கோயம்புத்தூர் திமுகவின் ஸ்டேட்டஸ் – செந்தில் பாலாஜி தலைமைக்கு அனுப்பியுள்ள ரிப்போர்ட் !
திமுகவிற்கு சிக்கலான பகுதியாக இருப்பது கோவை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் தயார் என்று தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கக்கூடிய வேளையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மட்டும் தலைமையிடம் மாவட்ட அரசியல் நிலவரம் குறித்து உண்மையை உடைத்து உள்ளாராம்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை திமுக பல்வேறு கோஷ்டிகளாக மல்லுக்கட்டி வருகிறது. பொங்கலூர் பழனிச்சாமி ஒரு தரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார். சிங்காநல்லூர் கார்த்திக் ஒரு அணி, கார்த்திகேய சிவசேனாபதி ஒரு பக்கம், வீரகோபால் ஒரு பக்கம், ஐடி விங்கை சேர்ந்த மகேந்திரன் ஒரு பக்கம் என்று கோஷ்டிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக கூறி இருக்கிறாராம்.
மேலும் முதல்வர் அரசு நிகழ்ச்சிகளுக்காக கோயமுத்தூர் வந்த பொழுதும் சரி, முதல்வர் சகோதரி செல்வியின் மாமியார் மரணத்திற்காக கோவை வந்த பொழுதும் சரி, நிர்வாகிகளிடம் முதல்வர் வருகிறாரே என்ற உற்சாகம் இல்லை. மேலும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் வந்த போது லட்சம் பேரைத் திரட்டி கூட்டம் கூட்ட பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால் அந்த பணமும் சரியாக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அடையவில்லை என்று குற்றச்சாட்டு வந்திருப்பதாகவும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை களத்தில் இறங்கி செய்ய தொடங்கிவிட்டார், ஆனால் கோவை மாவட்ட திமுகவினர் செய்யும் பணிகள் திருப்தியை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறாராம். இதனைக் கேட்டு கொண்ட தலைமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், முடிந்த பிறகு நிர்வாகிகளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளதாம். இதனால் தேர்தல் முடிந்த கையோடு கோயமுத்தூரில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.