’தலைவலி’ பயணமாக மாறிய திருச்சி – பெரம்பலூர் பேருந்து சேவை !
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு திருச்சி மாநகர் – மாவட்டம் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது. பல்வேறு தேவைகளுக்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், நாமக்கல், அரியலூர் ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் இலட்சக்கணக்கான பயணிகள் திருச்சி மாநகர் – மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் ஒருபுறமிருக்க, கல்லூரிகளின் கேந்திர மையமாக திருச்சி விளங்கி வருவதால் கல்லூரி மாணவர்களும் கணிசமாக பேருந்து சேவையை பிரதானமாக நம்பி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, அதிகபட்சம் 1 – 2 மணி நேரத்திற்குள் திருச்சியை அடைந்துவிட முடியும் என்பதால், தினசரி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒப்பீட்டளவில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டங்களுக்கிடையிலான பேருந்து சேவையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மத்திய பேருந்து நிலையத்திற்கு நேரடி சேவை :
தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து நேரடியாக மத்திய பேருந்து நிலையத்தை அடையலாம். ஆனால், அரியலூர், பெரம்பலூர் மார்க்கத்தை பொறுத்தவரை சத்திரம் பேருந்து நிலையத்தோடு சரி. அங்கிருந்து மற்றொரு பேருந்தை பிடித்து, மத்திய பேருந்து நிலையம் சென்றாக வேண்டும். முக்கியமாக, நீதிமன்றம், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அன்றாடம் பயணிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
குறைந்தபட்சம், பள்ளி கல்லூரி அலுவலக நேரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பீக் ஹவர் சர்வீஸ் பேருந்துகளை பெரம்பலூர் – மத்திய பேருந்து நிலையம் வரை இயக்கினால், பலர் பயனடைவார்கள்.
சமயபுரம் டோல்பிளாசா ஸ்டேஜ் சிக்கல் :
அடுத்து, பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் வரை செல்ல வேண்டிய பயணிகள் சமயபுரம் டோல்பிளாசா-வில் இறங்கி, சென்னையிலிருந்து வரும் புறநகர் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற தருணங்களில், சமயபுரம் ஸ்டேஜ் போடாமல், அதற்கு முந்தைய சிறுகனூர் ஸ்டேஜில்தான் பயணக்கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இது, பெரும் நடைமுறை சிக்கலாக தொடர்ந்து வருகிறது. டோல்பிளாசாவை சமயபுரம் ஸ்டேஜுக்கு கொண்டு வந்தால், அன்றாடம் பயணிப்போர் பலரும் பயனடைவார்கள்.
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் :
பெரம்பலூர் தொடங்கி சமயபுரம் டோல்பிளாசா வரையில் மட்டுமே சிறுவாச்சூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, சமயபுரம் டோல்பிளாசா தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைகழகம், எஸ்.ஆர்.எம்., எம்.ஏ.எம்., கிருஷ்ணா குரூப் கல்லூரிகள், இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஜினியரிங் கல்லூரி, விஜிபி என்ஜினியரிங் கல்லூரி, சூரியா என்ஜினியரிங் கல்லூரி, விக்னேஷ் பாலிடெக்னிக் என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தந்த கல்லூரிகளுக்கான கல்லூரி பேருந்து சேவை இருப்பினும், கல்லூரி பேருந்து சேவையை பயன்படுத்தாத மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவையை மட்டுமே நம்பி கல்லூரி சென்று வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரி, எஸ்.ஆர்.சி. கல்லூரி, ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி, குறிஞ்சி கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, நேஷனல் கல்லூரி, தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி, ஜமால் முகம்மது கல்லூரி, துவாக்குடி அரசு கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, அரசு பாலிடெக்னிக் என அன்றாடம் கல்லூரிகளுக்காக பயணிப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றி இயங்கிவரும் இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரி, எஸ்.ஆர்.சி. கல்லூரி, ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பெரும்பாலும் அரசு – தனியார் பேருந்துகளை நம்பியே கல்லூரி சென்று வருகிறார்கள்.
இந்த பின்புலத்தில் கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். தனியார் பேருந்துகளோ புளிமூட்டை போல பயணிகளை திணித்து ஏற்றிச் செல்கிறார்கள். அரசு பேருந்துகளை பொறுத்தமட்டில், புறநகர்ப்பேருந்து சேவை என்பதால், நடுவில் நாலு பேர், படியில் நாலு பேரை ஏற்றினாலே பேருந்து நிரம்பி வழிந்து விடுகிறது. அடுத்து, ஏற்கெனவே படியில் தொங்கிவரும் நிலையில், இடைப்பட்ட சில பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி – இறக்க முடியாத நடைமுறை சிக்கலை எதிர்கொள்கிறார்கள். கல்லூரி நேரத்தை கணக்கிட்டு அந்தக் குறிப்பிட்ட பேருந்துக்காக காத்திருந்தும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும்போது, மாணவர்கள் வேறு வழியின்றி எவ்வளவு கும்பல் இருந்தாலும் பரவாயில்லை என்று அடுத்துவரும் தனியார் பேருந்தில் பயணித்தாக வேண்டிய இக்கட்டிற்கு தள்ளப்படுகிறார்கள். சில தனியார் பேருந்துகளோ, எம்.ஏ.எம்., எஸ்.ஆர்.எம். உள்ளிட்டு சில குறிப்பிட்ட கல்லூரிகளில் பேருந்து நின்று செல்லாது என்று இரவு நேரத்திலும்கூட அடாவடியாக மறுத்துவிடுகிறார்கள்.
சிறப்பு பேருந்து – கட் சர்வீஸ் சேவை சாத்தியமாகுமா?
இந்த நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, ஒன்று பெரம்பலூர் – டோல்பிளாசா வரையிலும்; மறுமார்க்கத்தில் டோல் பிளாசா – சத்திரம் பேருந்து நிலையம் வரையிலுமாக இரண்டு மார்க்கங்களில் சென்னை மாநகரப்பேருந்து சேவையில் நடைமுறைப்படுத்தப்படுவதைப்போல, கட் – சர்வீஸ் பேருந்துகளை இயக்க முடியுமா? என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்களா?
அல்லது, பீக் ஹவர்ஸ் நேரங்களில் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதோடு, அத்தகைய பேருந்துகளை புறநகர் வகை பேருந்துகளை இயக்குவதற்கு பதில், அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் நகர பேருந்துகளை இயக்குவது குறித்தும் பரிசீலிப்பார்களா?
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டியிருக்கிறோம். போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம்தான் பொருத்தமான தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
— வே.தினகரன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.