அங்குசம் பார்வையில் ‘மார்கழி திங்கள் – படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘மார்கழி திங்கள் ‘
கதை-திரைக்கதை-தயாரிப்பு: சுசீந்திரன். டைரக் ஷன்: மனோஜ் பாரதிராஜா. நடிகர்-நடிகைகள்: பாரதிராஜா, சுசீந்திரன், ஷியாம் செல்வன், ரக் ஷனா, நக் ஷா சரண், அப்புக்குட்டி இசை: இசைஞானி இளையராஜா, வசனம்: செல்லா செல்லம், ஒளிப்பதிவு: வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டிங்: தியாகு, நடனம்: ஷோபி பால்ராஜ், பிஆர்ஓ: நிகில் முருகன்.
குழந்தையாக இருக்கும்போதே தனது பெற்றோர் இறந்துவிட, தாத்தா ராமையா(பாரதிராஜா) வின் பாதுகாப்பிலும் அன்பிலும் வளர்கிறார் கவிதா (ஹீரோயின் ரக் ஷனா). படிப்பிலும் சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கும் கவிதாவுக்கு மிக நெருக்கமான தோழி என்றால் அது ஹேமா(நக்சா சரண்) தான். பள்ளிக்கு இருவரும் சேர்ந்து போவதிலிருந்து அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு திக் ஃப்ரண்ட்ஸ். ஒன்பதாம் வகுப்பு வரை கிளாஸ் ஃபர்ஸ்ட்டாக வரும் ரக்ஷனா, பத்தாம் வகுப்பில் செகண்ட் ரேங்க் வருகிறார்.
ஏன்னு தாத்தா பாரதிராஜா கேட்கும் போது, வினோத்னு (ஹீரோ ஷியாம் செல்வன்)ஒரு பையன் புதுசா சேர்ந்திருக்கான். அவன் தான் ஃபர்ஸ்ட் வர்றான் என தாத்தாவிடம் எரிச்சலாக சொல்கிறார் கவிதா.இதனால் வகுப்பில் வினோத்தைப் பார்த்தாலே எரிச்சலாகிறார் கவிதா. ஆனால் வினோத்திற்கோ, கவிதா மீது காதல் பிறக்கிறது. இதை தனது நண்பர்கள் மூலம் கவிதாவின் தோழி ஹேமா விடம் சொல்கிறார். ஹேமாவோ, “லவ்வுன்னாலே அவளுக்கு புடிக்காது. இதே கிளாஸ்ல ரெண்டு பேரு லவ் பண்ணத தமிழ் வாத்தியார்ட்ட போட்டுக் கொடுத்திருக்கா. அதனால அவளை லவ் பண்ற ஐடியாவை விட்ரு” எனச் சொல்லிவிடுகிறார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முழு ஆண்டுத் தேர்வு வருகிறது. அப்போது வினோத் திடம், “என்னைவிட நீ அதிக மார்க் எடுத்துட்டா ப்ளஸ் ஒன்ல நீ சேரும் குரூப்பில் சேர மாட்டேன்” என்கிறார் கவிதா. ரிசல்ட் வந்த போது மாவட்ட அளவில் முதல் ரேங்க் வருகிறார் கவிதா. தனக்காகத்தான் விட்டுக் கொடுத்திருக்கான் வினோத் என தெரிந்து அவன் மீது காதல் பிறக்கிறது கவிதாவுக்கு. ப்ளஸ் டூ தேர்விலும் இருவரும் நல்ல மார்க் வாங்குகிறார்கள். தனது காதலையும் தாத்தாவிடம் சொல்கிறார் கவிதா. சம்மதிக்கும் தாத்தாவும் வினோத்தின் பெற்றோரைப் பார்த்து பேசி, கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கல்யாணம். அதுவரை இருவரும் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது என கண்டிஷன் போடுகிறார் தாத்தா.
கவிதா பொள்ளாச்சிக்கும் வினோத் சென்னைக்கும் படிக்கப் போகிறார்கள். அவர்கள் காதல் ஜெயித்ததா? கல்யாணம் நடந்ததா? ங்கிறது தான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி மிகவும் சாதாரணமானகாட்சிகளுடன் கடந்து விடுகிறது. இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஏன்னா, பரிட்சை முடிஞ்சு நோட்டு புத்தகத்தையெல்லாம் வீசிட்டு ஒரு பாட்டு, ஊரத்திருவிழாவுல ஒரு பாட்டு, ஆத்தங்கரைல ஒரு பாட்டுன்னு வழக்கமான வடையை சுடாத வரைக்கும் டைரக்டராக அடியெடுத்து வைத்த மனோஜ் பாரதிராஜா பாஸ் மார்க் வாங்கிவிட்டார்.

அதேபோல் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலிக்கும் சினிமாக்களில் வீச்சரிவாள், வேல்க்கம்பு, புழுதி பறக்கும் கார்களில் வந்து வீடுகளுக்கு தீ வைப்பு இந்த மாதிரி பெரும் அக்கப்போர்கள் இல்லாமல் சாதி வெறியை காட்டியதற்காகவே மனோஜ் பாரதிராஜாவுக்கு டபுள்ஸ் சபாஷ் போடலாம். கவிதாவின் தாய்மாமா தர்மனாக சுசீந்திரனின் வஞ்சம் கலந்த நஞ்சுத்தனம் கரெக்டா மேட்ச் ஆகிருக்கு. வில்லன் வேசத்தை கண்டினியூ பண்ணுங்க சுசீந்திரன்.என்ன ஒண்ணு பாரதிராஜா தான் பல சீன்களில் பரிதாபமாக தெரிகிறார்.
நடிப்பு வகையில் நாம் சொல்லவில்லை. அவரது முகத்தோற்றம், உடல் அமைப்பு இதைத் தான் பரிதாபம் என்கிறோம். கடைசி அரைமணி நேரம் சில ட்விஸ்ட்கள் வைத்து நச்சுன்னு க்ளைமாக்ஸ் வைத்து அசத்தல் மார்க் வாங்குகிறார் டைரக்டர். பல சீன்களில் பின்னணி இசையில் நான் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஷியாம் செல்வன் பார்டர் மார்க்கில் தான் பாஸ் பண்ணிருக்கார். ஆனால் ஹீரோயின் ரக் ஷனா, டிஸ்டிங்ஷனில் பாஸாகிட்டார்னு தான் சொல்லணும். அதேபோல் நக்சா சரணுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு. 200 கோடி, 300 கோடி சினிமாவைப் பார்த்து மண்டை சூடாகி யிருந்த நேரத்தில் வந்திருக்கும் மார்கழி திங்கள் கொஞ்சம் குளிர்ச்சியாத்தான் இருக்கு.
–மதுரை மாறன்.