அங்குசம் பார்வையில் ‘டெலிவரி பாய்’
தயாரிப்பு: அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன், டைரக்டர்: நானி, ஆர்டிஸ்ட்: ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமார், பிரிகிடா சாஹா, துஷ்யந்த், மாதேஸ்வரன் எம்.பி., காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், உதயா தீப், ஒளிப்பதிவு: எஸ்.பிரசன்ன குமார், இசை: கே.எஸ்.சுந்தர மூர்த்தி, எடிட்டிங்: வசந்த், ஸ்டண்ட்: ஃபீனிக்ஸ் பிரபு, பிஆர்ஓ: சதீஷ் & சிவா ( எய்ம்).
போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்க, குடும்பச் சூழ்நிலையால் கோவையில் ஃபுட் டெலிவரி பாய் வேலை பார்க்கிறார். காலையில் வேலைக்குப் போகும் முன்பு வீட்டின் முன்புறம் இட்லிக் கடை போட்டிருக்கும் அம்மா ராதிகா சரத்குமாருக்கு உதவுகிறார். அங்கே இட்லி வாங்க வரும் பிரிகிடா சாஹா மீது காதல் பார்வை வீசுகிறார், டூயட் பாடுகிறார். இந்த கேப்புக்கிடையில அடிக்கடி சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார். இது எதுக்காகன்னா, அம்மா ராதிகா லாரி ஆக்சிடெண்டில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். அஞ்சு லட்ச ரூபாய் இருந்தால் தான் அம்மாவைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் நண்பன் ஜென்சன் திவாகரும் மற்ற டெலிவரி பாய்ஸ்களும் மூன்று லட்ச ரூபாய் உதவுகிறார்கள். மீதி இரண்டு லட்சத்தை ஏடிஎம் வாசலில் இரண்டு லட்ச ரூபாயுடன் நின்று கொண்டிருக்கும் துஷ்யந்திடமிருந்து பறித்துக் கொண்டு ஓடுகிறார் சிவக்குமார். அந்த இரண்டு லட்ச ரூபாயைக் கொடுக்கத் தான் துஷ்யந்தைத் தேடி சென்னைக்கு வருகிறார். இந்தக் கதையெல்லாம் துஷ்யந்த் குடியிருக்கும் வாட்ச்மேன் காளிவெங்கட்டிடம் சொல்கிறார் சிவக்குமார்.
துஷ்யந்தைப் பார்த்து பணத்தைக் கொடுத்தாரா? கொடுப்பதற்கு முன்பு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இதாங்க இந்த ‘டெலிவரி பாய்’ கதை. கடந்த வாரம் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்த போது, அடடா… செமையா இருக்கே, நல்ல கண்டெண்ட் இருக்கும் போலயே… டெலிவரிபாயாக சிவக்குமார் இருப்பார், அப்ப சில வில்லன்களை எதேச்சையாக சந்திப்பார், அவர்களுடன் மோதல் வரும், க்ளைமாக்ஸில் கண்டிப்பா ஜெயிப்பார்னு நம்புனோம். அந்த நம்பிக்கையுடன் தான் இப்ப படத்த்துக்கும் போனோம்..
ஆனா படத்தில் ஆரம்பத்தில் சில இடங்களுக்கு ஃபுட் டெலிவரி பண்ணுகிறார் சிவக்குமார். திடீர்னு ஆந்திரா, கேரளா, கோவையில் இருக்கும் சிலரைப் போட்டுத் தள்ளுகிறது கூலிப்படை. அந்த கூலிப்படைகளை ஆபரேட் பண்ணும் தலைவனாக, தயாரிப்பாளர் மாதேஸ்வரன், இடையிடையே அம்மா ராதிகா—மகன் சிவக்குமார் இடையிலான பாசக் காட்சிகள், அப்பப்ப பிரிகிடாவையே சுத்திச் சுத்தி வரும் சிவக்குமார், அப்புறம் துஷ்யந்த் எண்ட்ரின்னு இடைவேளை வரை பிட்டு பிட்டா சீன்கள் போய்க்கொண்டே இருக்கு. அதுக்குப் பிறகு துஷ்யந்த் ஏரியா, அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், கூலிப்படை ரவுடிகளுடன் துஷ்யந்த் மோதல், அதனால் அவருக்கும் அவரது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து, துஷ்யந்தைக் காப்பாற்ற களத்தில் சிவக்குமார் இறங்குவது, இன்னொரு பக்கம் கான்ஸ்டபிள் போஸ் வெங்கட் உதவுவது, ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற, மாதேஸ்வரன் 20 லட்சம் பேரம் பேசுவது, அப்புறம் 10 லட்சம் கேட்பது, துஷ்யந்தும் சம்மதிப்பது என எங்கெங்கோ சுத்தி க்ளைமாக்ஸுக்கு வருகிறார் டைரக்டர் நானி. சில்லரை ரவுடி ஒருத்தன் செத்த பிறகு வரும் சீன்களெல்லாம் செம எரிச்சலைக் கிளப்பிருச்சு. சமீபத்தில் ரிலீசான நல்ல படங்களையோ, சுமாரான படங்களையோ கூட நானி பார்த்திருக்கமாட்டார் போல. திரைக்கதையில் அவ்வளவு தள்ளாட்டம், தடுமாற்றம்.
லவ் ஏரியாவைவிட ஸ்டண்ட் ஏரியாவில் செம ரிஸ்க் எடுத்துள்ளார் சிவக்குமார். க்ளைமாக்ஸில் பீனிக்ஸ் பிரபுவின் ஆக்ஷன் கம்போஸிங்கில் அனல் பறக்குது. தனுஷ், சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு பேக்ரவுண்ட் ஸ்கோரில் சிவக்குமாருக்கு மாஸ் காட்டியிருக்கார் மியூசிக் டைரக்டர் சுந்தரமூர்த்தி. வரட்டும், நம்ம தெக்கத்திப் பையன் ஒருத்தன் சினிமாவில் இவர்கள் போல வந்தா பெருமைதானே. [என்ன ஒண்ணு, கடைசி அரை மணி நேரம் கூலிப்படை ரவுடிகளின் கூச்சல் சத்தம் தான் தாங்க முடியல]
பணம் போட்ட தயாரிப்பாளர் மாதேஸ்வரனுக்கு ஒரு ஃபயர் ஃபைட், ஒரு ஐட்டம் சாங். இவ்வளவு போதும்னு அவரே நினைச்சுட்டார் போல. மிஞ்சிப் போனால் மூன்று நாட்கள் ராதிகா சரத்குமாரிடம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போல.
இடைவேளைக்குப் பிறகு பிரிகிடா சாஹா என்ன ஆனார்னு யாருக்கும் தெரியல. யாரும் அதைப் பத்தி கவலைப்படலை.
க்ளைமாக்ஸ் சுபமாக முடிந்ததும் “எல்லோருக்கும் அன்பை டெலிவரி பண்ணு” என சிவக்குமாரிடம் சொல்கிறார் போஸ் வெங்கட்.
அங்குசம் பார்வையில் ‘டெலிவரி பாய்’
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.