மலைக்க வைக்கும் புத்தக மோசடி ! பற்றியெறியும் விவகாரம் ! பதறாத அமைச்சர் !
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் மோசடி நடைபெற்றிருப்பதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் தீபாவளி பட்டாசாய் கொளுத்திப் போட்ட பதிவும் அதனை தொடர்ந்து அத்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சரே “ஆமாம் அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று அதனை உறுதிபடுத்தியுள்ள விவகாரமும் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் விஜயுடன் நடிகை திரிஷா பொதுவெளியில் பங்கேற்கும் சமயத்தில், தமிழகத்தில் இதுபோல ஏதாவது ஒரு ”ஸ்பெஷல் ஐட்டத்தை” இறக்கிவிடுவதை த.வெ.க. இணையப்படை வாடிக்கையாக்கிவிட்டது என்ற விமர்சனத்தையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதுஒருபுறமிருக்கட்டும். இந்த விவகாரத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே, பல்வேறு விதமான அலசல்கள் போதுமான ஆதாரங்கள் வெளிவந்துவிட்டன. அந்த ஆதாரங்கள் அத்தனையுமே, த.வெ.க.வின் ஐ.டி.விங் வழியாகவே வெளியாகியிருக்கின்றன என்பதும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றன.
ஒருவழியாக அகல்விளக்கு பதிப்பகத்தின் பதிப்பாளரை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தும் விட்டார்கள். மருந்துக்குக்கூட பெயர்ப்பலகை இல்லை. வீடுதான் பதிப்பகம். பதிப்பகம்தான் வீடு. அவ்வளவு எளிமையான பதிப்பகத்தின் சார்பில், வெளியான புத்தகம் மட்டும் ரொம்பவே காஸ்ட்லி. சர்ச்சைக்குரிய நூலின் உள்ளடக்கம் போலவே, பட்டும்படாமல் பேசுகிறார் பதிப்பாளர் மோகன்.
இந்த விவகாரத்தில் த.வெ.க. ஐ.டி.விங்க் வெப்பன் சப்ளையர்போல, ஆதாரங்களை அடுத்தடுத்து வெளியிடுகிறது. பத்திரிகையாளர்கள் அந்த முகவரியைத் தேடி ஓடுகிறார்கள். துறைக்கு பொறுப்பான அமைச்சரோ, ஊடகங்களிடமும் கிடைக்கும் மேடைகளிலும் இந்த விவகாரத்தை பற்றி கதைத்துவிட்டு கடந்து செல்கிறார்.
ஊழலே நடைபெறவில்லை; எல்லாமே அபாண்டக் குற்றச்சாட்டுகள் என்பதல்ல நமது வாதம். துறை அதிகாரிகளை அழைத்து விவரங்களை கேட்டால் கோப்புகளையும் புள்ளிவிவரங்களையும் அமைச்சரின் மேஜையில் கொட்டிவிடப் போகிறார்கள். அதனை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே வெளியிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே? அதைவிடுத்து, தேர்தல் பிரச்சாரம் போல திரும்பிய பக்கமெல்லாம் திண்ணைப்பேச்சு எதற்கு? என்ற கேள்விதான் முன் எழுகிறது.

5.11.2025 தேதியிட்டு பள்ளிக்கல்வித் (பொ.நூ.2) துறை சார்பாக வெளியான அரசாணை எண் : 250 இன் படி, 5 சிறப்பு நூலகங்கள் மற்றும் 6 மாவட்ட மைய நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக 34 பக்கங்களுக்கு விரிகிறது அந்த அரசாணை.
முதலில் புதியதாக துவங்கப்பட்டுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் அமையவுள்ள 6 மாவட்ட மைய நூலகங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு கோடி மதிப்பில் நூல்கள் கொள்முதல் செய்ய நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. அடுத்து, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் காமராசர் அறிவுலகம் நூலகங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 50 கோடி ரூபாய் மதிப்பில் நூல்கள் – மின்நூல்கள் கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாகும் சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் மற்றும் திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் நூலகங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்து கோடி மதிப்பில் நூல்கள் – மின் நூல்கள் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆக, இதன்படி பார்த்தால், பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் மற்றும் மின்நூல்களை கொள்முதல் செய்வதற்காக அனுமதி அளிக்கப்பட்ட தொகை 50 கோடி மட்டுமே. அரசாணை எண் 250 இன்படி ஒட்டுமொத்த நூலகங்களுக்கான கொள்முதல் எல்லாமே ஊழல் என்றாலும் கூட, 163 கோடி ரூபாய்கள். அரசாணையை கையில் வைத்துள்ள அமைச்சரே ஏன் பொத்தாம் பொதுவாக கோடிகளில் ஊழல் என பேச வேண்டும்?
அடுத்து, மதுரையில் அமைந்த கலைஞர் நூலகத்திற்காவது தலா 5 நூல்களை கொள்முதல் செய்தார்கள். ஆனால், பெரியார் அறிவுலகத்திற்காக ஒவ்வொரு தலைப்பிலும் ஒரே நூல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். இது உண்மை எனில், 1800 தலைப்புகளிலும் சர்ச்சைக்குரிய அந்த இரண்டு பதிப்பகங்களும் தலா ஒன்றோ இல்லை அதிகபட்சம் 5 நூல்களையோ, பி.ஓ.டி. முறையில் அச்சிட்டு கொடுத்து அரசை ஏமாற்றியிருக்கிறதா? அடுத்து, பொதுவில் நூலகங்களுக்காக நூல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல, பல்வேறு படிநிலைகளைத் தாண்டித்தான் நூல் கொள்முதல் நிறைவு பெறுகிறது. இந்த குறிப்பிட்ட விவகாரத்தையே எடுத்துக்கொண்டாலும்கூட, நூல்களை பதிவு செய்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் வழிமுறைகள் இருக்கிறது. இவ்வாறு பரிசீலனைக்கு வரும் நூல்களை தேர்வு செய்ய 54 தலைப்புகளில், 137 துறைசார் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் இடம்பெற்ற குழுவினர்தான் நூல்களை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்நிலையில், இதில் ஊழல் நடைபெற்றிருந்தால் இவர்களுடைய பங்கு என்ன என்ற கேள்விக்கு என்ன பதில்?

எழுத்தாளர் பெருமாள் முருகனே கூட, நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். எனில், அவரது தலைப்பில் மேற்கண்ட நூல்கள் பரிசீலனைக்கு வந்ததா? அவரது குழுவினர் அதனை நிராகரித்திருக்கிறார்களா? என்ற விவரம் பேசாமல் கடந்து செல்வது சரியா?
அடுத்து, தேர்வுக்குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் அழகிய பெரியவன், தன்னிடம் பரிசீலனைக்கு வந்த நூல்களின் பட்டியலில் இதுபோன்ற நூல்கள் இடம்பெறவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். நூல்களில் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற அந்த 137 பேரும், தமிழகத்தில் பிரபலமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள். இக்குழுக்களில் பங்கேற்ற அந்த 137 பேரில், பத்து பேராவது இதில் என்ன நடந்தது என்ற விளக்கத்தை அளிக்க முன்வருவார்களா?
மிக முக்கியமாக, இந்த விவகாரத்தில் அரசாணைகள் தொடங்கி, தேர்வுக்குழுவில் யாரெல்லாம் பங்கேற்றார்கள்? எத்தனை படிநிலைகளை தாண்டி கொள்முதல் செய்யப்பட்டது? எத்தனை பதிப்பகங்களிடமிருந்து எத்தனை நூல்கள் பரிசீலனைக்கு வந்தன? ஒரே பதிப்பகத்தின் சார்பில் பரிந்துரைக்கு அனுப்பபட்ட குறைந்தபட்ச நூல்களின் எண்ணிக்கை என்ன? அதிகபட்ச நூல்களின் எண்ணிக்கை என்ன? சர்ச்சைக்குரிய நூலை யார் பரிந்துரைத்தது? அதனை யார் ஒப்பிட்டு சரிபார்த்தது? குழுவின் சார்பில் விலையை தீர்மானித்தது யார்? என்ன தேதியில் அந்த நூல் கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது? என்ன தேதியில் அந்த நூல் நூலகத்துறையின் கைகளுக்கு வந்து சேர்ந்தது? அதற்காக, எவ்வளவு தொகை அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது? அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பதிப்பகங்களின் உரிமையாளர் யார்? யாருடைய வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது? – இந்த விவரங்கள் எல்லாமே அமைச்சரின் கையில், அதாவது அவர் பொறுப்பேற்றிருக்கும் துறையின் வசம் இருக்கும்போது, இந்நேரம் அதனை வெளிப்படையாக அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பாகவே வெளியிட்டிருக்கலாமே?
எதற்காக, இவ்வளவு வாதங்கள் – பிரதிவாதங்கள்? ஏன், தவணை முறையில் அதுவும் த.வெ.க. ஐ.டி.விங் வழியாக அரசாணைகள் வெளியாக வேண்டும்? மற்ற விவகாரங்களிலெல்லாம், முதல்வருக்குப் பதிலாக மற்றவர்கள் பதிலளித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் முதல்வர் அவ்வளவு விரைவாக எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? என்பதெல்லாம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு






Comments are closed, but trackbacks and pingbacks are open.