சாதி சங்கம் நடத்திய கல்வித் திருவிழா ! ஆள்பிடித்துக் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை !
”அந்தந்த அரசு பள்ளிகளிலேயே அரசு சார்பில் நடத்தப்பட வேண்டிய விழாவை, ஒரு சாதி சங்கத்தின் கடிதத்திற்கு ஒப்புதல் கொடுத்து, தனியார்
சாதி சங்கம் நடத்திய கல்வித் திருவிழா ! ஆள்பிடித்துக் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை !
தமிழகத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளை, அரசின் சார்பில் கல்வித்திருவிழாவாக கொண்டாடுவதற்குப் பதிலாக, ஜாதி சங்கம் முன்னின்று நடத்தும் விழாவில் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை பங்கேற்க சொல்லி உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறார்கள், வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்.
பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் பிறந்தநாளினை கல்வித்திருவிழாவாக கொண்டாடும் பொருட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ”நாடார் மகாஜன சங்கம்” சார்பில், ஆதித்யா வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த (6,7,8 வகுப்பு) மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்தி அரசு அலுவல் கடிதமாகவே வேலூர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது, அம்மாவட்ட பள்ளிக் கல்வித்துறை.
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 2575/ஆ5/2023.நாள்03.07.2023. மற்றும் அதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:1529/ஆ.5/2023.**.07.2023. ஆகியவற்றின்படி, அரசு அலுவல் கடிதமாகவே, அனுப்பப்பட்டிருப்பதோடு, ”இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறும்” தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்து, 2007-2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டங்கள் தோறும், பள்ளிகள் தோறும் முன்கூட்டியே போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 15 அன்று நடைபெறும் ‘கல்வி வளர்ச்சி நாள்’ விழாவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டுமென்ற ஏற்பாட்டையும் உருவாக்கினார், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி.
ஆட்சி மாறும்பொழுது தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இந்த விவகாரத்தை யாரும் கையாண்டு விடக்கூடாது என்பதற்காகவே, வெறுமனே அரசின் உத்தரவாக அல்லாமல், 24.5.2006 அன்று அரசாணை பிறப்பித்து பின்னர் அதனை சட்டமாகவும் ஆக்கியிருக்கிறார் முதல்வர் கலைஞர்.
இன்று, கலைஞரின் தமயன் ஆட்சியில், ‘கல்வி வளர்ச்சி நாள்’ விழா நடத்தும் பொறுப்பை, ”நாடார் மகாஜன சங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்களா?” என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது, பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை.
”கல்விக் கண்கொடுத்த பச்சைத் தமிழரான பெருந்தலைவரை நாடார் என்று கற்றுத்தர பள்ளிக் கல்வித் துறை துணைபோகிறதா? அப்படியானால் இனிவரும் நாட்களில் அம்பேத்கர், பெரியார், காந்தியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர், அண்ணா போன்ற ஆளுமைகள் குறித்த போட்டிகள் நடத்த அந்தத் தலைவர்களை தங்கள் சுயநலத்துக்காக சொந்தம் கொண்டாடும் ஜாதி சங்கங்களிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?” என்று காத்திரமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்,எழுத்தாளர் அழகிய பெரியவன்.
”அந்தந்த அரசு பள்ளிகளிலேயே அரசு சார்பில் நடத்தப்பட வேண்டிய விழாவை, ஒரு சாதி சங்கத்தின் கடிதத்திற்கு ஒப்புதல் கொடுத்து, தனியார் நடத்தும் நிகழ்விற்கு அரசுப்பள்ளி மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது எந்த வகையில் ஏற்புடையது? அவர்கள் கடிதத்திலேயே பார்வையில் நாடார் மகாஜனம் சங்கத்தின் பொதுச்செயலாளர் கடிதத்தை ரெபரென்ஸாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், கடிதத்தின் நகல் பகுதியிலும் நாடார் மகாஜன சங்கத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
அடுத்து, அந்த தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சாதி சங்கத்தின் பெயரில்தான் பேனர் வைத்துள்ளனர். அந்நிகழ்வில் பங்கேற்று பேசியவர்கள் எல்லோருமே காமராசரை நாடார் என்று சாதிப்பெயரை விளித்துதான் பேசியிருக்கின்றனர். சாதி சங்கத்தினரின் போஸ்டர் ஒட்டப்பட்ட பேருந்துகளில்தான் பள்ளி மாணவர்களை கூட்டிச்சென்றார்கள். இது ஒரு மோசமான, தவறான முன்னுதாரணம்.
எல்லா தலைவர்களையும் கொண்டாடுகிறோம். அவர்கள் சாதி சார்ந்து நாம் கொண்டாடுவதில்லை. அவர்களது செயல்பாடுகளை பார்த்துதான் கொண்டாடுகிறோம். இதனை மீறி, அவர்கள் இன்ன சாதி என்று மாணவர்களுக்கு சொல்வதே தவறு.
இரட்டைமலை சீனிவாசன் குறித்தோ, அயோத்திதாசர் குறித்தோ, எம்.சி.ராஜா குறித்தோ ஒரு நிகழ்வு நடத்தினால் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறை கடிதம் எழுதி எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துவிடுவாரா? என்ற கேள்வி எழுகிறது. இதுபோல், தலைவர்களை சாதிசங்கங்களின் அடையாளத்தோடு அணுகினால் அதற்கு அனுமதி கொடுக்ககூடாது என்பதுதான் என் நிலைப்பாடு. எந்த ஒரு சாதி சங்கத்திற்கும் இத்தகையதொரு ஏற்பை வழங்கக்கூடாது என்பதே என் வேண்டுகோள்.” என்கிறார், அழகிய பெரியவன்.
1954-ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக கு.காமராஜரை கோட்டைக்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய குடியாத்தம் தொகுதியில்தான், இந்தக் கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது என்பது காலக்கொடுமை!
சர்ச்சைக்குரிய கடிதம் தொடர்பான கருத்தறிய, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். தொடர்ந்து இரண்டு முறை அழைத்த போதும், கூட்டமொன்றில் சி.இ.ஓ. இருப்பதாகவே தகவல் சொன்னார், அவரது உதவியாளர்.
இறுதியாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சார்பாக பேசிய அவரது நேரடி உதவியாளர் ஜெய்சங்கர் அவர்கள், “தற்போதைய சி.இ.ஓ. மணிமொழி கடந்த 7-ந்தேதிதான் பொறுப்பேற்றார். நீங்கள் குறிப்பிடும் கடிதம் இதற்கு முன்னர் முனுசாமி சி.இ.ஓ.வாக இருந்தபொழுது அனுப்பப்பட்டது. அவர் தற்பொழுது, டி.ஆர்.பி.க்கு டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார்.
காமராசர் கல்வி விழாவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் அந்தக் கடிதமும் அனுப்பப்பட்டது. அதுவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சார்பாக அவரது உதவியாளர் அனுப்பிய கடிதம் அது.” என்கிறார்.
மாவட்ட கல்வி அலுவலரோ (தொடக்கக் கல்வி) கடைசிவரை நமது அழைப்பை ஏற்று பதிலளிக்கவில்லை.
– வே.தினகரன்.
படிக்க:
* கல்வி அதிகாரிகளின் டார்ச்சர் – குமுறும் ஆசிரியர்கள் – கல்வி அமைச்சர் கவனத்திற்கு !
* குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..
*டீம் விசிட் என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கிறாரா ? – மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி சிவக்குமார் ?
இந்த வீடியோவையும் பாருங்கள் !