திருச்சி கலையரங்கம் வளாகம் களைகட்டியிருந்தது. ஆந்திராவிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த குறும்பட குழுவினர் குறும்பட போட்டியின் இறுதி முடிவு அறிவிப்புக்காக தொடக்கம் முதலாகவே பேரார்வத்தோடு காத்திருந்தனர். எட்வின் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன், அங்குசம் மீடியாவின் சினிமா கார்னர் 2025 குறும்பட போட்டி விருது வழங்கும் விழா தொடங்கியது.
கார்த்திகை தீப நாளான டிச-03 அன்று மாலை தொடங்கிய நிகழ்வுக்கு பொருத்தமாக, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சேவை கோவிந்தராஜன், எக்ஸெல் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் எம்.எம்.எம். முருகானந்தம் உழைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, பெரியார் விருதாளர் தி.அன்பழகன் மற்றும் அங்குசம் இதழின் ஆசிரியர் ஜெ.டி.ஆர். ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
அங்குசம் இதழின் பொறுப்பாசிரியரும் அங்குசம் சமூகநல அறக்கட்டளையின் உறுப்பினருமான பேராசிரியர் நெடுஞ்செழியன், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று அவருக்கே உரிய மொழி பாங்குடன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

போதை ஒழிப்பில் பங்கேற்பாளர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் போதை ஒழிப்பு உறுதிமொழி காணொலி காட்சி வாயிலாக திரையிடப்பட விழாவில் பங்கேற்றோர் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கலக்கிய கலைக்காவிரி மாணவர்கள் !
மனமகிழ்வோடும் இலட்சியங்களோடும் வாழ வேண்டிய வாழ்வை போதைக்கு பலி கொடுக்காமல் வாழ வேண்டுமென்பதை, சாமுவேல் மோரிசன், ரிஷி வந்தினி, எட்வின் ஜெயக்குமார், ஆரோன் ஆகியோர் இணைந்து ”கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடலின் வழியே இசையால் உணர்த்தினார்கள். அந்த இசைப்பாடல் அரங்கை சில விநாடிகள் நிசப்தத்தில் ஆழ்த்தியது.
திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி மாணவர்கள் ஸ்ரீகங்கை ஸ்ரீ, ஆயிஷா, கிளாரா ஆகியோரின் பரதமும் மணிகண்டன், நவீன் பிரகாஷ் ஆகியோர் இணைந்து அரங்கேற்றிய பறையும் பரதமும் இணைந்த நாட்டிய நாடகம் கலையின் வீச்சை அந்த அவையறிய செய்தது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் கஸ்தூரி கரங்களால் மீட்டிய வீணை இளையராஜாவின் இசைக்கும், ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கும் இயைந்து ஒலித்த அந்த மெல்லிசை மொத்த அரங்கையும் மெய்சிலிர்க்க வைத்தது.
போதைப் பழக்கத்துக்கு ஆளாகி எதிர்காலத்தை தொலைத்துவிடாதீர்கள் என்று ஒரு தாயாக உருகி, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐ.பி.எஸ். காணொளி வழியே ஆற்றிய விழிப்புணர்வு உரை பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியின் பேராசிரியர் சதீஷ் மற்றும் மாணவர் ஆகாஷ் இணைந்து எழுதி அவர்களே சேர்ந்தும் பாடிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் பார்வையாளர்களையும் சேர்ந்தே முணுமுணுக்க வைத்தது.
போர்க்கலை மட்டுமல்ல; நுண்கலையும் ஓர் பேராயுதம்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மௌன நாடகத்தின் வழியே போதைக்கு எதிரான கலை படைப்பை வழங்கிய கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி மாணவிகள் எழிலரசி, ஸ்ரீதேவி, வைஷாலி, திழுக்ஷய், ஜெய்சீலியா, ஷெர்லின் குழுவினரின் திறமை கண்டு அரங்கமே சற்று அதிர்ந்துதான் போனது.
ஒரு காலத்தில் சாராயமும் புகையிலையும்தான் போதை என்றிருந்த நிலையில், இன்று பல்வேறு வடிவங்களில் போதை எப்படியெல்லாம் சமூகத்தை பாழ்படுத்துகிறது; அவர்களையெல்லாம் மனநோயாளிகள் ஆக்குகிறது; அவர்களை நம்பி வாழும் குடும்ப உறுப்பினர்களை துயரில் ஆழ்த்துகிறது என்பதை ஆத்மா மனநல மருத்துவமனையின் மருத்துவர் ராமகிருஷ்ணன் காணொளி வழியே எடுத்துரைத்தார்.
திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி மாணவர்கள் ஆகாஷ், ராஜா ஜெய் போஸ்கோ, சுஷ்மிதா, லின்சா, தேவி ஆகியோர் இணைந்து பாடிய ரேப் கலந்த விழிப்புணர்வு பாடல் சமூக மாற்றத்துக்கான நவீன கலை படைப்பாக மிளிர்ந்தது.
மண்ணின் மைந்தர்கள் – விழாவின் நாயகர்கள் :
விழாவின் சிறப்பு விருந்தினர்கள் சேவை நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சேவை கே.கோவிந்தராஜன், பிளாக்தண்டர் நிர்வாக இயக்குநர் அடைக்கலராஜ் ஜோசப் லூயிஸ், மாமன் பட இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ், எக்ஸெல் குழுமத்தின் தலைவர் அகில உலக ரோட்டரியின் இயக்குநர்களுள் ஒருவர் ரோட்டோரியன் ட்ரிபிள் எம். முருகானந்தம் ஆகியோர் அங்குசம் சமூக நல அறக்கட்டளை அறங்காவலர்களால் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து, இந்த விழா இவ்வளவு பொருட்செலவில் பிரம்மாண்டமான விழாவாக நடைபெறுவதற்கு அங்குசம் மீடியாவுடன் தோள் கொடுத்து பயணிக்கும் விளம்பரதாரர்களாக மட்டுமின்றி, அங்குசம் மீடியாவின் நலன் விரும்பியாகவும் அங்குசம் குடும்பத்தின் அங்கத்தினர்களுமான கவி பர்னிச்சர் மற்றும் கவி அக்ரோ சர்வீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபாபு; வேர்கள் அறக்கட்டளையின் தலைவர் – திரைப்பட நடிகரும் மேஜிக் கலைஞருமான மறைந்த அலெக்ஸ் அவர்களின் மருமகன் லயன் அடைக்கலராஜா; லிவ்யா ஸ்ரீ கலிங்க.இளவழகன்; நேஷனல் மாடுலர் கிட்சன் நிறுவனத்தின் தலைவர் ஏ.அஹமது இப்ராஹிம்; பிரனவ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜே.ஜான்சன் குமார்; வரம் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் லயன் ரூபன் கோவிந்தராஜ்; ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் சுபா; ஸ்ரீ ரம்யா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விக்னேஷ் ராஜா; டி.என்.45 சிக்னல் ஸ்டுடியோ, ஈவென்ட்ஸ் மற்றும் வெட்டிங் பிளானர் நிறுவனத்தின் இயக்குநர் ஏ.இம்ரான் ரஷீத், டி.என்.45 சிக்னல் ஸ்டுடியோவின் ஏ.நிஜாமுதீன் ஆகியோருக்கு ”மண்ணின் மைந்தர்கள்” என்ற பெருமைமிகு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், தவிர்க்கவியலாத காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாத நிலையில், பிஸ்மி எலக்ட்ராணிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நிஜாம்; அருக்காணி ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் என்.மோகன்; ஜெயம் பில்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஆனந்த்; பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன்; ஜி.வி.என். ரிவர்சைடு ஹாஸ்பிடல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.ஜே. செந்தில்; ஆண்டவர் பிளஸ் வாட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் உள்ளிட்ட அங்குசம் மீடியாவின் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த அன்போடு மண்ணின் மைந்தர்கள் விருது வழங்குவதில் பெருமை கொள்வதாக அறிவித்தார்கள்.
முத்திரை பதித்த ஆளுமைகள் :
அகில உலக ரோட்டரி இயக்குநர்களுள் ஒருவராக உலகை வலம் வரும் தமிழனாக இருந்த போதிலும், அங்குசம் மீடியாவின் அழைப்பை ஏற்று முதல் ஆளாக அரங்கத்திற்குள் நுழைந்ததோடு தனது வீட்டு விக்ஷேசம் போலவே பாவித்து உணர்வுப்பூர்வமான பங்கேற்பை வழங்கிய எம்.எம்.எம். முருகானந்தத்தின் வருகையும், எழுச்சி நிறைந்த அவரது தன்னம்பிக்கை உரையும் தனி முத்திரை பதித்தது.

தள்ளாத வயதிலும் துடிப்பான சேவையாற்றிவரும் சேவை கோவிந்தராஜின் பங்கேற்பும்; திருச்சியின் தன்னிகரில்லா அடையாளமான மறைந்த எம்.பி. எல்.அடைக்கலராஜுவின் புதல்வர், பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் என்பது போன்ற எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், பார்வையாளராக விழாவை ரசித்த பிளாக்தண்டர் நிர்வாக இயக்குநர் அடைக்கலராஜ் ஜோசப் லூயிஸின் பங்கேற்பும் சமூகத்தின் மீதான அவர்களது உள்ளார்ந்த பற்றுதலை பறைசாற்றியது. அங்குசம் சமூக அறக்கட்டளையின் முன்னெடுப்பின் – அன்பின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.

இதனை தொடர்ந்து நோக்க உரை நிகழ்த்திய, அங்குசம் இதழின் முதன்மை செய்தியாளர் வே.தினகரன், ”பொதுவில் வாசிப்பு பழக்கமே அருகிவிட்ட சூழலில், அச்சு இதழ்களை தொடர்ந்து வெளியிடுவதே பெரும்பாடாக மாறிவிட்ட சூழலில், பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் துணிச்சலாக மாதமிருமுறை வெளியான அங்குசம் இதழை வார இதழாக கொண்டுவரும் ஆசிரியர் ஜெ.டி.ஆரின் துணிச்சலின் தொடர்ச்சிதான் அங்குசம் மீடியா கன்னி முயற்சி போதைக்கு எதிரான குறும்பட போட்டி” என்பதை சுட்டிக்காட்டி, ”இது கொண்டாட்டத்திற்கான விழா அல்ல ! காத்திரமான சமூக உரையாடலின் தொடக்கம் !” என்பதாக, இம்முன்னெடுப்பின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
நெகிழ வைத்த இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் :
ஒரேயொரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, எல்லா சேனலிலும் தோன்றி பில்டப் பீட்டர்களை அள்ளிவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில், புருஸ் லீ, ஜாக், மாமன் என அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்கியும் தற்போது வரையில் OTT தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் விலங்கு வெப் சீரிஸை இயக்கி வருபவர் என்பது போன்ற எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், “நானும் உங்களைப் போலவே, குறும்படத்தை இயக்கி அதன் வழியே இயக்குநர் ஆனவன்தான். நான் எடுத்த முதல் குறும்படமும் பல்வேறு குறைபாடுகளுடன்தான் இருந்தது. அதனால, பரிசு வாங்கலையேனு நம்பிக்கை இழக்காதீங்க. தொடர்ந்து முயற்சி செய்ங்க. வெற்றி பெறலாம்.” என இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் உதிர்த்த அந்த எளிமையான வார்த்தைகள் நிறைந்த யதார்த்தமான பேச்சு குறும்பட விழாவில் பங்கேற்ற குழுவினர் அத்துனை பேருக்குமான விருதாகவே அமைந்தது.

விழாவின் இதயப்பகுதியான விருது வழங்கும் தருணம், இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது. குறும்பட விழாவில் பங்கேற்ற குறும்பட குழுவினர் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் நினைவு பரிசாக கேடயமும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
முதலிடத்தை தட்டிச் சென்ற My Daddy is My Hero !
இதனை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 5 குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட குறும்படங்களிலிருந்து, மூன்றாம் இடத்தை Sweet Pioson, இரண்டாம் இடத்தை Happy Birthday ஆகிய குறும்படங்களும் பெற்றிருப்பதாக அறிவித்தவர், ”முதலிடத்தை பிடித்த குறும்படத்தை நான் அறிவிக்க வேண்டியதில்லை, திரையிட்டபோதே பார்வையாளர்களே அதனை அறிவித்துவிட்டார்கள்” என்றபோது மொத்த அரங்கமும் கைதட்டலில் அதிர்ந்தது. அரங்கை பிளந்த கைதட்டல் ஓசையோடு, முதலிடத்தை தட்டிச் சென்ற My Daddy is My Hero குறும்பட குழுவினருக்கு கேடயத்தை வழங்கினார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ்.
முதல் மூன்று இடங்களை பிடித்த குறும்படங்களுக்கான பரிசுத்தொகை மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றுக்கான பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை இயக்குநருடன் இணைந்து பிளாக்தண்டர் நிர்வாக இயக்குநர் அடைக்கலராஜ் ஜோசப் லூயிஸ் வழங்கி சிறப்பித்தார்.
கன்னி முயற்சி கைகூட கரம் கோர்த்தவர்கள் :
நிறைவாக, வெற்றிகரமாக விழா நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து நன்றியுரையாற்றினார், அங்குசம் அறக்கட்டளையின் உறுப்பினர் பாண்டியன்.
மிக முக்கியமாக, இயக்குநர் பார்த்திபன் உடன் உதவி இயக்குநராக சினிமாவில் பயணித்த அனுபவத்தை பெற்றவரும் அந்த அனுபவத்தின் வழியே விழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திக்காட்டியவருமான இயக்குநரும் அங்குசம் அறக்கட்டளையின் உறுப்பினருமான சிக்கந்தர் ஜாஹிர் ஹூசைனின் பங்களிப்பையும்; விழாவின் தொடக்க திட்டமிடல் தொடங்கி இறுதி வரை பயணித்த களப்பணியாளர்கள் அங்குசம் மீடியாவின் தினேஷ், சஞ்சய், சூர்யா ஆகியோரின் அர்ப்பணிப்பு நிறைந்த பங்களிப்பையும் சுட்டிக்காட்டி பாராட்டியதோடு, அவர்களுடன் இணைந்து பங்களித்த அங்குசம் குடும்பத்தை சேர்ந்த மேனகா, தமிழிவிமலா, சந்தியா உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.
அரங்கம் நிறைந்த விழாவாக, பங்கேற்பாளர்களின் மனம்நிறைந்த விழாவாக அவர்களின் வயிறும் நிறைய இன்சுவை இரவு உணவு உபசரிப்போடு விழா நிறைவு பெற்றது.
மொத்த நிகழ்வுகளையும் தனக்கேயுரிய ஆளுமையோடும் தேர்ந்த மொழிப்புலமையோடும், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிகழ்வை சோர்வு தட்டாமல், சிம்பொனி இசை போல தொகுத்து வழங்கிய ரேவதி ஜெ.டி.ஆரின் ஒருங்கிணைப்பு விழாவின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.
அங்குசம் சினிமா கார்னர் 2025 குறும்பட போட்டி விருது வழங்கும் விழா கொண்டாட்டத்திற்கான விழா அல்ல ! தமிழகத்தின் சாபக்கேடாக மாறிவிட்ட போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக, காத்திரமான சமூக உரையாடலின் தொடக்கம் !
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.