எம்.ஜி.ஆரின் உண்மையான வயது தெரியுமா ?
எம்.ஜி.ஆரின் உண்மையான வயது தெரியுமா ?
‘மர்மயோகி’ படத்தில் நடிக்கும்போது “இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று அதன் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரம்பிள்ளை எம்.ஜி.ஆரிடமும் அவர் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது, “நாற்பது வயதுக்குமேல்தான் எம்.ஜி.ஆருக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது” என்றார். உடனே எம்.ஜி.ஆர் அவரிடம், “ஏன்யா வயசைப் பற்றி இப்போ பேசுற!’’ என்று அதட்டுகிறார். ‘மர்மயோகி’ 1951-ம் ஆண்டில் வெளிவந்தது. அதன் படப்பிடிப்பு 1950-ம் ஆண்டில் நடந்திருந்தாலும், அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது 40-க்கு மேல். அதாவது 41 என்றுகூட வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தாலும் எம்.ஜி.ஆர் பிறந்தது 1910-ம் ஆண்டுக்கு முன்புதான் இருக்க வேண்டும். ஆக, அவர் பிறந்த வருடம் 1917 என்பது சரியல்ல.
மேலும், ‘அவர் பத்து வருடங்கள் முந்தி கொடுத்திருக்கிறார்’ என்று எதிர் அணியினரின் விமர்சனத்தை மொத்தமாகவும் ஒதுக்கிவிட முடியாது. அவர் பரங்கிமலையில் தேர்தலைச் சந்தித்தபோது, அவர் தன் பிறந்த தேதியை வேட்பாளர் மனுவில் குறிப்பிடவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அப்போதுதான் இந்த 1917 விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. நம்முடைய தேடல், அவர் எப்போது பிறந்தார் என்பதல்ல. அவர் சினிமாவில் வலுவாகக் காலூன்றியபோது அவருக்கு வயது 44-க்குமேல் இருக்கலாம்.
ஏனென்றால், ‘மர்மயோகி’ வெற்றிபெற்ற பிறகும்கூட 1952, 1953-ம் ஆண்டில் வெளிவந்த படங்களைக் காட்டிலும் 1954-ம் ஆண்டில் ‘மலைக்கள்ளன்’ வெளியான பிறகுதான் அவருக்கு தொடர் வெற்றிகள் குவிந்தன.
தமிழுக்கு ‘வெள்ளித் தாமரை’ விருது வாங்கித் தந்த படமும், தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளிவந்து வெற்றிவாகை சூடியதுமான ‘மலைக்கள்ளன்’தான். எம்.ஜி.ஆர்., தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக, வெற்றி நாயகனாக மாறிய போது எதிர்ப்பும் அதன் கூடவே வந்தது. ஆரம்பம் முதல் அவரை ‘கிழவன்’ என்றே பலரும் விமர்சித்தனர். தங்கள் பேச்சில் எம்.ஜி.ஆரைக் `கிழவன்’ என்றே குறிப்பிட்டனர்.
வசனமும் நடிப்பும் இளமையும் திரைத் துறைக்கு முக்கியம் எனக் கருதியவர்கள், காதல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மட்டுமே எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதி, அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘நேற்று இன்று நாளை’ படம் எடுத்த அசோகன்கூட, ‘கிழவன் ரொம்ப இழுத்தடிக்கிறான்’ என்று சொன்னது, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டிவிட்டது. ஆக, திரையுலகில் வெற்றிபெற்ற நாள் முதல் எம்.ஜி.ஆர், ‘கிழவன்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானார்.
எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார். அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார்.
அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார்.
அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவர் கிட்டத்தட்ட எழுபது வயதை எட்டியிருந்தார்.
-`ஹரிகிருஷ்ணன்