திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிர ஆய்வு!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 மற்றும் 5 ஆகிய மண்டலங்களில் வார்டு எண் 55 மற்றும் 56 விஸ்வாஸ் நகர் , ஜெயா நகர் மெயின் ரோடு, குறுக்கு தெரு பகுதியில் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனப் பொதுமக்களிடமிருந்து தரம் பிரித்துச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை வாங்கும் பொழுது பொதுமக்கள் தங்களது வீட்டில் உருவாகும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குமாறும் பொது மக்களிடம் ஆணையர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் , தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார்கள். தூய்மைப் பணியாளர்கள் வீடுகள் தோறும் சேகரிக்கும் குப்பைகள் சரியாகத் தரம் பிரிக்கப்பட்டுப் பெறப்படுகிறதா எனப் பார்வையிட்டு, களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆய்வின்போது ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது , தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே குப்பைகளை மக்கக் கூடியவை, மக்காதவை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும். இதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அரசின் இவ்வழிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்றினால், மாநகராட்சியின் பொதுச் சுகாதாரத்தைப் பேணிக்காக்கப் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக 56வது வார்டு விஸ்வாஸ் நகர் மெயின் ரோடு , குறுக்கு சாலை பகுதி மற்றும் கோரையாறு கரையோர பகுதிகளில் ஆணையர் அவர்கள் குப்பைகள் கொட்டி இருப்பதே நேரில் ஆய்வு செய்து அதனை அகற்ற உத்தரவிட்டு அங்கு குப்பைகள் கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள் .






Comments are closed, but trackbacks and pingbacks are open.