வழக்கமாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, தனியார் தேர்தல் கருத்து கணிப்புகளில் பாதியாவது தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போகும். ஆனால், இந்த முறை கருத்துக்கணிப்பாளர்களே விழி பிதுங்கிப்போய்க் கிடக்கிறார்கள். களம் அந்த அளவுக்குக் குழப்பமான சிக்னல் கொடுத்திருக்கிறது என்பது நன்றாகவே புரிகிறது. காரணம் ஒரு மிகப்பெரிய ஸோம்பிகளின் கூட்டம்.
எம்.ஜி.ஆர். மறைவை ஒட்டி நடந்த தேர்தலின்போது, நான் பள்ளி மாணவன். அப்போதிருந்து அரசியலைக் கவனித்து வருகிறேன். எழுத ஆரம்பித்தபோது தேர்தல் அரசியலைத் தொடர்ந்து எழுதியிருக்கிறேன்.
ஆனால், இந்த முறை “போங்கடா நீங்களும் உங்க அரசியலும்” என்று என்னை, அரசியல் செய்திகளைப் பார்த்தாலே தலைதெறிக்க ஓட வைத்திருக்கிறது இந்த ஸோம்பிக் கூட்டம்.
அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரே ஒரு ஓப்பன் ப்ரஸ் மீட் கொடுத்து, தமிழ்நாட்டின் இன்றைய, வருங்காலப் பிரச்சனைகளைப் பற்றிய நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் போதும், அன்னாரது ஒரிஜினல் முகம் வெளியாகி சந்தி சிரித்துவிடும் என்பது என்னுடைய புரிதல். ஆனால், அது நடக்காது. பதினைந்து வருடங்களாக உலகின் மிகப்பெரிய ஸோம்பிகளுள் ஒன்று இப்படி பப்ளிக்கில் பேட்டி கொடுக்காமலேயே தப்பித்து டகால்டி காட்டி வருவது நமக்குத் தெரிந்த ஒரு பெரிய உதாரணம்.
என் மகனிடம் நான், “இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை… தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்திரும்” என்றேன்.
அவன் “அப்பா, அது பரவால்ல, அதே நேரம் நிறைய பேர் சொல்ற மாதிரி திமுகவே திரும்பவும் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்திருச்சுன்னு வச்சுக்கோங்க…. எங்க ஏஜ் க்ரூப்ல பாதி பேரு ‘என்னது எங்க அண்ணன் தோத்துட்டாரா? தீய சக்தி திமுக ஜெயிச்சிருச்சா’ன்னு வீட்டுக்குள்ள அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி சூசைட் பண்ணிக்குவாய்ங்களோன்னு எனக்கு பயமாயிருக்கு, எனக்கே அந்த மாதிரி ரெண்டு, மூணு லூஸுகளத் தெரியும்” என்றான்.
மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது…
– இளங்கோவன் முத்தையா








Comments are closed, but trackbacks and pingbacks are open.