அவல நிலையில் அரசு கல்லூரி விடுதி: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!
அவல நிலையில்
அரசு கல்லூரி விடுதி:
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் புதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி விடுதி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி அக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவ் விடுதி உரிய தொடர் பராமரிப்பு இல்லாததால், பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக மாணர்கள் குற்றஞ்சாட்டினர்.
மழைக் காலங்களில் மேற்கூரை பெயர்ந்து விழுவதாகவும, கட்டடம் முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இவ்விடுதிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற்பட்டோர் நலத்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து விடுதி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகளைக் களைய தேiயான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.