பெங்களூரு விமான நிலையத்தில் திருச்சி வரும் விமானத்திற்காக விமான நிலைய பேருந்தில் ஏறி விமானத்திற்கு உள்ளே செல்ல பயணிகள் பலரோடு நானும் காத்திருந்தேன்.
அரசியல்வாதிகளைப் போலிருந்த இருவரை விமான நிலைய அதிகாரிகள் ராஜ மரியாதையோடு முதலாவதாக விமானத்தின் உள்ளே ஏற்றி விட்டனர். இந்தியாவின் பெருமையை சிகரத்திற்கு உயர்த்திய பெருமைக்குரிய ஒருவர் தன் மனைவியோடு விமானத்தில் ஏறப் போனபோது, விமான நிலைய கள ஊழியர்கள் ‘ சார்.. அவசரப்படாதீங்க .. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… அந்த விஐபிக்கள் ஏறட்டும்’ என்று நிறுத்தினார்கள். எளிமையான அந்த மனிதரும் சிரித்துக்கொண்டே எங்களோடு வெயிலில் நின்று காத்திருந்தார்.
அந்த எளிய மாமனிதரைப் பார்த்து நான் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி, திருச்சியில் என்ன நிகழ்ச்சி சார் என்று கேட்டேன். ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன் என்றார். காத்திருந்த பயணிகளில் பலர் கோபத்தோடு விமான ஊழியர்களை திட்டத் தொடங்கினார்கள்.
இந்த நாட்டை கெடுக்கிறவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறீங்க…நம்ம நாட்டின் பெருமைக்குக் காரணமான இந்த உயர்ந்த மனிதரை, சிறந்த மனிதரை, பெருமைக்குரிய மனிதரை இப்படி வெயிலில் நிற்க வைக்கிறீர்களே… என்ன நியாயம்… இவருக்கு முதல் மரியாதை கொடுங்கள்… என்று சத்தம் போட்டார்கள்.
சுதாரித்துக் கொண்ட விமான ஊழியர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதில் ஒரு ஊழியர் அவரிடம் ஒரு செல்பி எடுத்துக் கொண்டு, செல்பியை பார்த்துக்கொண்டே என்னிடத்தில் கேட்டார் …. யார் சார் அவரு…?
நான் சொன்னேன்.. இவர்தான் இஸ்ரோவின் முன்னாள் தலைவர், விஞ்ஞானி சிவன். இந்தியாவின் ராக்கெட் மனிதன் என்று அழைக்கப்பட்டவர். சந்திராயன் 2 வை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தவர்.
அதன் பிறகு விமான நிலைய ஊழியர்களும் சக பயணிகளும் அவர் மீது மிகுந்த மரியாதை செலுத்தியதை நேரில் கண்டேன். விமானத்தை விட்டு அவர் இறங்கிய பிறகும் கூட பலர் அவருடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் பார்த்துவிட்டு அவருக்கு வணக்கம் சொல்லி நான் புறப்பட்டேன்.
தமிழர்கள் உணர்வுமயமானவர்கள் என்ற பலரது எண்ணத்தை முறியடித்து தமிழர்கள் அறிவுமயமானவர்கள் என்பதை சக பயணிகள் நிரூபித்துக் காட்டினார்கள். அவர்களுக்கு நமது நன்றி !
— தங்க மூர்த்தி, கல்வியாளர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.