விடிந்தால் தீபாவளி… ஆனால் வாழ்க்கையில் எப்போது விடியும்?

கவிராயர் பக்கம் – வெந்ததும் வேகாததும் - 08

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வானமெங்கும் சீறிப் பாய்ந்து வண்ணக்குடை விரிக்கும் ராக்கெட்டுகள், வீட்டுக்கு முன்னால் குபீரென்று எழுகின்ற ஒளிப்பிழம்பு பூந்தொட்டிகள், காதைப் பிளக்கும் வெடிச்சத்தம், காலருகே சுழன்றுவரும் தரைச்சக்கரம். எதிர்வீட்டுக் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சிப் பிரகாசம் மத்தாப்பூவை தோற்கடிக்கும் – என் மனசுக்குள்ளும் குபீரென்று பாய்ந்து அறுபது வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கும் ராக்கெட் பட்டாசு – தீபாவளிக்கு முந்திய இரவுகளை மறக்கமுடியுமா?

சொல்லி வைத்தாற்போல் மோசம் செய்யும் தையற்காரர். இரவு இரண்டு மணி வரை காக்க வைத்து கொடுத்தாலும் அவரைக் கோபிக்கத் தோன்றாது. நெஞ்சோடு அணைத்துக் கொண்ட புத்தாடை மணம்!

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அதிகாலை தீபச் சுடரின் வெளிச்சத்தால் வீடு மெழுகப்பட்டிருக்கும … பிரம்புக்கூடையில் எட்டிப்பார்க்கும் பட்டாசுகள் … தீபாவளியன்று மட்டும் பிறப்பெடுக்கும் சுழியன், கெட்டி உருண்டை, ரவாஉருண்டை பட்சணங்கள் தீபாவளிக்கு ஏன் சார் பட்டாசு கொளுத்துகிறோம் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்லும் ஆறாம் வகுப்பு ஆசிரியர் .

“தீபாவளியன்னிக்கு கட்டாயம் மழை பெய்யும் இல்லையா? அப்போது கொசுப் பட்டாளம் வந்துவிடும்! அதை விரட்டத்தான் பட்டாசு வெடிக்கிறோம்! கந்தகப் புகையில் காணாமல் போகும் கொசுக்கள்!“

தீபாவளியன்று அம்மா தயாரிக்கும் தீபாவளி மருந்து – அதையும் பட்சணமாக விழுங்குவோமே!  தீபாவளி மருந்து சாப்பிடுங்கள் என்று கிராம சேவக் சொந்த செலவில் நோட்டீஸ் அடித்து விநியோகிப்பார் -‘நமது இல்லத்தின் முதல் மருந்துவர் இல்லத்தரசிதான்’ என்று அதில் அச்சடித்த வாசகங்கள் தலைமுறைக்கும் மறக்காது.

பட்சணங்களில்தான் எத்தனை வகைகள் – பட்டாசுகளில் எத்தனை தினுசுகள் – ஓலைப்பட்டாசை மறக்கமுடியுமா? பாம்பு வாணத்தை மறக்கமுடியுமா? பச்சை வண்ணத்தில் ஒரு இன்ச் அளவில் பைத்தாங்காய் பட்டாசை மறக்கமுடியுமா?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்பா வாங்கி வரும் தீபாவளி மலர்களை விழுந்து விழுந்து படிப்போம் -தீபாவளிக் காட்சிகளைத் தத்ரூபமாக சித்தரிக்கும் மாலியின் நகைச்சுவைப் படங்கள் – வாண்டு மாமாவின் சிறார் கதைகள் – பட்டாசு சத்தங்கள் வெறும் ஓசை என்று காதைப் பொத்திக்கொள்ளத் தோன்றாது- அவை மகிழ்ச்சியின் கூப்பாடுகள் அல்லவா?

அப்பா ஒரு பகுத்தறிவுவாதி. தீபாவளி அன்றைக்கு என்று துவைக்காத கசங்கிய சட்டை அணிவார். தீபாவளி முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் புதுச்சட்டை அணிந்து வருகிற காட்சி – ஏழாம் வகுப்பில் எனக்கு நேர்ந்த காமெடிக் காட்சியாக ஆகிவிட்டது!

தீபாவளியன்று தையல்காரர் தைத்துக்கொடுத்த பேண்ட்-ஐ அணிந்து பார்க்காதது தப்பாகிவிட்டது. பள்ளி செல்லும்போது அது நழுவிக்கொண்டே இருந்தது – அளவு சரியில்லை – வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பு வாசலில் நின்றேன். பேண்ட் பெல்ட்டை சரிசெய்தபோதுதான் அந்த ‘விபரீதம்’ நிகழ்ந்தது – என் பேண்ட் நழுவி கீழேயே விழுந்துவிட்டது – ஜட்டியுடன் நிற்கிறேன். வகுப்பே ஓ…வென்று சிரிக்கிறது. வகுப்பு நண்பர்கள் சிரித்தால் பரவாயில்லை – உதயா சிரித்ததுதான் அவமானமாகப் போய்விட்டது!  யார் அந்த உதயா என்று சொல்லவேண்டுமா? எல்லோருக்குள்ளும் ஒரு உதயா உண்டுதானே?

நம்புங்கள். அன்றுமுதல் நான் பேண்ட் அணிவதை விட்டுவிட்டேன். விண்ணிலே பறந்து கண்ணைப் பறித்த ராக்கெட் பட்டாசு வெறும் குச்சியாக கீழே விழுவதைப்போல் – பழைய நினைவுகளின் பட்டாசு ராக்கெட் குச்சியாக மீந்து கிடக்கிறது முதுமையில் வாழ்க்கை!

“உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி” என்ற பட்டுகோட்டையின் வரிகள்,“பட்டாசு சுட்டுசுட்டுப் போடட்டுமா” என்று நதியா பாடியதும்,“நான் சிரித்தால் தீபாவளி…..” என்ற நாயகன் பாடலும் காதில் ரீங்கரிக்கின்றன.

மற்றோர் எண்ணமும் மனதில் ஒடுகிறது. ஏழைகளின் வாழ்வு, ஏதிலிகளின் வறுமை இருள், சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமை, மூடநம்பிக்கை, அரசியல் அக்கிரமம், ஆன்மிக பொய்யிருட்டு – எல்லாமே மறைந்து எப்போது விடிகிறதோ – வெளிச்சம் வருகிறதோ – அன்றுதான் உண்மையான தீபாவளியாக இருக்கமுடியும் – வெளியே இருள் அப்பிக்கிடக்கிறது – விடிந்தால் தீபாவளி !

தஞ்சாவூர்க் கவிராயர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.