காவு வாங்கும் நடிகர் கட்சி…
இன்னொரு உயிரை காவு வாங்கி இருக்கிறது நடிகர் விஜய் கட்சி….
தஞ்சாவூரில் மார்ச் 4-ஆம் தேதி விஜயை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் விக்னேஷ், 19 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்காக போராடி தோற்றுப் போனதில் தனது மூச்சை நிறுத்தி கொண்டார். அரசியல் களம் என்ற பெயரில் சினிமா போதையில் தடுமாறிய இந்த இளம் தளிர், தனது இன்னுயிரை இழந்து இருக்கிறது. குடும்பத்தை தவிக்க விட்டிருக்கிறது
ஆம்! நேற்று விக்னேஷ் மரணம் அடைந்தார்.
தஞ்சாவூரில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூரை அடைந்தார்.
கடந்த கால கசப்பான சம்பவங்களை அறவே மறந்துவிட்டு விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பலரும் போட்டி போட்டபடி கண்மூடித்தனமாக இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்தனர். இதில் திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஓட்டிச் சென்ற பைக், பின்னால் வந்தவர்கள் மோதியதில் முன்னால் சென்ற கார் மீது மோதியது.
இதில் விக்னேஷும், பைக்கில் அவருடன் வந்த அவரது நண்பர் அருணும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத்தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார்.
இந்நிலையில், 19 நாள் போராட்டத்திற்கு பிறகும் மருத்துவர்களின் முயற்சிகள் அனைத்தும் பலனின்றி விக்னேஷ் நேற்று உயிரிழந்தார்.
ஏற்கனவே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டும் தனது முரட்டு ரசிகரான விக்னேஷ், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து போது தவெக தலைவர் விஜய் எட்டிக் கூட பார்க்கவில்லை. அதுவும் கூட பரவாயில்லை. சம்பவம் நடந்த அடுத்த நாளே எவ்வித சலனமும் இன்றி திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இயக்குநர் அட்லியின் மனைவி வளைகாப்புக்காக ரசிகர்களின் நாயகன் மும்பைக்கு போனார்.
ஆனால், தனது தஞ்சாவூர் வருகையை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்த விக்னேஷ், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியதை அந்த கதாநாயகன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்கள் நண்பனை பார்க்க விஜய் வரவில்லையே என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். இயக்கத்துக்காக உயிர் விட்டவனுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனம் இல்லாதவரா? தங்கள் தலைவர் என கொதித்துப் போய் இருக்கிறார்கள். மருத்துவமனைக்கே வந்து பார்க்க மனம் இல்லாதவர் மரணச் செய்தி கேட்டு வந்து விடப் போகிறாரா என்ன? மரத்துப் போனவர்களுக்கு- மக்களை மறந்து போனவர்களுக்கு அரசியல் களம் ஒரு கேடா.. இப்படி ஒரு அரசியல் பிழைப்பு எங்களுக்கு அவசியம் இல்லை போடா என்ற உள்ளக்குமுறலோடு நண்பனுக்காக ஒரு இளைஞர் பட்டாளம் அழுது கொண்டிருக்கிறது… தடம் மாறிப்போக நினைத்தோமே என்பதையும் உணர்ந்து.
-டாக்டர்.எஸ் இனிகோ இருதயராஜ்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.