கம்பன் புகழ் விருது பெற்ற கலைமாமணி ”பூபதி பெரியசாமி”
சிறார் இலக்கியம் -14 - ஆசிாியா் அறிமுகம்
பூபதி பெரியசாமி (1964) புதுச்சேரியில் பிறந்த இவர், பாவேந்தரின் ‘குயில்’ இதழின் துணை ஆசிரியர் பெரியசாமி – பாக்கியம் இணையரின் மகனாவார். புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் துணை இயக்குனர் பொறுப்பு வகித்தவர். நல்லாசிரியர் விருது பெற்றவர்.
புதுச்சேரி அரசின் நேரு குழந்தைகள் இலக்கிய விருதினை இருமுறையும் கம்பன் புகழ் விருதையும் பெற்றவர். இவரது சிறுகதைகள், தமிழகம், புதுச்சேரி மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன. மேலும், ‘சிறுகதைச் செல்வர்’, ‘சிறுகதை சித்தர்’, ‘சிறுகதைச் செம்மல்’ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறுவாணி வாசகர் மையம், அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம், இலக்கிய பீடம் இதழ், மணிமேகலைப் பிரசுரம், கவிதை உறவு, லேடீஸ் ஸ்பெஷல் இதழ், நம் உரத்த சிந்தனை, சென்னை மதிஒளி இவை நடத்திய போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.
‘திருப்பூர் தமிழ்ச்சங்கம்’, ‘கரூர் திருக்குறள் பேரவை’, ‘சேலம் தமிழ்ச்சங்கம்’, ‘ராஜபாளையம் மணிமேகலை மன்றம்’, ‘ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை’, விருதாச்சலம் தமிழ்ப்பல்லவி, புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் போன்ற இலக்கிய அமைப்புகள் இவரது சிறுகதைத் தொகுப்புகளை சிறந்தவையாகத் தேர்வு செய்துள்ளன. இதுவரை 12 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார் .அதில் ஆறு சிறார்களுக்கானது.

கலைமாமணி பூபதி பெரியசாமி நேர்காணல் பதில்கள்:
1.தங்களைக் குறித்து கூறுங்கள்?
நான் கலைமாமணி பூபதி பெரியசாமி. புதுச்சேரியைச் சேர்ந்தவன். கல்வித்துறையில் துணை இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது சாகித்திய அகாடமி பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித்துறையில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். சிறுகதை மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
2.சிறார் இலக்கியத்தை தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?
சிறுவர்களே எதிர்கால சமுதாயத்தின் அடித்தளம். அவர்களின் சிந்தனை, கற்பனை, மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்கும் வலிமை இலக்கியத்துக்கே உள்ளது. அதனால் சிறுவர்களுக்கான நல்ல கருத்துகளை எளிமையாகச் சொல்லும் நோக்கில் சிறார் இலக்கியத்தைத் தேர்வு செய்தேன்.
3.தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?
நான் கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியனாக 1987 பணியில் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக, பட்டதாரி ஆசிரியர், விரிவுரையாளர்(இயற்பியல்), துணை முதல்வர் ஆகிய பணிகளுக்கு பதவி உயர்வு கிடைத்தது. 2022ல் புதுச்சேரி அரசின் கல்வித்துறை தொடக்கக் கல்விப் பிரிவில் துணை இயக்குநராக இருந்து 2023ல் பணி ஓய்வு பெற்றேன்.
4.தற்கால சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?
இன்றைய சிறார் இலக்கியம் பல்வேறு தளங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதில் நல்ல மதிப்புகள், பண்பாடு, மனிதநேயம் ஆகியவை வலுப்பெற வேண்டியது அவசியம்.
5.தங்களின் சிறார் இலக்கிய பங்களிப்பு மற்றும் படைப்புகளின் சிறப்புகள்?
நான் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவை எளிய மொழியில், குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், நல்ல பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை கூறும் வகையில் அமைந்துள்ளன. இதுவரை ஆளுமைச் சிறுகதைகள், கானல் நீர், யானையை வென்ற எறும்புகள், காட்டுத்தாத்தா, வித்தை படித்த விலங்குகள், பார்வையற்ற வெளிச்சம் என்ற தலைப்புகளில் சிறார்களுக்காக ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இவற்றுள் குறிப்பாக, காட்டுத்தாத்தா மற்றும் வித்தை படித்த விலங்குகள் நூல் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் Father of Wood (காட்டுத்தாத்தா) மொழிபெயர்ப்பு நூல் 2025ஆம் ஆண்டுக்கான திசையெட்டும் விருது பெற்றது.
மேலும், ஆளுமைச் சிறுகதைகள், கானல் நீர் இவையிரண்டும் புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருதும், யானையை வென்ற எறும்புகள் தமிழ்ப்பல்லவி விருதும், வித்தை படித்த விலங்குகள் மதுரை நட்பு வட்டம் மற்றும் புதுவைப்பரணி பரிசையும் பெற்றுள்ளது.
6.சிறார் இலக்கியத்தின் திருப்புமுனையாக தாங்கள் கருதுவது?
சிறார் இலக்கியம் கல்வியுடன் இணைந்து, குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு உருவாக்கப்படத் தொடங்கிய காலமே அதன் திருப்புமுனையாக கருதுகிறேன். தற்போதைய தமிழக அரசு பாடத்திட்டத்தில், கதை பாடல் இசை இவற்றோடு வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது சிறப்பு.
7.சிறுவர்களுக்கான கதைகள் எந்தெந்த பொருண்மையில் இருக்க வேண்டும்?
நல்லொழுக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் சிந்தனை, மனிதநேயம், சமூக பொறுப்பு போன்ற பொருண்மைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
8.சிறுவர்களுக்கு கற்பனை கதைகள் தேவையா?
ஆம், மிகவும் தேவையானவை. கற்பனை கதைகள் குழந்தைகளின் சிந்தனை திறனை விரிவுபடுத்துகின்றன.
9.எவ்விதக் கதைகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கும்?
சுவாரஸ்யம் நிறைந்த, சுருக்கமான, நகைச்சுவை கலந்த, விலங்குகள் அல்லது குழந்தைகள் மையமாக உள்ள கதைகள் அவர்களை எளிதில் ஈர்க்கும்.
10.கடந்த காலம் மற்றும் தற்கால சிறார் இலக்கிய வேறுபாடு?
கடந்த காலத்தில் ஒழுக்கக் கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்பட்டன. தற்போது அறிவியல், தொழில்நுட்பம், கற்பனை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
11.சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்?
வாசிப்பு அவர்களின் அறிவை வளர்க்கிறது, சிந்தனை திறனை மேம்படுத்துகிறது, நல்ல மனிதராக உருவாக உதவுகிறது.
12.வாசிப்பு பழக்கத்தை உருவாக்க பெற்றோரும் பள்ளிகளும் செய்ய வேண்டியது?
புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். நூலகங்கள், வாசிப்பு நேரம், கதைச் சொல்வது போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தைகளை வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
13.தற்கால பெற்றோர்களுக்கு கூற விரும்புவது?
குழந்தைகளுக்கு மொபைல் மற்றும் திரை நேரத்தை குறைத்து, புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
14.தற்கால சிறுவர்களின் வளர்ச்சிக்கு முன்னெடுக்க வேண்டியவை?
முழுமையான கல்வி, நல்ல நூல்கள், பண்பாட்டு விழிப்புணர்வு, சிந்தனை வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.