அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாநிலத் தேர்வு முடிவுகள் – விரிவான அலசல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

கடந்த ஏப்ரல் 9ஆம் நாள் கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் – 3 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 23ஆம் நாள் ஓரே கட்டமாகத் தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கு முதல் கட்டமாகவும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் நாளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 4ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 5 மாநிலத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின் விரிவான அலசல் இங்கே தரப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு, எதிர்க்கட்சியாக இருந்து வந்த பாஜக முடிவு கட்டியுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளின் விவரங்கள்:

மொத்த இடங்கள் : 294

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

பாரதிய ஜனதா கட்சி – 207

திர்ணாமூல் காங்கிரஸ் – 80

பாரதியக் கூர்கா மோர்ச்சார் – 3

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1

அகில இந்திய மதச்சார்பற்ற முன்னணி – 1

இந்தியத் தேசியக் காங்கிரஸ் – 2

ஜனதா கட்சி – 2

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி, தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்பதைச் செவ்வாய்க்கிழமையன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் தீர்ப்பு (மக்கள் ஆணை) திருடப்பட்டுவிட்டதாகவும், தனது கட்சி தோல்வியடையவில்லை என்றும் அவர் வாதிடுகிறார். (திருமதி இந்திரா காந்தியின் வாரிசு ஒருவர், திரைமறைவிலிருந்து இந்த ஆட்டத்தை இயக்குகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது).

“நான் தோல்வியடையவில்லை; எனவே நான் ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகைக்குச்) செல்லமாட்டேன். எனது ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பிக்க மாட்டேன்,” என்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது மம்தா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியாகவே போட்டியிட்டன. பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்முறையாக மதவாதச் சிந்தனை கொண்ட பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்பது மேற்கு வங்கத்தில் புதிய வரலாறு.

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரங்கள்:

மொத்தத் தொகுதிகள் – 126

பாரதிய ஜனதா கட்சி  – 82

அஸ்ஸாம் கணபரிஷத் – 10

போடோலாந்து மக்கள் முன்னணி – 10

காங்கிரஸ் – 19

ராய்ஜோர் தக – 2

சுயேட்சைகள் – 3

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்று, அசாம் மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஜிதேந்திர சிங் அல்வார் ராஜினாமா செய்துள்ளார். மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், சிங் இவ்வாறு கூறியுள்ளார்: “அசாம் மாநிலத்திற்கான பொதுச் செயலாளர் பதவியிலிருந்து உடனடியாக எனது ராஜினாமாவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தேர்தல் முடிவுகளை ஒப்புக்கொண்ட அவர், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளன, இந்த முடிவில் எனது பங்கிற்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் சேவை செய்ய விரும்பிய அசாம் மக்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை,” என்று கூறினார்.

கேரளா

கேரளா மாநிலத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடது முன்னணி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மெல்லத் தன் இருப்பைக் கேரளாவில் தெரிவித்து வருகின்றது. கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மேயர் பதவியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் விவரங்கள்:

மொத்த இடங்கள் – 140

ஐக்கிய ஜனநாய முன்னணி – 102

இடது ஜனநாயக முன்னணி – 35

தேசிய ஜனநாயகக் கூட்டணி – 3

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களையும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 102 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், இடது முன்னணி கட்சிகளும் இணைந்துள்ளன என்றாலும் இவை தனித்தனியே போட்டியிட்டன. இரு கட்சிகளைத் தாண்டிப் பாஜக பெரும் வெற்றியைப் பெறமுடியாத சூழ்நிலையே தொடர்கின்றது.

புதுச்சேரி

இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம்தான் புதுச்சேரி. அங்குள்ள 30 தொகுதிகளுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் 23 தொகுதிகளும் காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், கேரளா மாஹே தொகுதியும், ஆந்திராவில் ஏனாம் தொகுதிகளும் உள்ளன. 2021இல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்+ பாஜக கூட்டணி ஆட்சி செய்துவந்தது. 2026இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்+பாஜக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. புதுச்சேரியில் கட்சிகள் பெற்ற வெற்றியின் விவரங்கள்:

மொத்த இடங்கள் – 30

என்.ஆர். காங்கிரஸ் – 12

பாஜக – 4

இலட்சிய ஜனநாயகக் கட்சி – 1

அதிமுக – 1

திமுக – 5

காங்கிரஸ் – 1

தவெக – 2

நேயம் மக்கள் கழகம் – 1

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்+திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன என்றாலும் 5 தொகுதிகளில் கூட்டணியை மீறி அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸ் போட்டியிட்டது. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள விசிக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்டன. இரண்டு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ரெங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதியில் வெற்றிபெற்றார். 21 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. திமுக அதிகாரப்பூர்வக் காங்கிரஸ் வேட்பாளர்களையும் எதிர்கொண்டு 13 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நட்பு ரீதியான போட்டி தவிர்க்கப்பட்டிருந்தால் ஒருவேளை காங்கிரஸ்+திமுக ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். புதுச்சேரியில் 28 தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டன. மேலும் இராமதாசு+சசிகலா கட்சிகள் கூட்டணி அமைத்துச் சுமார் 110 இடங்களில் போட்டியிட்டன. புதிய தமிழகம் கட்சி 72 இடங்களில் போட்டியிட்டது. தமிழகத்தில் நடைபெற்ற 4 முனைப்போட்டியில் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்து வந்த அதிமுக பெரும்பாலான இடங்களை இழந்து அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற தகுதி நிலையை இழந்துள்ளது. 234 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் டெபாசிட் என்னும் கட்டுத்தொகையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றியின் விவரங்கள்:

மொத்தத் தொகுதிகள் – 234

தமிழக வெற்றிக் கழகம் – 108

திமுக – 59

காங்கிரஸ் – 5

தேமுதிக – 1

விசிக – 2

சிபிஎம் – 2

சிபிஐ – 2

முஸ்லிம் லீக் – 2

அதிமுக – 47

பாஜக – 1

பாமக – 4

அமமுக – 1

புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக 108 இடங்களைப் பெற்றுத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்சி ஆளும் கட்சியான திமுக எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குகளைப் பெற்றுத் தவெக குறிப்பிடதக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் கடந்த 2021 தேர்தலில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தற்போதைய தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மேலும் 15 திமுக அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர். 1952 தேர்தலுக்குப்பின் அறுதிப்பெரும்பான்மை பெறாத தொங்கு சட்டமன்றம் தற்போது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.

இறுதியாக, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடது முன்னணி, மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திர்ணாமூல் கட்சியும் ஆட்சியை இழந்துள்ளன. இது ஒருவகையில் மோடிக்கு மனநிம்மதியைத் தரலாம். அஸ்ஸாமிலும் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி தொடர்வதும் பாஜக தேசியத் தலைமைக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கிய ஒரு முழக்கம் ’“கழகங்கள் இல்லாத தமிழ்நாடு” என்பதாகும். அந்த வேலைத்திட்டத்தைப் பாஜக நிறைவேற்ற முடியாமல் இருந்த நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தவெக பாஜகவின் கனவை நிறைவேற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.

—    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.