அங்குசம் பார்வையில் ‘மீசைய முறுக்கு-2’
‘கல்வித் தந்தை’ ஏசி.சண்முகம் நல்லாசியுடன் ‘அவ்னி மூவிஸ்’ பேனரில் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் குஷ்பு சுந்தரும் அனந்திதா சுந்தரும். கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள், இசை & ஹீரோ ஹிப்ஹாப் தமிழா ஆதி. சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், கீத்திகா ஷர்மா, யோகிபாபு, கருணாகரன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், ஹர்ஷத்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
1979, சென்னை மயிலாப்பூர் ஏரியாவின் ஒருபகுதியில் கானா பாடகராக இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இவரை ‘அவாள்கள்’ பாடும் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடவைத்து உலகப்புகழ் பெற வைக்க முயற்சிக்கிறார் அதே அவாள் இனத்தைச் சேர்ந்த கருணாகரன். ஆனால் அங்கே தமிழாவுக்கு அவமானம் ஏற்படுகிறது. நானும் சாதிச்சுக்காட்டுறேன் என அவாள் ஆடுகளம் நரேனிடம் சவால்விடுகிறார் ஹிப்ஹாப். சவாலில் ஜெயித்து உலகப்புகழ் கானா பாடகரானாரா? என்பது தான் இந்த ‘மீசைய முறுக்கு-2’.
1979 எபிசோட் முடிந்ததும் 2026-க்கு ஜம்ப் ஆகிறது கதை. இங்கே இளவட்டம் ஹிப்ஹாப் தமிழா, ராப் பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடுகிறார். இவரது அப்பா பாபா பாஸ்கர், மாநகர பேருந்து டிரைவராக இருந்து மகனின் லட்சியத்திற்கு சப்போர்ட்பண்ணுகிறார். இந்த ஹிப்ஹாப் பெரிய ராப் சிங்கரானாரா?
சினிமாவில் துணை நடிகராக, குரூப் டான்ஸராக, ஃப்ரண்ட்ஸ்களுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் ஹிப்ஹாப். இடைவேளை வரை கதை என்ன? திரைக்கதை எதை நோக்கிப் போகுதுன்னு ஒண்ணுமே புரியல. அப்பப்ப யோகிபாபு எண்ட்ரியாகி சிரிக்க வைக்க முயற்சி பண்ணியும் எந்த சீனும் ஒர்க்-அவுட் ஆகல.
இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்த ரெண்டாவது சீன்லயிருந்து கொஞ்சம் க்ரிப் கிடைச்சு, ஸ்மூத்தா போகுது ஸ்கிரிப்ட். ஃப்ளாஷ்பேக்கில் வரும் தாஸ்[கருணாஸ்], சிவா[ பாபா பாஸ்கர்] ஆகிய ரெண்டு பேரும் ஹிப்ஹாப் தமிழா தான் என்பது புரிவதற்கு க்ளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டியிருக்கு.
தனது அப்பாவின் ஃப்ளாஷ்பேக்கை கருணாஸ் சொல்லி முடித்ததும் கண்கலங்கும் சீன் உட்பட சில சீன்களில் பளிச்சிடுகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நடிப்பைவிட இவரது வசனம் தான் படு ஷார்ப். “ஒரு மைதானத்தை மூடிவச்சு, அதுக்குள்ள அவனுகளே ஓடி, பந்தயம் வச்சு ஜெயிச்சுக்கிட்டிருக்கானுக”, “நாங்க மைக் இல்லாமல் பாடுறதால, உங்களுக்கு சங்கீதமா கேட்காது, சத்தமாகத் தான் கேட்கும்”, “சங்கீதம்கிறது அந்த கும்பலுக்கு மட்டும் சொந்தமில்லடா”, “மகனை அப்பன் அடிக்கிறது ஆத்திரத்துல இல்ல, அக்கறைல” இப்படி பல சீன்களில் ஹிப்ஹாப் தமிழாவின் வசனம் அனல் வீசுகிறது, அன்பைப் பேசுகிறது.
சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், கீத்திகா ஷர்மா ஆகியோர் இருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் கருணாஸுக்கு நல்ல வெயிட்டான கேரக்டர். சங்கீத வித்வானாக நாசர், இவரது மகனாக பக்ஸ் ஆகியோர் வந்து போகிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு தான் மீசைய லைட்டா முறுக்கியிருக்கிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘மீசைய முறுக்கு-2’ 41/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.