பெயரை வைத்து எடை போட்டுவிடாதீர்கள் !

அட இது தெரியாம போச்சே – பாகம்  23

அந்த தாவரத்தின் பெயர்தான் குப்பைமேனி. ஆனால், அது ஒரு அற்புதமான மூலிகை. மேனியில் (உடலில் ) உள்ள குப்பைகளை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத மருந்து.

குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துத் தோலில் பூசி வந்தால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பூஞ்சை தொற்றுகள் குணமாகும். இலையை கசக்கி பற்று போல கட்டிகள் மீது வைத்தால், அவை விரைவில் பழுத்து உடையும். நெஞ்சில் கட்டியிருக்கும் நாள்பட்ட கபத்தை (சளி) இளக்கி வெளியேற்றும் குணம் கொண்டது குப்பைமேனி.

குப்பைமேனி இலைகளை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தைலமாக மாற்றி, மூட்டு வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்து வர வலி குறையும்.

குடலில் தங்கியுள்ள நாடாப்புழு, உருளைப்புழு போன்ற நச்சுப் பூச்சிகளை வெளியேற்ற இதன் இலைச்சாறு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குடலைச் சுத்தப்படுத்தும், மலமிளக்கியாகவும் செயல்படும். ஆகவே, குப்பை மேனி செடியை குறைச்சு மதிப்பிட்டுவிடாதீர்கள்.

—  பேரா.சா.அருள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.