டோபமின் என்ற நொதி குறைய காரணங்கள்
3000 வருடங்கள் வாழ்ந்த திருமூலர் மற்றும் 500 வருடங்கள் தாண்டி வாழ்ந்த சித்தர்களைக் கொண்ட புண்ணிய பூமி நமது தமிழகம். இவர்கள் ஆரோக்கியத்திற்கான வழிகளை, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னாலேயே, சர்வசாதாரணமாக சொல்லி சென்றுள்ளனர்.
பாரதிய கலாச்சாரம் அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்த ஒரு உன்னத கலாச்சாரம். ஆனால் நாம் இன்று அந்நிய கலாச்சாரத்தில் மூழ்கி, அவர்களை விட ஒரு படி மேல்சென்று, நமது கலாச்சாரத்தை மறந்துவிட்டதனாலேயே, இன்று பலவித நோய்களினால் நாம் அல்லல் படுகிறோம். நாம் நம் உடலையும், மனதையும் அக்கறையுடன் கவனிப்பதில்லை. அவற்றிற்கு ஏதேனும் சிக்கல்கள் வரும்போது தான் நாம் அவற்றைப் பற்றி சிந்திக்கிறோம்.
எனவே நமது உடல் மீதும், உடல் உறுப்புகள் மீதும் கவனம் கொள்வோம். நமக்கு ஏற்படும் வியாதிகள் பற்றியும், அதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், தெளிவாக தெரிந்து கொள்வோம். நோயின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ, என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
நடுக்குவாத நோய் பற்றி தெரிந்து கொள்வோம், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம் வாருங்கள். எப்படி வாகனங்கள் இயங்குவதற்கு பெட்ரோல் வேண்டுமோ, அதேப்போல் நமது மூளை இயங்குவதற்கு நொதிகள் வேண்டும். நமது மூளையில் டோபமின், அசிடைல்கோலின், செரடோனின் மற்றும் இன்னும் பல நொதிகள் உள்ளன.
இந்த நொதிகளின் செயல்பாட்டினால் தான், நமது மூளை சரியாக இயங்குகிறது. அதனால்தான் நாமும் நன்முறையில் நடக்கிறோம், நமது வேலைகளை சரிவர செய்கிறோம். நொதிகளின் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ மூளை நரம்பியல் வியாதி வருகிறது. அவ்வாறு வரும் நோய்களில் ஒன்று தான் நடுக்குவாத நோய். இந்த நோய் டோபமின் என்ற நொதி குறைவதாலோ அல்லது அசிடைல்கோலின் என்னும் நொதி அதிகரிப்பதாலோ வரும் நோயாகும்.
நடுக்குவாத நோய் பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறு, ஆண்களுக்கு 2%, பெண்களுக்கு 1.3% ஆகும். 60 வயதை தாண்டும்போது நடுக்குவாத நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. மூளையின் சில வகையான புரதப்பொருட்கள் சேருவதாலும், நச்சுப்பொருட்கள் சேருவதாலும் டோப்பமின் என்ற நொதியின் செயல் திறன் குறைந்து, நடுக்குவாத நோய் வருகிறது.
பார்கின்ஸன்’ஸ் என்ற நடுக்குவாத நோய் என்றால் என்ன? காரணிகள் என்ன? அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? பார்கின்ஸன்’ஸ் நோயாளிகள் கவனிக்க வேண்டியவைகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
டோபமின் என்ற நொதி குறைவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உண்டு. மூளையில் உள்ள நியூரான்கள் சுருங்குவதால் இந்த நொதி சரிவர சுரப்பதில்லை. இதற்கான காரணிகளைக் காண்போம்…
1. மரபியல் கோளாறு.
2. சுற்றுப்புற சூழலில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலில் சேருவது – உதாரணத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்.
3. இரத்தக் குழாய்களில் அடைப்பு – பக்கவாத நோய்.
4. தலையில் அடிபடுதல்.
5. டோபமினை குறைக்கும் மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வது.
6. மூளைக்காய்ச்சலுக்கு பிறகு வரும் பாதிப்பு.
இப்படி பலதரப்பட்ட காரணிகள் இருந்தாலும், மரபணுக் கோளாறினால் வரும் பார்கின்ஸன்’ஸ் நோய் அதிகமாக உள்ளது.
இதை எப்படி கண்டறிவது அதாவது நடுக்குவாத நோயின் அறிகுறிகள் என்ன என்று அடுத்த வாரம் பார்ப்போம்.