“இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு” சொல்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்!
வரும் அக்டோடபர் 02-ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘லவ்’ வெப் சீரிஸ். ஷோ ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றியுள்ள இந்த சீரிஸை, ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘மாரி’, ‘மாரி-2’ போன்ற படங்களை டைரக்ட் பண்ணிய பாலாஜி மோகன் டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் மேத்யூ என்ற கேரக்டரில் அர்ஜுன் தாஸும் தாரா என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்துள்ளனர்.
‘லவ்’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 25-ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இதில் பேசியவர்கள்…

நெட்ஃப்ளிக்ஸ் மோனிகா ஸ்ரீவாஸ்தவ், “தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இரண்டு ‘டேட்டிங் ஆப்’ நிறுவனர்கள் தான் கதையின் மாந்தர்கள். காதல் குறித்த எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத் தொடரில் சொல்லியுள்ளார் டைரக்டர் பாலாஜி மோகன். எப்போதும் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுடன் நாங்கள் இணைந்திருப்பது பெரிய கெளரவம். ஆரம்பம் முதலே தெளிவான, உறுதியான பார்வையுடன் இருந்து இத்தொடரை தயாரித்துள்ளார் செளந்தர்யா”.

டைரக்டர் பாலாஜி மோகன், “காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன். சினிமாக் காதல் போல நிஜ வாழ்க்கையிலும் அதே போன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதே நேரம் காதலைப் பற்றிய சில கனவுகளையும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் கனெக்ட் பண்ணி இந்த ‘லவ்’ வெப் சீரிஸில் சொல்லியிருக்கேன்”.

செளந்தர்யா ரஜினிகாந்த், ”பொதுவாக நான் யாரைப் பார்த்தும் வியப்படையவதில்லை. ஏன்னா எனது தந்தை இந்தியாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார் என்பதால் அந்த நினைப்பு என்னுள் இருக்கும். ஆனால் இந்த வெப் சீரிஸிக்கான வாசிப்பு மும்பையில் நடந்த போது என்னை வியக்க வைத்தவர் மோனிகா ஸ்ரீவாஸ்தவ் தான். நெட்ஃப்ளிக்ஸின் ஷோ ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய பொறுப்புடன் இந்தத் தொடரை தயாரித்துள்ளேன். சில முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும் சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த சீரிஸ் தயாரிப்பின் மூலம் கற்றுக் கொண்டேன்”.
அர்ஜுன் தாஸ், “இதில் வரும் மேத்யூ கேரக்டரை தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேரக்டராக என்னை அதிகம் கவர்ந்தது, அவரது உணர்வுகளும் கதையில் அவர் வெளிப்படுத்தும் பலவீனமான பக்கங்களும் தான்”.
ஐஸ்வர்யா லட்சுமி, “தாராவாக நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. என்னை தாரா கேரக்டரும் 80% ஒப்பிட்டுப் பார்க்கலாம்”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.