“நோ சொன்ன இசைஞானி”
டைரக்டர் கார்திக் சுப்புராஜின் 10-ஆவது படம், இசைஞானி இளையராஜாவுடன் கார்த்திக் சுப்புராஜ் இணையும் முதல் படம் ‘டோரதி’. 1990-களில் மதுரையில் நடக்கும் கதை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், முத்துக்குமார், முத்துப்பாண்டி, செளந்தர் ராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் [செப்.25] ரிலீசாகும் ‘டோரதி’யின் புரமோஷனை சென்னையில் இசைஞானி இளையராஜாவை வைத்து ஆரம்பித்தார் கார்த்திக் சுப்புராஜ். கடந்த வாரம் டொராண்டோவில் நடந்த இண்டெநேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில், திரையிடப்பட்டு, வெளிநாட்டினரிடம் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து மதுரை சேது கல்லூரியில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்திய கார்த்திக் சுப்புராஜ், சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்.22-ஆம் தேதி இரவு நடத்தினார்.
இதில் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், ஹீரோக்கள் ரிஷிகாந்த், சனந்த், நடிகர்கள் செளந்தர் ராஜா, முத்துக்குமார், முத்துப்பாண்டி, கேமராமேன் திரு, எடிட்டர் கணேஷ் சிவா, ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன், சவுண்ட் டிசைனர் குரியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “இந்தப் படத்தின் கதையைச் சுருக்கமாக என வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பினார் கார்த்திக் சுப்புராஜ். அதைப் படிச்சதுமே ஓகே சொல்லிட்டேன். டோரதின்னா கடவுளின் பரிசுன்னு அர்த்தம். எனது சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் இது” என்றார்.
அதன் பின் பேசியவர்கள் அத்தனை பேருமே இது ரொம்பவும் முக்கியமான படம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது, “நான் மதுரை மண்ணின் மக்களின் அன்பை, பாசத்தை, கோபத்தை அருகில் இருந்து பார்த்தவன், இப்போதும் பார்த்துக் கொண்டிருப்பவன். என்னுடைய ‘இறைவி’ படம் எனது உறவுகள், நண்பர்களின் வாழ்க்கையில் நடந்தது. இந்த ‘டோரதி’யும் அப்படிப்பட்ட கதை தான். விக்ரமை வைத்து ‘மகான்’ படத்தை எடுத்த போதே இதன் கதையை எழுதிவிட்டேன். அதன்பின் தலைவர் ரஜினியை வைத்து ‘பேட்ட’, சூர்யாவை வைத்து ‘ரெட்ரோ’ என வரிசையாக படங்களை கமிட் பண்ணியதால் டோரதியை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை. ஒருவழியாக இப்ப தான் முடிஞ்சிருக்கு.
இதில் நடிப்பவர்களை முடிவு பண்ணிய பிறகு, நானும் கேமராமேன் திருவும் லொக்கேஷன் பார்க்க, காரில் மூன்று மணி நேரம் டிராவல் பண்ணும் போது இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே போனோம். அது தான் என்னை இசைஞானியிடம் போக வைத்தது. கதையைக் கேட்ட பிறகு அவர் சம்மதித்து உள்ளே வந்த பிறகு நடந்தவை எல்லாமே மேஜிக் தான். அவரின் பின்னணி இசை தான் படத்திற்கு மிகப்பெரிய பரிசு.
”முத்துமணி” பாடலை வீடியோ ஆல்பமா பண்ணலாம்னு ஐடியா பண்ணி, அதில் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டப்ப, ”அதெல்லாம் சரிப்பட்டு வராதுய்யா. நான் நடிகன் கிடையாது”ன்னு சொல்லி மறுத்துட்டார். சார் நீங்க நடிக்க வேணாம், சும்மா வந்து நின்னு கையை அசைச்சார் போதும்னு சொல்லி சம்மதிக்க வச்சேன். அவர் வந்து நின்னதே பெரிய மாஸ் ஹீரோ வந்து நின்னது மாதிரி அபாரமா இருந்துச்சு. தேங்க்ஸ் ராஜா சார்” என்றார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.