ஒரு வருடமாக இருளில் மூழ்கியிருந்த மேம்பாலத்தை ஒளிர வைத்த எம்.பி. துரை வைகோ !
ஒரு வருடமாக இருளில் மூழ்கியிருந்த மேம்பாலத்தை ஒளிர வைத்த எம்.பி. துரை வைகோ ! – திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணப்பாறை ஒன்றியம், மரவனூரில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலத்தில், மின்விளக்குகள் அமைக்கப்பட்டும் விளக்குகள் எரியவில்லை. அந்தக் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் ஔிர்ந்திட வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு, மரவனூர் ஊர் நாட்டாண்மை கபில்தேவ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 28.06.2024 அன்று கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
இந்த மனு குறித்து உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்குமாறு மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் மணப்பாறை உதவி மின் பொறியாளர் அவர்களிடம் விளக்கம் கோரினார். இதில், இந்த மேம்பாலம் கட்டப்பட்டு ஒரு வருடமாகியும், மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதற்கு ஆணையம் தரப்பில் மின்வாரியத்திற்கு ஆன்லைன் விண்ணப்பம் கோரவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்த விளக்கத்தை 29.06.2024 அன்று டெல்லியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நெடுஞ்சாலை ஆணையத்திற்குக் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் பிரவீன் குமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, இந்தப் பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்துகிறோம். உடனடியாக மின்வாரியத்தில் முறையாக விண்ணப்பித்து, ஒரு மாதத்திற்குள் மின்விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணைய திட்ட இயக்குர் பிரவீன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒரு சில நாட்களில் மணப்பாறை மின்வாரியத்தில் ஆன்லைன் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனையடுத்து, மணப்பாறை மின்கோட்டப் பொறியாளர் தியாகராஜன் அவர்களின் உத்தரவின்படி, மணப்பாறை வடக்கு உதவி செயற்பெறியாளர் பிரபாகரன், உதவி மின் பொறியாளர் தனலெட்சுமி மற்றும் மின்வாரிய அலுவலர்களும் திட்டமதிப்பீடு செய்து பணிகளைத் தொடங்கினார்கள்.
அவ்வப்போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள், இந்தப் பிரச்சனை குறித்து மாவட்டச் செயலாளரிடம் விசாரித்துக் கொண்டே இருப்பார். அண்மையில் திருச்சி வந்த எம்.பி.துரை வைகோ அவர்களிடம் இதே பிரச்சனை குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி வலியுறுத்தினார். நேற்றும், இன்றும் மின்வாரியத்தினர் 25 KV மின்மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களில் உங்கள் ஊரில் மின்விளக்குகள் ஔிரும் என்று எம்.பி. துரை வைகோ அவர்கள் பதிலளித்தார்.
அவர் கூறியவாறே, இன்று 16.07.2024 மாலை மின் விளக்குகள் ஔிர்கின்றன. இதை நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் பிரவீன் குமார் அவர்கள் மின்னொளியில் மரவனூர் மேம்பாலத்தை படத்துடன் எம்.பி.துரை வைகோ அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும், இப்பணிகளில் துரித முயற்சி மேற்கொண்ட நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மணப்பாறை கோட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கோரிக்கை மனு அனுப்பிய மரவனூர் ஊர் நாட்டாண்மை கபில்தேவ் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எம்.பி.துரை வைகோ அவர்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார். ஒரு வருடமாக எரியாத மின் விளக்குகள் எம்.பி.துரை வைகோ அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பிய 16 நாட்களில், மின்கம்பங்களில் விளக்குகள் ஔிர்கிறது என்றால், ஆகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம் என்ற திருப்தி கிடைத்திருப்பதாக மரவனூர் மக்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.
திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக.,
-டெல்டாகாரன்