மீண்டும் களமிறங்கிய நியோமேக்ஸ் !
நியோமேக்ஸ் வழக்கில் நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்படும் ஏல நடவடிக்கைகளில், எதிர்பார்த்த அளவுக்கு வெளிநபர்கள் பங்கேற்காதது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வையும் நீதிமன்றம் முன்னெடுக்கும் முதற்கட்ட தீர்வுத்திட்டம் என்ன ஆகுமோ? என்ற கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் இத்தகைய மனநிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நோக்கில், ”நீதிமன்றத்தை நம்பிச் சென்றால் இப்போதைக்கு தீர்வு கிடைக்காது. அது இன்னும் பல வருடங்கள் பிடிக்கும். ஏலத்தில் பங்கேற்று சொத்துக்களை எடுத்தால் பத்திர செலவுகளே கணிசமாக வந்துவிடும். அப்புறம், வருமான வரித்துறையினரின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்” என்பது போன்ற தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகள் ஒன்றிணைந்து கடந்த செப்-24 அன்று தேனி – ஹோட்டல் ரம்யாஸில் நடத்திய ரகசியக் கூட்டத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களான பாலா, கமலக்கண்ணன், மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் சோலை ரவி உள்ளிட்டு சுமார் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருக்கிறார்கள். ஹோட்டலின் வாசலில் வைத்து வந்திருந்தவர்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்த பிறகே, உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அந்தக்கூட்டத்தில் பேசிய பாலா, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பேசியிருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தில் இதுவரையில் 1.71 இலட்சம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருப்பதாகவும்; ஏஜெண்டுகள் மட்டுமே 24,000 பேர் இருப்பதாகவும் பாலா பேசியிருப்பதுதான் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியிருக்கிறது.
கடைசி நேரத்தில் நீதிமன்றம் கொடுத்த அறிவிப்பால் ஏற்கெனவே 66,000 அளவுக்கு புகார் திடீரென்று உயர்ந்துவிட்ட நிலையில், இவர்களுக்கான தீர்வை ஏற்படுத்தித் தருவதற்கான 7000 கோடி ரூபாய்க்கான சொத்துக்களே இன்னும் கைக்கு வந்து சேராத நிலையில், இப்படி ஒரு தகவலா என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் விலகவில்லை.
அதுமட்டுமின்றி, இதுவரையில் நீதிமன்றத்திற்கு வெளியே, 8 பெடரேஷன்களை அமைத்து 296 கோடி ரூபாய் அளவுக்கு செட்டில்மெண்ட்டை முடித்திருப்பதாகவும்; அதன்படி தும்மக்குண்டு, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் நாங்கள் சொன்ன விலையில் கொஞ்சம் பணம் கொடுத்தும் கொஞ்சம் பாண்டு கொடுத்தும் தீர்வை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதாக பேசியிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, SH நிலைக்கு மேல் உள்ளவர்கள் புகார் கொடுத்திருந்தால் வாபஸ் வாங்கும்படியும்; ஏஜெண்டுகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்றும்; சட்டம்தான் செட்டில்மெண்ட் செய்ய விடாதபடி தடுப்பதாகவும் பேசியிருப்பதும் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்த பின்புலத்தில்தான், தற்போதைய ஏல நடைமுறைகளில் மாற்றம் வேண்டுமென்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. நியோமேக்ஸ் நிறுவனத்தாரின் பேச்சை நம்பி மீண்டும் மோசம் போய்விடாதீர்கள் என்று நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
100 கோடிக்கு பேரம்… சட்டம்தான் தடுக்குது… ரகசிய மீட்டிங்கில் பாலா பேசியது என்ன?
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.