவிடு பொடியாகிவிட்டன.

இதை உணர்ந்தே நான் என்னுடைய கொள்கையை வகுத்துக் கொண்டேன். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியமும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும், உலக நிலையையும் ஆராய்ந்து எழுதப்பட்ட மணி வாசகங்களாகும். அதை ஊன்றிப் படியுங்கள் முற்போக்குக் கலைக்கும் இலக்கியத்திற்கும் சேவை செய்ய முன் வாருங்கள்.

இது பற்றி, உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதினால், நான் விளக்க முயற்சிக்கிறேன்என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாவலர் பாலசுந்தரம் (1924-2007)

“முதலாவது ஆண்டில் என் உடன் படித்து வந்தவர்களுள் புதுச்சேரியிலிருந்து வந்த விஜயரங்கம் என்பவர் ஒருவர். தமிழ்ஒளி என்று புனைபெயர் வைத்துக்கொண்டு கிழமை இதழ்களுக்குக் கவிதை, கட்டுரை எழுதிவந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தவர். கையெழுத்து மிக அழகாக எழுதுவார். எப்பொழுதும் ஏதாவது கவிதை எழுதிக்கொண்டிருப்பார். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் அவ்வளவு ஈடுபாடு இருக்காது. புதுமைப்பித்தன், ரகுநாதன் போன்ற எழுத்தாளர்களின் கவிதைகளை விமர்சிப்பார். என்னிடத்தில் ஈடுபாடும் அன்பும் கொண்டார். எனக்கு அவரிடத்தில் வியப்புக் கலந்ததொரு ஈடுபாடு. ஒரு நாள் கேட்டேன், “உங்களுக்கு இவ்வளவு தமிழ் உணர்வும் கவிதைத் திறனும் எப்படி வந்தன?” அவர் உடனே, “பாரதிதாசனால்தான். நான் அவரிடம் அவர் எழுதும் கவிதை, கட்டுரைகளைப் படியெடுக்கும் உதவியாளராக இருந்தேன். அவற்றைப் படிக்கும்போது அதைப் போலக் கற்பனை செய்து எழுதிப் பார்ப்பேன். அதே மெட்டில், அதே பாவில் எழுதிப் பார்ப்பேன். அவர் என்பால் ஒரு மகனைப் போல் அன்பு செலுத்தினார். நான் எழுதியதைப் படித்துப் பார்த்துள்ளார். ஒரு நாள் ‘விசயரங்கம் உன்னிடம் கவிதை உணர்வும், திறனும் உள்ளன. போதிய தமிழறிவு பெற்றால் ஒரு நல்ல கவிஞனாக, எழுத்தாளனாக வரலாம். உன்னைத் தமிழ்ப் படிக்கவைப்பது என் பொறுப்பு. தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள புலவர் கல்லூரிக்கு உன்னை அனுப்பிவைக்கிறேன்’ என்று தாளாளருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பிவைத்தார்” என்றார். எங்கள் நட்பு நெருக்கமாயிற்று. அவர் எழுதுவதைப் பார்த்து நானும் எழுத முற்பட்டேன். தமிழ்ஒளி இசைப்பாட்டும் எழுதுவார். எண்சீர் விருத்தம் சரளமாக எழுதுவார். “பாட்டு எழுதுவதற்குச் சிந்தனை தான் முக்கியம். அரசியலாக இருந்தாலும் சமூகம் பற்றியதாக இருந்தாலும் அவற்றிலுள்ள குறை, நிறைகளை ஆய்ந்து பார்க்க வேண்டும். வாழ்த்துப்பா பாடுவது பெரிய திறமையாகாது” என்பார். நான் சிலவற்றை எழுதிக்காட்டும் போது மகிழ்ச்சியடைவார்.

ஒருநாள் பாலு சார். “நான் ஒரு நாடகம் எழுதி சக்தி நாடகக் கம்பெனிக்கு அனுப்பியிருக்கிறேன். அனேகமாக அது அவர்களுக்குப் பிடிக்கும்” என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அவர் சொன்னதுபோலவே சக்தி நாடக சபா உரிமையாளர் கிருஷ்ணசாமி அவரைப் புறப்பட்டு வருமாறு எழுதியிருந்தார். மறுநாள் திண்டுக்கல்லுக்குப் புறப்பட்டுச் சென்று மறுநாள் திரும்பி வந்தார். பாலு சார், அவர்கள் நாடகத்தை ஏற்றுக் கொண்டார்கள். பயிற்சி கொடுத்து அடுத்த மாதம் அரங்கேற்றுவதாகக் கூறியுள்ளார்கள் என்றார். அக்காலத்தில் ஒரு நாடகக் கம்பெனியார் ஒருவர் நாடகத்தை எடுத்துக் கொண்டால் எழுதிய ஆசிரியருக்கு முதல் நாள் வசூலாகும் தொகையை ஊதியமாகக் கொடுப்பது வழக்கம்.தமிழ்ஒளி நாடகம் அரங்கேறிய நாளன்று சென்று வந்து முதல் நாள் வசூலான தொகையுடன் சிறிது சேர்த்து 700 ரூபாய் கொடுத்தார்கள். இன்றைய மதிப்பில் அத்தொகை 70,000 ஆகும். மறுநாள் ஊருக்குச் சென்று வருவதாகக் கூறி அவர் பெட்டியை என்னிடம் ஒப்பித்துவிட்டுச் சென்றார்.திரும்பி வரவில்லை.” என்று பதிவு செய்துள்ளார்.

(ச. பாலசுந்தரம். நினைவலைகள். பக்கங்கள் 64-66.)

கவிஞர் தமிழ் ஒளியின் புரட்சியும் போராட்டமும்

நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய இருவேறு வர்க்கங்களின் தீய பண்புகளை எதிர்த்துத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைப்பவன் என்ற முறையிலும் புதிய சமுதாய அமைப்பைக் காணப் போராடும் சிந்தனையாளன் என்ற முறையிலும் இவ்வறிக்கையை நான் வெளியிடுகிறேன் என்று கவிஞர் தமிழ்ஒளி குறிப்பிட்டவை.

பணமோ, பக்கபலமோ அற்ற நிலையில், சமூகத்தின் தாழ்ந்த படியிலே வளர்ந்து, தலை நிமிர்ந்த என்னை, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கும், முதலாளித்துவ “முற்போக்கும்,” இருட்டடிப்புச் செய்துள்ளன! அதன் காரணமாகவே, மக்கள் மன்றத்தின் முன் மறைக்கப்பட்டிருந்த என்னை, நானே அறிமுகப்படுத்திக்கொள்ள முன்வந்தேன்.

உரைநடைத்துறை, கவிதைத்துறை ஆகியவற்றில், கடந்த பதின்மூன்று ஆண்டுகட்கு மேலாய்த் தமிழ் மொழியின் ஆக்கங்கருதித் தொண்டுபுரியும் என்னைத் தமிழறிஞர் சிலர் அறிவர்! எனினும், நாடு அறியாது!

‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’, ‘நீ எந்தக் கட்சியில்’, ‘மேதினமே வருக’ முதலிய கவிதை நூற்களும் ‘கவிஞர் விழா’, ‘சாக்கடைச் சமுதாயம்’, ‘ஸ்டாலின்’, (நாடகம், சிறுகதை, வாழ்க்கை வரலாறு) முதலிய நூற்களும் ஏற்கனவே என்னால் எழுதி, வெளியிடப்பெற்ற நூற்களாகும்! சிந்தனை, அமுதசுரபி, முன்னணி, (தற்போதைய “முன்னணி” அல்ல)கலாவல்லி, மனிதன், கலைமகள், உமா, கண்ணன், நல்லறம், சரஸ்வதி, சுதேசமித்திரன், தாமரை, ஜனசக்தி, கங்கை, சாட்டை, சக்தி, அணில் முதலிய இதழ்கள் என் எழுத்தைப் பரப்பப் பெரிதும் துணை செய்தன. எனினும், சமூகத்தில் நிலவிய தீயசக்திகள், மக்கள் கண்களினின்றும் என்னை அடியோடு மறைத்துவிட – உலகினர் கண்களின் முன் நான் ஒரு கவிஞனாகவோ நூலாசிரியனாகவோ தோற்றமளிக்காமல் மறைந்தொழிய எத்தனையோ இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்தன!

பயமுறுத்தல்கள், ஒதுக்கல் கொள்கைகள் ஆகிய எல்லாம் மிகக் கடுமையான முறையில் கையாளப்பட்டன! என் உரிமைகளை நான் இழக்கும்படி, என்மேல் பல்வேறு தொல்லைகள் சுமத்தப்பெற்றன! எனவேதான் புதிய சமுதாய அமைப்பைக் காண விரும்பும் “பெரும்பான்மை மக்களைப்” போன்றே, நானும் தீயசக்திகளை எதிர்த்துப் போராடுகிறேன். அவ்வாறு, போராடும் மனிதன் என்ற முறையிலேயே தமிழ் உலகின் முன் இந்த அறிக்கையை அர்ப்பணிக்கின்றேன்.

சென்ற ஆண்டும், அதற்கு முன்பும் வெளிவந்த என்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்கள் இரண்டு:

ஒன்று: சிலப்பதிகாரம்காவியமாநாடகமா? என்பது,

மற்றொன்று: தமிழும்சமஸ்கிருதமும்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவ்விரண்டு நூற்கள் தவிர, ‘திருக்குறளும் கடவுளும்’ என்ற ஆராய்ச்சி நூல் தியாகராய நகரிலுள்ள கலைஞன் பதிப்பகத்தால், வெளியிடப்பெற்றது.

‘பாப்பாப் பாட்டு’ என்ற சிறுவர் பாடல் தியாகராய நகரிலுள்ள மல்லிகைப் பதிப்பகத்தால் வெளியிடப் பெற்றது. இவைபோக சென்னை, பிராட்வேயிலுள்ள தமிழகம் என்ற வெளியீட்டகமும் என் படைப்பு ஒன்றைத் தொகுப்பு நூலில் (காதல் அமுதம்) வெளியிட்டுள்ளது.

இவற்றிற்கிடையில் மாதவி காவியம் என்ற ஒரு காவியத்தை இயற்றினேன். அது 1,065 பாடல்கள் கொண்டது.

அதனை அமைந்தகரை நண்பர் செ.து. சஞ்சீவி என்பவர் வெளியிட ஏற்பாடு செய்து, (பூம்புகார் பதிப்பகம்) என்னிடம்அந்நூலின் பதிப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளார். இது தவிர, ‘கண்ணப்பன் கிளிகள் என்ற மற்றொரு சிறு காவியத்தையும் இயற்றினேன். அதனைத் திரு. தே.ப. பெருமாள் (கவிஞர்) என்பவர் வெளியிடக் கருதியுள்ளார்.

‘பூம்புகாரில் புரட்சிப் பெண்’ என்ற என் சிறுகதைத் தொகுதியை திரு. K.R. நாராயணன் அவர்கள் வெளியிட முனைந்துள்ளார்.

இவ்வாறு தனி மனிதனாய் (Individual) நின்று, நான் வளர்வதைக் காண விரும்பாத தீயசக்திகள், என்னை இலக்கிய அரங்கினின்றும் மறைத்துவிட முயன்ற அண்மைக்கால முயற்சிகளை நான் நேரிற்கண்டேன்.

கடந்த ஆண்டு,’சோவியத் நாடு’ என்ற தமிழ் இதழில் (புது டில்லியில் இருந்து வெளியிடப்பெறும் சோவியத் சஞ்சிகை) நான் எழுதியிருந்த “சூதர்விமானம்” என்ற கவிதைக்குரிய சன்மானத் தொகையைப் பெறுவதினின்றும் என்னைத் தடுக்க முயன்ற முயற்சிகள் பல. அவற்றை நான் எதிர்த்தபோது, திரு. தே.ப. பெருமாள் (40-தி, கெங்குரெட்டி ரோடு, எழும்பூர், சென்னை-8)என்னை மேற்கண்ட முகவரியினின்றும் பலவந்தமாய் வெளியேற்றினார்!

காரணம் என்ன?

நான், 1947 இலிருந்து, சோவியத் யூனியன் சாதனைகளைப் பெரிதும் புகழ்ந்து பாடிவருபவன். முன்னணி, புதுமை இலக்கியம், ஜனசக்தி, தாமரை ஆகிய இதழ்களில், நான் எழுதியுள்ள எழுத்துக்கள் இதற்குச் சான்றாய் அமையும்.

இவ்வுண்மையைச் சோவியத் யூனியன் அறிந்து கொள்ளாமல் இருக்கவே, அதாவது, சோவியத் யூனியன் கண்களின்றும் என்னை முற்றிலும் மறைத்துவிடவே, எனக்கெதிரான இந்நடவடிக்கை கையாளப்பட்டது. தோழர், வி.பி. சகோவிச் அவர்கட்கு (‘சோவியத் நாடு’ வெளியீட்டாளர்) இது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளேன். மற்றும், “வரியற்ற திருநாடு”. “நாவாயில் நால்வர்” எனும் பெயரில் கவிதைகளையும் தோழர்வி.பி.சகோவிச்அவர்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். தவிர, இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களிற் காணும் சிறப்பியல்புகளைப் பாராட்டி, நான் ‘பாரதம்’ என்ற பத்திரிகையில் தொடர் கட்டுரை ஒன்று வரைந்தேன். அதன் தொடர்ச்சியாகவே, “நெய்வேலி நாம் பெற்ற பேறு” என்ற கவிதையை இயற்றினேன். அந்தப் பாடலைத் திரு. “சோமலெ” அவர்கள், தம், ‘நெய்வேலி’ என்ற நூலில் இணைத்துக் கொண்டார். அந்நூல் இன்ப நிலையத்தாரால் வெளியிடப் பெற்றுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்திடம் எனக்குப் பல கருத்து வேற்றுமைகள் இருப்பினும் இந்தி எதிர்ப்புக் கொள்கையில் நான் அக்கழகக் கருத்துடன் முற்றும் இணைந்தவன். வடநாட்டுப் பெரு முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தாலேயே இந்தித் திணிப்பு நடைபெறுகின்றது என்பதை உணர்ந்தவன். எனவே, திரு. ஈ.வெ.கி. சம்பத் அவர்கள், “இந்தி எதிர்ப்புப் போர்” தொடங்கக் குரல் எழுப்பியபோது நான்,”இந்தி எதிர்ப்புப் பரணி” என்ற பாடல்களை எழுதினேன். அப்பாடல்களை என்னிடமிருந்து, பெற்றுக்கொண்ட திரு. நா.வா. கலைமணி என்பவர், தாம் நடத்திய ‘தமிழர் நாடு’ இதழில், என் பெயர் இன்றிப் பாடல்களை வெளியிட்டார். அவரும் தீயசக்திகளுடன் கையிணைத்து நின்றதை நான் கண்டேன்!

அதே பாடல்களைப் பின்னர் தாய் நாடு’ என்ற இதழில் வெளியிட்டேன். மற்றும் என்மேல் பல அவதூறுகள் கிளப்பப் பெற்றன. வேண்டுமென்றே நான் நிந்தனைக்கு ஆளாக்கப்பட்டேன். தமிழ்ச் சமூகத்தின் சிறந்த புதல்வனாகிய கவிஞன் என்றோ சிந்தனையாளன் என்றோ என்னை உலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்கவே இத்தனை முயற்சிகளும் நடந்தன.

சென்னை, தியாகராய நகரிலுள்ள ஒரு பதிப்பகம் என் நூறு குட்டிக் கதைகளை வெளியிட முன்வந்து, என்னிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்றுக்கொண்டபின், நேரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மறுத்தும் என் விருப்பத்திற்கு மாறான நிலையில் என் நூலைப் பயன்படுத்தக் கருதியும் செய்த சூழ்ச்சியை நான் நேரிற் கண்டறிந்தேன். எனவே, எனக்கெதிரான சூழ்ச்சி வலையில், அப்பதிப்பகம் மேலும் ஒரு கண்ணியாய் இடம் பெற்றதையும் அறிந்தேன்.

இவ்வாறு மறைமுகமாகவும், வெள்ளிடையாகவும் என் ஆற்றலை மறைக்க என் தமிழ்ப் புலமைக்குத் திரையிட, நான் ஒரு கவிஞன் என்பதை இருட்டடிப்புச் செய்ய நான் இயற்றியுள்ள நூற்களை ஆள் மாறாட்டம் செய்ய நடந்த முயற்சிகளைக் கண்டு துணுக்குற்றேன்.

அம்முயற்சிகளை நான் எதிர்க்கின்ற காரணத்தால், இன்று, என்னைச் சுற்றி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதை நான் காண்கின்றேன். மேலும், பல்வேறு சமயங்களில் நான் பயமுறுத்தப்பட்டுள்ளேன்.

1949 இல் ‘ஜனயுகம்’ என்ற மார்க்கியத் தத்துவ மாதப் பத்திரிகை (Theoritical Monthly) ஒன்றை என் பெயரிலேயே தொடங்கி நடத்தினேன். அப்பத்திரிகையைப் பதிந்துகொண்டபோது, நான் கொடுத்துள்ள வாக்குமூலத்தை, இன்று மீண்டும் தெரிவிக்கும் நிலையில் உள்ளேன். நான் பிறந்த ஊர்: ஆடூர், குறிஞ்சிப்பாடி, தெ.ஆ. மாவட்டம்; பெற்றோர்: சின்னசாமி, செங்கேணி அம்மாள்; பிறந்த ஆண்டு: 1925; பெற்றோர் இட்டபெயர்; விஜயரங்கம் என் நூற்களில் பதிவான பெயர்; தமிழ் ஒளி; (என்ற) கவிஞர் தமிழ்ஒளி.

பதினைந்து ஆண்டுகளாய்க் கவிதை எழுதும் தொழிலை மேற்கொண்டு வருவதால், கவிஞர் தமிழ்ஒளி என்ற பெயர் நிலைபேறுடையதாய் மாறிவிட்டது.எனவே 1959 தொடங்கி வெளிவந்த என் நூற்களில், கவிஞர் தமிழ்ஒளி என்றே என் பெயர் பதிவாகியுள்ளது.நடைமுறை உண்மை இவ்வாறிருக்க, என் எதிரிகள், கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர்.

என் மாதவி காவியத்தின் முழு பதிப்புரிமையையும் திரு. செ.து சஞ்சீவிக்கு நான் விற்றுள்ளேன் என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா? அதற்கென நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் சான்று கையெழுத்திட்டனர் இருவர்: திரு. கிருஷ்ணசாமி, திரு. விந்தன் இருவரும்.

இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இவ்விவரங்கள் முற்றும் நம்பத்தகுந்தவை என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

மற்றும் ஒரு குறிப்பு:

பூம்புகார் பதிப்பகம்

13-கி. சேக் சதுர்தீன் சாகிபு தெரு,

அமைந்தகரை, சென்னை -29.

என்ற முகவரியினின்றும் சுணக்கெடுப்பில் என் பெயரைச் சேர்த்துள்ளேன். என்னுடைய குடியிருப்பு முகவரி:

சட்டூர் லாட்ஜ் (அறை எண். 2. பி.)

  1. பெரம்பூர் பாரக்ஸ் ரோடு,

வேப்பேரி, சென்னை -7.

ஆனால், இக்குடியிருப்பு முகவரியினின்றும் என் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமலிருந்ததற்குக் காரணம் தெரியவில்லை.எனவே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தமிழ் மக்களின் முன் இவ்வுண்மைகளை வெளிப்படுத்தவும் இவ்வறிக்கையை வெளியிடுகின்றேன்.

தமிழ்நாடு அரசியலாரின் கல்வித்துறை, நீதித்துறை, செயலாண்மைத் துறை, (Madras Secreteriat) காவல்துறை(போலீஸ் இலாக்கா) சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு இவ்வுண்மைகளை நான் இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய தலைமுறையின் சிறந்த தமிழ் அறிஞன் என்ற முறையில் என் உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி. இவ்வறிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசியலாரை வேண்டுகின்றேன்.

எனக்கிருக்கும் ஒரே ஒரு சாதனம் அச்சுவாகனம்/ (Press) அதன் துணைகொண்டு வெளியிடும் இவ்வறிக்கை, நான் கொட்டுகின்ற சத்திய பேரிகை! என்று தனது வாழ்க்கைப் போராட்டங்களைப் பதிவுசெய்துள்ளார்.

(வீ.அரசு. தோழர் தமிழ் ஒளி. தொகுதி – 6. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை. ஏப்ரல் 2025)

பதினெட்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்துள்ளார். பொதுவுடைமை இயக்கத் தோழரின் சகோதரி ஒருவர் கவிஞர் தமிழ்ஒளியை விரும்பியுள்ளார். ஆனால் சாதி ஒரு பக்கம் பொருளாரம் ஒரு பக்கம் தடையாக இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் தந்தையார் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவரைக் கண்டித்துள்ளனர். பின்னர் தாம்பரத்தில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டுப் பாண்டி பஜாரில் சுற்றிக்கொண்டிருப்பதாக செ.து. சஞ்சீவிக்குச் செய்தி தெரியவந்துள்ளது. உடனே தோழர் முருகேசனுடன் சென்று சுவிஞர் தமிழ்ஒளியை அழைத்து வந்து திருவொற்றியூர் தோழர் தியாகுவிடம் தமிழ்ஒளியை ஒப்படைத்துள்ளனர். தோழர் தியாகுவின் இல்லத்தில் இருந்தபோது அங்கிருந்து அப்பெண்ணைப் பார்ப்பதற்குக் கவிஞர் தமிழ்ஒளி சென்றுள்ளார். அப்பெண் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அந்தப் பெண் உணவு கொடுத்து செலவிற்குப் பணம் கொடுத்து எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். ஆலமரம் அடிசாய்ந்தது போல் கவிஞர் தமிழ்ஒளி மனவேதனையுடன் திரும்பியுள்ளார். தேனாம்பேட்டையில் சில காலம் இருந்துள்ளார். மற்றும் வாடகை வீட்டில் வசித்துள்ளார். இதைப்பற்றி மேதின ரோஜா காவியத்தில் கூறியுள்ளார்.

ஒருமுறை தங்குவதற்கு இடமில்லாதபோது இரவு ஒரு மணிக்குச் சந்தேக வழக்கில் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது தான் ஒரு கவிஞர் என்று சொல்லி வெளியே வந்துவிட்டார். புரசைவாக்கத்தில் உள்ள சட்டூர் லாட்ஜில் சில காலம் தங்கியுள்ளார். பின்னர் அமைந்தகரையில் உள்ள நிர்மலா லாட்ஜியிலும் தங்கிக் கவிதைகள் எழுதுவது மற்றும் நண்பர்களைச் சந்திப்பது என்று வாழ்ந்துள்ளார். சென்னையில் சில காலம் உண்ண உணவும் இல்லை உடுக்க உடையும் இல்லை, உறங்க இடமும் இல்லாமல் தவித்துள்ளார். சில நேரங்களில் சென்னையில் உள்ள பூங்காவில் அமர்ந்து கவிதைகள் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றதில்லை.அனைத்து உதவிகளும் செய்து காப்பாற்றியவர் செ.து. சஞ்சீவி அவர்களே! இவர் இல்லையேல் தமிழ்ஒளி படைப்புகள் வெளியுலகம் அறிந்திருக்க முடியாது.புரசைவாக்கத்தில் தங்கியிருந்தபோது கிருபானந்த வாரியார் சொற்பொழிவைக் கேட்டுக் கட்டளைக் கலித்துறையால் எழுதப்பட்ட ‘உயிர் ஒலி’ எனும் நூலை கி.வா. ஜகந்நாதன் அவர்களிடம் கலைமகள் இதழில் வெளியிடுமாறு கொடுத்தார். அவர் வெளியிட முடியாது எனக் கூறியபோது, அதனைச் சுக்கு நூறாய்க் கிழித்துப் போட்டுவிட்டார். எலும்புருக்கி நோயினால் அவதிப்பட்ட தமிழ்ஒளியைச் சென்னைப் பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவம் சரியில்லை எனக் கூறி வெளியேறிவிட்டார்.புதுச்சேரிக்கு அனுப்பி வைத்து ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்தும் வெளியேறிவிட்டார். 1961 ஆம் ஆண்டு சென்னையில் வறுமையில் வாடியபோழுது ‘போராடும் மனிதனில் புதிய உண்மைகள்’ என்ற சிறிய கையேட்டை வெளியிட்டார்.ஒரு கவிஞனுக்குப் பெருமை சேர்ப்பதும், அவனுடைய எழுத்துக்கு வலிமை கூட்டுவதும் உரமான சிந்தனையும் உன்னதப் படைப்புகளுமேயாகும். எதிர்காலம் என்பது அவரவர் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்தே அமைகிறது, அதனைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. என்பதற்கு ஏற்ப இம்மண்ணில் வாழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி.

இறுதிப் பயணம்

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து பத்துமாதக் காலம் காசநோயால் அவதிப்பட்டார். மன உளைச்சலுக்கு ஆட்பட்டு ஓலைக்குடிசையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து, தனது 40 ஆவது வயதில் 29.03.1965 அன்று மறைந்தார். மாகவிஞன் மறைவுச் செய்தியைக் கலைமகள், அமுதசுரபி ஏடுகள் உலகம் அறியச் செய்தன. புதுச்சேரி, கருவடிக்குப்பம் இடுகாட்டில் சங்கரதாஸ் சுவாமிகள் சமாதிக்கு வடக்குப் பக்கத்தில் தமிழ்ஒளிக்குச் சமாதி அமைந்துள்ளது. அனைவருக்குமான சமத்துவ உலகத்தை வலியுறுத்திய கவிஞர் தமிழ்ஒளிக்கு அவர் வாழ்ந்த காலத்திலும், இறந்த பின்னும் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டுமாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (27.02.2024) தஞ்சை  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத்தில் கவிஞர் தமிழ்ஒளி சிலை திறந்து வைக்கப்பட்டது.100 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசுகவிஞர் தமிழ்ஒளிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை வைத்து அங்கீகாரம் தந்துள்ளது. தமிழ் ஒளியின் சிந்தனைகளையும், எழுத்துகளையும் கண்டறிந்து கொண்டாட வேண்டிய கடமை நாம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அய்யன் திருவள்ளுவரைப் போல், மகாகவி பாரதியைப் போல், பாவேந்தர் பாரதிதாசனைப் போல்  கவிஞர் தமிழ் ஒளியைக் கொண்டாடுவோம்.

பார்வை நூல்கள்

      1. செ.து.சஞ்சீவி. கவி்ஞர் தமிழ்ஒளி, சாகித்ய அகாதெமி, சென்னை. 2004

  1. செ.து.சஞ்சீவி. கவிஞர் தமிழ்ஒளியின் கவிதையும் வாழ்வும், பாவை பப்ளிகேஷ்ன்ஸ், சென்னை. 2010
  2. பாவலர் ச. பாலசுந்தரம். நினைவலைகள், அய்யா நிலையம், தஞ்சாவூர் -2008
  3. வீ. அரசு. தோழர் தமிழ்ஒளி. தொகுதி – 6.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை -2025
  4. முனைவர் மு.ம. சச்சிதானந்தம். களப்போராளி கவிஞர் தமிழ்ஒளி, பகவதி பதிப்பகம், புதுச்சேரி – 2024

கட்டுரையாளர்;உதவிப்பேராசிரியர்,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். மின்னஞ்சல் ; elayarajas1@gmail.com

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.