அதிமுகவில் மீண்டும் சசிகலா – பாஜக தலைமைப் போடும் கணக்கு!
அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும், மனக்கசப்புகள் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வலிமை படுத்தவேண்டும், அதிமுக ஆளும் கட்சியாக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று சசிகலா அவ்வப்போது பேசி வருகிறார். சசிகலாவின் இந்த பேச்சை ஆதரிக்கும் வகையில் சில நேரங்களில் பன்னீர்செல்வமும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
அதேநேரம் சசிகலாவிற்கு எதிரான சில கருத்துக்களையும் கூறத் தவறுவதில்லை, இப்படி ஓ பன்னீர்செல்வம் அன்றைய தினத்திற்கு ஏற்ப அரசியல் நிலைபாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்று ரத்தத்தின் ரத்தங்களால் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் “தவறு செய்து திருந்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு உடனே எதிர்வினை ஆற்றிய அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவை அதிமுகவில் எந்தக் காலத்திலுமே இணைத்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார்.
அதேநேரம் எடப்பாடி கே பழனிசாமியோ சசிகலாவை அதிமுகவில் மீண்டும் அனுமதிக்கவே கூடாது என்ற தெளிவான முடிவில் இருக்கிறார் என்று எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் முக்கிய நகர்வுகள் ஒவ்வொன்றுக்கும் மூலகாரணமாக இருக்கும் பாஜகவின் டெல்லி தலைமை தற்போது சசிகலாவை அதிமுகவில் இணைக்க கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறதாம். அதிமுக தொடர்ந்து வலுவிழந்து வருகிறது, திமுக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக அமையும். இதனால் அதிமுக வலுவடைந்து, குறைந்தபட்ச தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறதாம் பாஜக தலைமை.
அதனுடைய வெளிப்பாடுதான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியின் சாராம்சம் என்று கூறப்படுகிறது.